Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 454)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

தான் நசிக்கிறது மூன்றபசாரத்திலும் அந்வயிக்கையாலே; பிறர் நசிக்கிறது தன்னை யநாதரித்தும் தன் அனுஷ்டானத்தை யங்கீகரித்தும்.

– உபயவிநாசமு மித்தாலே வருகிறபடி யெங்ஙனேயென்ன அருளிச் செய்கிறார் (தான் நசிக்கிறது) என்று தொடங்கி.

இதன் மூலம் இருவருக்கும் அழிவு ஏற்படுவது எப்படி என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஆசார்யாபிமாநத்திலே யொதுங்கி பகவத் பாகவதாசார்ய விஷயங்கள் மூன்றுக்கு மபிமத விஷயமா யிருக்கிற தான் நசிக்கிறது, அம்மூவர்க்கு மிது அநிஷ்டமாகையாலும், அபசாரமாவது, அநிஷ்டகரணமாகையாலும், அதிக்ரூரமான அபசார த்ரயத்திலு மந்வயிக்கையாலே; பிறர் நசிக்கிறது, சரமபர்வபர்யந்தமாக வந்து நிற்கிற பாகவதோத்தமனான தன்னை நிஷித்தாநுஷ்டாநம் பண்ணினவனென்று அநாதரித்தும், தத்வவித்தான இவனிப்படி செய்கிறான் இதில் தோஷமில்லையாகப் பட்டன்றோ! நமக்குப் பின்னையென்! என்று தன்னுடைய அநுஷ்டாநத்தைத் தாங்க ளங்கீகரித்து மென்கை. அநாதரிப்பார் பாகவத வைபவமறியாதவர்கள், அநுஷ்டாநத்தை யங்கீகரிப்பார் ப்ராப்தாப்ராப்த விவேகசூந்யரானவர்கள். அநுஷ்டாநத்தை அங்கீகரிக்கிறவர்கள் நசிக்கிறார்கள், அநாதரிக்கிறவர்கள் நசிப்பானென், தோஷங்கண்டா லநாதரிக்கலாகாதோ வென்னில்; ராஜபுத்ரனுக்கு தோஷமுண்டானால் ராஜாதான் சிக்ஷித்துக்கொள்ளுமதொழிய அவனை அநாதரித்தவர்கள் மேலே நிக்ரஹம் பண்ணி தண்டிக்குமாப்போலே, ஸ்வாபிமதனான இவனுக்கு தோஷமுண்டானாலும் ஸர்வேச்வரன்றானே திருத்திக் கொள்ளுமதொழிய பிறரநாதரிக்கப் பொறாமையாலே அநாதரித்தவர்களுக்கு விநாசமே பலிக்கையாலே அநாதரிக்கலாகாது. “அபிசேத் ஸுதுராசாரோ பஜதேமா மநந்யபாக், ஸாதுரேவ ஸமந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஹிதோ ஹி ஸ:” என்று உபாஸக விஷயமாக அருளிச்செய்தபடி கண்டால், எல்லை நிலத்திலே வந்து நின்ற இவ்வதிகாரி விஷயத்திலவனிருக்கும்படி சொல்ல வேண்டாவிறே; ஆகையால், இப்படி தானும் பிறரும் ரசிக்கும்படி இருக்கையாலே இவனுக்கு நிஷித்தாநுஷ்டாநம் பரித்யாஜ்யமென்ற தாய்த்து.

– ஆசார்ய அபிமானம் என்ற நிலையில் நின்று, ஸர்வேச்வரன் - அவன் அடியார்கள் – ஆசார்யன் ஆகிய முன்று பேருக்கும் விரும்பத்தக்கவனாக உள்ளவன் கெடுவது என்பது அந்த மூவருக்கும் இது விருப்பம் இல்லாத செயல் என்பதாலும், அபசாரம் என்பது விருப்பம் இல்லாதவற்றைச் செய்வதாலும், மிகவும் கொடியதான மூன்று அபசாரங்களிலும் சேருகையாலும் ஆகும் (இங்கு மூன்று அபசாரம் = பகவத் பாகவத, ஆசார்ய அபசாரங்கள்). இதனால் மற்றவர்கள் அழிவது எப்படி? கடைசி நிலையில் வந்து நிற்கும் பாகவதர்களில் சிறந்தவனான தன்னை, “சாஸ்த்ரங்கள் தள்ளியதைச் செய்பவன்” என்று வெறுப்பதாலும், “தத்வஞானம் நிறைந்த இவனே இவ்விதம் செய்கிறான், இவன் இவ்விதம் செய்வது குற்றம் இல்லை என்று இவன் அறிந்ததால் அல்லவோ? ஆக நமக்கும் ஏதும் தீமை நேராது”, என்று எண்ணியவர்களாக இவனுடைய தாழ்ந்த செயல்களை ஏற்று அவர்களும் செய்வதால் ஆகும். அநாதரிப்பவர்கள் என்பவர் பாகவதர்களுடைய பெருமையை அறியாதவர்கள்; “செய்யத்தக்கது, செய்யதகாதது” குறித்து ஏதும் அறியாதவர்கள் ஆவர். இவர்களுடைய ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களும் அழிகிறார்கள். இங்கு ஒரு கேள்வி எழலாம் - “அநாதரிப்பவர்கள் ஏன் அழியவேண்டும்? குற்றங்கள் உள்ளது கண்டால் அநாதரித்து ஒதுங்கலாம் அல்லவோ?”, என்று கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிறார். ஒரு அரசபுத்ரன் குற்றம் செய்தால் அரசன் அவனைத் தண்டிக்கலாம், ஆனால் அந்த ராஜகுமாரனைத் மற்றவர்கள் தவறாகப் பேசினால் அவர்கள் அரசனுடைய கோபத்துக்கு ஆளாவார்கள் அல்லவோ? இதே போன்று, தான் விரும்பிய இவனிடம் குற்றம் ஏற்பட்டால், ஸர்வேச்வரன் அவனைத் தானே ஒதுக்க முயல்வான் அல்லாமல் மற்றவர்கள் அவனை ஒதுக்குவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான் என்பதால் அவனை ஒதுக்குபவர்களுக்கு நாசமே உண்டாகும்; ஆகவே பாகவதனான அவனை ஒதுக்குதல் கூடாது. ஸ்ரீமத் பகவத்கீதையில் (9-30) – அபிசேத் ஸுதுராசாரோ பஜதேமா மநந்யபாக், ஸாதுரேவ ஸமந்தவ்யஸ் ஸம்யக் வ்யவஹிதோ ஹி ஸ: – மிகவும் தாழ்ந்த நடத்தை கொண்டவன் என்றாலும், மற்ற எதனையும் விருப்பாமல் என் பக்தனாக நின்று என்னை மட்டுமே வணங்கி நின்றால், அவன் நல்லவன் என்றே கருதப்படுகிறான்; காரணம் இவன் சிறந்த ஒழுக்கம் உள்ளவன் - என்றது காண்க. இவ்விதம் பக்தியுடன் உள்ளவர்கள் குறித்து ஸர்வேச்வரன் கொண்டுள்ள நிலைப்பாடை ஆராய்ந்தால், பக்தியின் எல்லையில் நிற்கும் இந்த அதிகாரியின் விஷயத்தில் அவனுடைய நிலைப்பாடு குறித்து உரைக்கவேண்டாம் அல்லவோ? ஆகவே இவ்விதமாகத் தானும் மற்றவர்களும் அழிவதற்கு காரணமாக உள்ளதால் சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்டதைச் செய்யாமல் கைவிட வேண்டும் என்று கருத்து.