Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 452)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டும் அல்லாதார்க்கு உபாயாங்கமாயிருக்கும், இவனுக்கு உபேயாங்கமாயிருக்கும்.
இவ்வதிகாரிக் குண்டாகவேண்டும் ப்ரதிபத்த்யநுஷ்டாநங்களைப் பல படியாலு மருளிச்செய்தார் கீழ்; இந்த ப்ரஸங்கத்திலே அந்யோபாய நிஷ்டருடைய ஜ்ஞாநாநுஷ்டாநங்களுக்கும் இவனுடைய ஜ்ஞாநாநுஷ்டாநங்களுக்கு முண்டான விநியோக விசேஷத்தை யருளிச்செய்கிறார் மேல் (ஜ்ஞாநாநுஷ்டாநங்க ளிரண்டுக்கும்) என்று தொடங்கி. இப்படி ஜ்ஞாநாநுஷ்டாநங்களிரண்டும் ஆசார்ய ப்ரீதி ஹேதுவாக நினைத்துக் குறிகொண்டு வர்த்திக்கு மிவ்வதிகாரிக்கு அவச்யம் நிவர்த்தநீயங்களை யருளிச்செய்வதாகத் திருவுள்ளம் பற்றி, ப்ரதமம் நிஷித்தாநுஷ்டாநம் த்யாஜ்ய மென்னுமத்தை அருளிச்செய்கிறார் (இவனுக்கு நிஷித்தாநுஷ்டாநம்) என்று தொடங்கி.
ஆசார்ய அபிமானம் என்பதில் ஆழ்ந்துள்ள அதிகாரிக்கு இருக்க வேண்டியதான எண்ணங்கள் மற்றும் ஒழுக்கங்கள் ஆகியவற்றை இதுவரை அருளிச் செய்தார். இனி பக்தி முதலானவற்றைத் தங்களுடைய உபாயமாகக் கொண்டு, அவற்றில் நிலைநிற்பவர்களுடைய அறிவு மற்றும் ஒழுக்கங்களுக்கும், ஆசார்ய அபிமானத்தில் நிலைநிற்பவனுடைய அறிவு மற்றும் ஒழுக்கங்களுக்கும் இடையே உள்ள வேற்பாடுகளை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார். இவ்விதமாகத் தன்னுடைய ஞானம் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டும் தனது ஆசார்யனுக்கு மகிழ்வை அளிக்கும் என்று எண்ணியபடி வாழ்கின்ற இந்த அதிகாரிக்கு அவசியமாக விலக்கத்தக்கவைகள் எவை என்று கூறத் திருவுள்ளம் பற்றினார். இதனால் முதலில் சாஸ்த்ரங்களில் விலக்கப்பட்டவற்றைத் தள்ளுதல் அவசியமானது என்று கூறுகிறார்.
– அதாவது, தத்வஜ்ஞாநமும் ததநுரூபமான வநுஷ்டாநமும் ஆசார்யாபிமான நிஷ்டனான விவனை யொழிந்த வதிகாரிகளுக்கு, உபாய மதிகாரி ஸாபேக்ஷமாகையாலே உபேயப்ராப்தியளவும் உபாயாதிகாரம் நழுவாமல் நடக்கைக் குறுப்பாய்க் கொண்டு அவ்வழியாலே யுபாய சேஷமா யிருக்கும்; ஆசார்யாபிமாநமே யுத்தாரக மாகையா லுபாயாதிகார சேஷமாக வேண்டுவதொன்றில்லாமையாலே, இவ்வதிகாரிக் குண்டான ஜ்ஞாநாநுஷ்டாநங்க ளிரண்டும் ஆசார்யன் முகமலர்த்தியாகிற வுபேயத்துக்கு சேஷமாயிருக்கு மென்கை. (இவனுக் குபேயமாயிருக்கும்) என்று பாடமான போது, ஆசார்யனுக் கபிமதமாய்க் கொண்டு இவைதா னிவனுக்கு உபேயமாயிருக்கு மென்றபடி.
ஆசார்ய அபிமானம் என்பதில் ஊன்றியுள்ள இவனைத் தவிர மற்றுள்ள அதிகாரிகளுக்கு, உபாயம் என்பது அந்தந்த அதிகாரியை மட்டுமே நம்பியுள்ளதால், அவர்களுடைய அறிவு மற்றும் அதற்கேற்ற ஒழுக்கம் ஆகியவை, பலனை அடையும்வரை நழுவாமல் இருக்கவேண்டும் என்பதால், அதன் காரணமாகவே உபாயத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால், ஆசார்ய அபிமானத்தில் நிலைநிற்கும் அதிகாரிக்கு அந்த அபிமானமே கைதூக்கிவிடுவதால், உபாயத்தில் நிலைநிற்க வேறு ஏதும் அவசியம் இல்லை; ஆகவே இந்த அதிகாரிக்கு ஏற்படும் அறிவு மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டும் ஆசார்யனின் முகமலர்ச்சி என்பதான அடையத்தக்க விஷயத்தை அடைய உதவியாக இருக்கும் என்று கருத்து. இந்தச் சூர்ணையின் இறுதியில் உள்ள “உபேய அங்கமாய் இருக்கும்” என்பதை “உபேயமாய் இருக்கும்” என்றும் சிலர் கொள்வர். இவ்விதம் கொண்டால், இந்த அதிகாரியின் அறிவு மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டும் ஆசார்யன் விரும்புவதாக இருந்தபடி பலன் அளிக்கும் என்று கருத்து.