Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 451)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
இவனுக்கு ப்ரதிகூலர் ஸ்வதந்த்ரரும் தேவதாந்தர பரரும்; அநுகூலர் ஆசார்ய பரதந்த்ரர்; உபேக்ஷணீயர் ஈச்வர பரதந்த்ரர்.
ஏவம்பூதனான விவ்வதிகாரிக்கு ஸ்வரூபநாசகத்வ ஸ்வரூப வர்த்தகத்வ ததுபய ரஹிதத்வங்களால் ப்ரதிகூலராயும் அநுகூலராயும் அநுபயராயு மிருக்குமவர்களை தர்சிப்பிக்கிறார் மேல் (இவனுக்கு ப்ரதிகூலம்) என்று தொடங்கி.
இப்படியாக உள்ள இந்த அதிகாரிக்கு, ஸ்வரூபத்தை அழிக்கவல்ல விரோதியாக உள்ளவர், ஸ்வரூபத்தை வளர்க்க வல்லவர், இப்படியாக இல்லாதவர் என்ற காரணங்களால் விரோதி, நண்பர், நடுநிலைமையுடன் உள்ளவர் என்ற தன்மை கொண்டவர்களை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, இப்படி ஆசார்யாபிமாந நிஷ்டனாய் பரத்வாதி பஞ்சகத்திலுள்ள ப்ராவண்யமடைய விவ்விஷயத்திலே ஒருமடை படுத்தி, “தேவு மற்றறியேன்” என்றிருக்கு மிவ்வதிகாரிக்கு, அணுகி லாத்ம நாசத்தைப் பிறப்பிக்கும் ப்ரதிகூலர், ஆத்மாபஹாரிகளான ஸ்வதந்த்ரரும்; பாரதந்தர்யத்துக் கிசைந்து வைத்தே பகவத் வ்யதிரிக்த தேவதைகளுக்கு பரதந்த்ரரா யிருக்குமவர்களும்; ஸ்வஸம்ஸர்க்கத்தாலே ஸ்வரூபத்தை வளர்க்கு மநுகூலர், ஸ்வரூபத்தை யுள்ளபடி யுணர்ந்து தச்சரமாவதி நிஷ்டரான ஸதாசார்ய பரதந்த்ரர்; இப்படி ஸ்வரூப நாசகரும் ஸ்வரூப வர்த்தகருமல்லாமையாலே வெருவுதலுக்கும் விருப்பத்துக்கும் விஷயமல்லாத உபேஷணீயர், சரமபர்வமான வாசார்ய பாரதந்த்ர்யத்தி லூற்றமன்றியிலே ப்ரதம பர்வமான ஈச்வர பாரதந்த்ர்யத்திலே யூன்றியிருக்குமவர்களென்றபடி. ப்ரதிகூலரைச் சொல்லுகிறவிடத்தில் ஸ்வதந்த்ர தேவதாந்தர பரதந்த்ர ரிருவரையுஞ் சொன்னவிது, ப்ரபத்தி ப்ரகரணத்திற் சொன்ன மற்றுள்ள பரதிகூலர்க்கு முபலக்ஷணம். ப்ரதமபர்வ நிஷ்டனுக்கு ப்ரதிகூலமானவர்கள் இவனுக்கு ப்ரதிகூலால்லாமை யில்லையிறே. இத்தால், கீழ் பகவத் ப்ரபந்நாதிகாரிக்கு ஸஹவாஸ தந்நிவ்ருத்திகளுக் குறுப்பாக வநுகூல ப்ரதிகூல தர்சநம் பண்ணுவித்தாப்போலே, ஆசார்யாபிமாந நிஷ்டனான விவனுக்கும் ஸஹவாஸ நிவ்ருத்தி விஷயமான ப்ரதிகூலரையும் ஸஹவாஸ விஷயமான வநுகூலரையும் தர்சிப்பித்து தததிகமாக உபேக்ஷணீய விஷயமு மிவனுக்கொன் றுண்டென்னுமிடம் தர்சிப்பித்தா ராய்த்து.
இவ்விதமாக ஆசார்ய அபிமானத்தில் நிலையாக உள்ளவனும், பரம் வ்யூஹம் விபவம் அர்ச்சை அந்தர்யாமி என்றபடி உள்ள ஸர்வேச்வரனுடைய ஐந்து நிலைகள் மீது காண்பிக்கும் அன்பு முழுவதையும் ஆசார்யனிடம் காண்பிப்பவனும், கண்ணிநுண் சிறுத்தாம்பு (2) – தேவு மற்றறியேன் - என்பதற்கு ஏற்ப உள்ளவனும் ஆகிய இந்த அதிகாரிக்கு, “அவர்களை அடுத்துச் சென்றால் ஆத்மாவிற்குத் தீமை ஏற்படுத்தும் விரோதிகள்” என்றுள்ளவர்கள் யார் என்றால் - ஆத்மா என்பது தங்களுக்கே உரியது என்று எண்ணும் ஸ்வதந்த்ரர்கள் மற்றும் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமைப்பட்டவர்கள் என்று அறிந்துள்ளபோதிலும் அவனைத் தவிர மற்ற தேவதைகளுக்கு அடிமைப்பட்டவர்களும் ஆவர். அந்த அதிகாரிக்கு, “அவர்கள் தொடர்பால் ஆத்மஸ்வரூபத்தை நன்கு வளர்க்கும் நன்மை செய்பவர்கள்” என்றுள்ளவர்கள் யார் என்றால் - ஆத்மஸ்வரூபத்தை நன்றாக உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டு அதன் எல்லையிலேயே நிற்பவர்களான நல்ல ஆசார்யர்களுக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பவர்கள் ஆவர். இப்படியாக ஆத்மஸ்வரூபத்தை அழிப்பவர்களாயும், ஆத்மஸ்வரூபத்தை வளர்ப்பவர்களாயும் அல்லாமையால், ஏற்றுக் கொள்ளுவதற்கும் தள்ளுவதற்கும் கூடாதவர்களான நடுநிலைமையாளர்கள் யார் என்றால் - எல்லைநிலமான ஆசார்யனிடம் அடிமைப்பட்டிருத்தலில் விருப்பம் இல்லாமல், ஸர்வேச்ரனிடம் மட்டுமே அடிமைப்பட்டிருத்தலை விரும்பியபடி உள்ளவர்கள் ஆவர். விரோதிகள் என்று கூறும்போது ஸ்வதந்த்ரர் மற்றும் மற்ற தெய்வங்களிடம் அடிமைப்பட்டிருத்தல் என்று இருவரையும் கூறுதல் என்பது, சூர்ணை263ல் கூறப்பட்ட அனைவருக்கும் பொருந்தும் என்று கருத்து. அதாவது, முதல் நிலையான ஸர்வேச்வரனிடம் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உள்ளவனுக்கு விரோதியாக உள்ள ஒருவன், எல்லையான ஆசார்யனிடம் அடிமைப்பட்டு இருப்பவனிடம் விரோதியாக இல்லாமல் இருக்கமுடியாது அல்லவோ? ஆகவே ஸர்வேச்வரனை அண்டி நிற்கும் ப்ரபந்ந அதிகாரி ஒருவன் பழகுவதற்கும், பழகாமல் விலகுவதற்கும் காரணமாக நன்மை செய்பவர்கள் மற்றும் விரோதிகள் ஆகியோரை முன்புள்ள சூர்ணையில் கூறியது போன்று, ஆசார்ய அபிமானத்தில் ஆழ்ந்து நிற்கும் அதிகாரி ஒருவன் பழகாமல் விலகி நிற்கவேண்டியதான விரோதிகள் மற்றும் சேர்ந்து பழகுவதற்கு ஏற்ற நன்மை செய்பவர்கள் ஆகியோரை இங்கு உணர்த்திய பின்னர், அங்கு கூறப்படாதவர்களாகிய நடுநிலையானவர்கள் என்பவரையும் இங்கு கூறினார்.