Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 450)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
பாட்டுக்கேட்குமிடமும், கூப்பிடுகேட்குமிடமும், குதித்தவிடமும், வளைத்தவிடமும், ஊட்டுமிடமும் எல்லாம் வகுத்தவிடமே யென்றிருக்கக் கடவன்.
– இப்படி ஸுலபமான வாசார்ய விஷயம் ஸ்வ ரக்ஷணத்துக் குடலாயிருக்க இத்தை யுபேக்ஷித்து துர்லபமான பரத்வாதிகளை வாஞ்சிக்கக் கடவனல்லனே யாகிலும், ப்ராப்யத்வேநவவை யிவனுக்கு வாஞ்சநீயங்களன்றோ வென்ன; அவை யெல்லா மாசார்யனே யென்றிருக்கக் கடவ னென்கிறார் (பாட்டுக் கேட்குமிடமும்) என்று தொடங்கி.
இப்படியாக எளியவனாக உள்ள ஆசார்யன் தன்னைக் காப்பாற்றுவராக உள்ளபோது, அவரைக் கைவிட்டு, அடைவதற்கு அரியவனாக உள்ள பரமபதநாதனை விரும்புதல் கூடாது என்றாலும், அடையத்தக்க பேறாக உள்ளவன் பரமபதநாதன் என்ற காரணத்தால் அவன் விரும்பத்தக்கவன் அல்லவா? இந்தக் கேள்விக்கு, “அவையும் ஆசார்யனே என்றிருக்கவேண்டும்” என்று பதில் அளிக்கிறார்.
– அதாவது, “ஏதத் ஸாம காயந் நாஸ்தே” என்கிறபடியே நிரந்தராநுபவபரரான நித்யமுக்தர் அநுபவத்துக்குப் போக்குவீடாகப் பண்ணும் ஸாமகாநம் கேட்கும் ஸ்தலமான பரமபதமும் அஸுர ராக்ஷஸ பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்க ளார்த்த நாதம் கேட்கச் செவி கொடுத்துக்கொண்டு கண்வளரும் வ்யூஹ ஸ்தலமும், அவர்க ளார்த்த த்வநி கேட்டுத் துடித்துக் கொண் டெழுந்திருந்து “நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்கிறபடியே திருப்பாற்கடலிலே திருவரவணையில் நின்று மிவ்வருகே வரக் குதிப்பாரைப்போலே வந்தவதரித்த வவதார ஸ்தலமும், நினைத்தது தலைக்கட்டுமளவும் மலையாளர் வளைப்புப்போலே இட்டவடி பேரவிடாதே வளைத்துக் கொண்டிருக்கிற வர்ச்சாவதார ஸ்தலங்களும், “யேஷாமிந்தீவர ச்யாமோ ஹ்ருதயே ஸுப்ரதிஷ்டித:” என்றும், “ஒண்சங்கதை வாளாழியா னொருவனடியே னுள்ளானே” என்றும் சொல்லுகிறபடியே ஹ்ருதய கமலத்திலே யிருந்து தானுகந்தார்க்குத் தன்னழகை புஜிப்பிக்கும் அந்தர்யாமித்வ ஸ்தலமாகிற விந்த ப்ராப்ய ஸ்தலங்களெல்லாம், தனக்கு வகுத்த ஸ்தலமாய் ப்ராப்யமா யிருக்கு மாசார்ய விஷயமேயென் றத்யவஸித் திருக்கக் கடவனென்கை. (வளைத்தவிடமாவது), பிறரறியாதபடி திரை வளைத்துக் கொண்டிருக்கிற வந்தர்யாமித்வ ஸ்தலம்; (ஊட்டுமிடமாவது) சக்ஷுர் விஷயமா யிருந்து தன் வடிவழகையும் குணங்களையும் ஆச்ரிதரை புஜிப்பிக்கு மர்ச்சாவதார ஸ்தலமென்று சொல்லவுமாம். “யேநைவ குருணாயஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே, தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவஸ:” என்றும், “வில்லார்மணி கொழிக்கும்” என்று தொடங்கி “அருளாலே வைத்தவவர்” என்றும் சொல்லக்கடவதிறே. அன்றிக்கே (பாட்டுக் கேட்குமிடம்) இத்யாதிக்கு, ரக்ஷகமாக வவற்றை யாசைப்படக் கடவனல்ல னென்கிற அளவன்றிக்கே அவையெல்லாம் தனக் கிவ்விஷயமே யென்றிருக்கக் கடவ னென்கிற தென்று கீழோடே சேர யோஜிக்கவுமாம்.
(பாட்டுக்கேட்கும் இடமும்) - உபநிஷத்தில் – ஏதத் ஸாம காயந் நாஸ்தே - இந்த ஸாமகானத்தை எப்போதும் ஓதியபடி உள்ளனர் - என்று கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனை எப்போதும் அனுபவித்தபடி உள்ள நித்யமுக்தர்கள், தங்களுடைய அந்த அனுபவங்களை வெளிப்படுத்துவிதமாக ஸாமகானம் பாடும் பரமபதம். (கூப்பிடு கேட்குமிடம்) - அசுரர்கள் மற்றும் ராக்ஷஸர்களால் வருத்தப்பட்ட நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் கூக்குரல் எழுப்ப, அதனைக் கேட்பதற்கு ஏற்ப கண்வளர்கின்ற திருப்பாற்கடல். (குதித்த இடமும்) – இப்படியாக அவர்கள் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு துடித்தபடி எழுந்து, ஸ்ரீஹரிவம்சம் (113-62) – நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் – ஆதிசேஷன் என்ற மெத்தையை விட்டு ஸ்ரீமந்நாராயணன் மதுராவிற்கு வந்தான் – என்று கூறுவதற்கு ஏற்ப திருப்பாற்கடலில் உள்ள ஆதிசேஷன் என்ற படுக்கையை விட்டு இங்குள்ளவர்களின் அருகில் வருவதற்குக் குதிப்பவர்கள் போன்று அவதரித்த இடங்கள். (வளைத்தவிடம்) - நினைத்த செயல் நிறைவேறும் வரை மலைக்காமல் முயல்பவர் போன்று, எடுத்த வைத்த திருவடி நகராமல் நிற்கின்ற அர்ச்சாவதார இடங்கள். (ஊட்டுமிடம்) – யேஷாமிந்தீவர ச்யாமோ ஹ்ருதயே ஸுப்ரதிஷ்டித: – யாருடைய இதயத்தில் கருநெய்தல் போன்ற திருமேனி உள்ள ஸர்வேச்வரன் நன்றாக அமர்ந்துள்ளானோ - என்றும், திருவாய்மொழி (8-8-1) - ஒண்சங்கதை வாளாழியா னொருவனடியே னுள்ளானே - என்றும் கூறுவதற்கு ஏற்ப, தான் யாரை விரும்புகிறானோ அவர்களுடைய இதயத்தாமரையில் வீற்றிருந்து தனது அழகை எப்போதும் காண்பிக்கும் அந்தர்யாமித்வ இடம். இப்படியாக ஸர்வேச்வரன் உறையும் இடங்கள் அனைத்தும் தனது ஸ்வரூபத்திற்கு ஏற்ற இடமாக அடையத்தக்கதாக இருக்கும் ஆசார்யனே என்று உறுதியுடன் இருக்கவேண்டும் என்று கருத்து. (வளைத்தவிடம்) - மற்றவர்கள் அறியாதவிதத்தில் தரை ஆழ்ந்து கொண்டுள்ள அந்தர்யாமி நிலை என்றும் கூறலாம். (ஊட்டுமிடம்) - கண்களுக்குக் காணலாம்படி நின்று, தனது வடிவழகு மற்றும் திருக்கல்யாண குணங்கள் ஆகியவற்றை அடியார்களுக்கு உணர்த்தவல்ல அர்ச்சாவதாரம் என்றும் கூறலாம். யேநைவ குருணாயஸ்ய ந்யாஸ வித்யா ப்ரதீயதே, தஸ்ய வைகுண்ட துக்தாப்தி த்வாரகாஸ் ஸர்வ ஏவஸ: - எந்த ஒரு ஆசார்யனால் எந்த ஒரு ஜீவாத்மாவுக்கு சரணாகதி வித்யை அளிக்கப்பட்டதோ, அந்த ஜீவாத்மாவுக்குப் பரமபதம், திருப்பாற்கடல், துவாரகை போன்ற அனைத்தும் அந்த ஆசார்யனே ஆவார் - என்றது காண்க. மேலும் ஞானஸாரத்தில் (36) – வில்லார்மணி கொழிக்கும் – திருவேங்கடமலை தொடக்கமாக உள்ள அனைத்து திவ்யதேசங்களும் … கருணை பொழிந்த ஆசார்யனே ஆவார் - என்றும் கூறப்பட்டது. அல்லது இந்தச் சூர்ணைக்கு, அவற்றைத் தனது ரக்ஷகம் என்று ஆசைப்படாமல், அதாவது தன்னைக் காப்பாற்றும் வஸ்துக்கள் என்று விரும்பாமல், அவை அனைத்தும் ஆசார்யனே என்று மேலே கூறப்பட்ட வாக்கியத்துடன் சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.