Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 449)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
விடாய் பிறந்தபோது கரஸ்தமான உதகத்தை உபேக்ஷித்து ஜீமூத ஜலத்தையும் ஸாகர ஸலிலத்தையும் ஸரித் ஸலிலத்தையும் வாபீகூப பயாஸ்ஸுக்களையும் வாஞ்சிக்கக் கடவனல்லன் [உதகம் = நீர், ஜீமுதம் = மேகம், ஸாகரஸலிலம் = திருப்பாற்கடல் நீர், ஸரித்ஸலிலம் = ஆற்று நீர், வாபீ = குளம், பயஸ்ஸு = நீர், கூபம் = கிணறு]
இன்னமும் சில த்ருஷ்டாந்த முகத்தாலே, ஸுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு துர்லபமான பகவத் விஷயத்தை யாசைப்படுவானல்ல னென்கிறார் மேல் (விடாய் பிறந்தபோது) என்று தொடங்கி.
மேலும் சில உதாரணங்கள் மூலம், எளியவனாக உள்ள ஆசார்யனைக் கைவிட்டு, அரியவனாக உள்ள பகவானை ஆசைப்படக்கூடாது என்பதை அருளிச் செய்கிறார்.
– அதாவது, பிபாஸை விஞ்சினபோது சடக்கென பாநம் பண்ணலாம்படி பாத்ர கதமாய்க்கொண்டு தன் கையிலிருக்கிற ஜலத்தை ஸுலபதையே ஹேதுவாக வநாதரித்துத் தரையிலே யுகுத்து. ஆகாசஸ்தமாக் கொண் டெட்டாதபடியாயும் பூமிஸ்தமா யிருக்க தூரஸ்தமாயும் ஆஸந்தமா யிருக்கச்செய்தே பெருகுங்காலமொழிய வற்றின காலமின்றிக்கேயும் எப்போதும் முண்டானாலும் அவ்வளவும் சென்று உபஜீவிக்க வேண்டியும் இருந்தவிடந்தன்னிலே யுண்டாயும் கநித்ராதிகள் கொண்டு கல்லிப் பெறவேண்டி யிருக்கும் ஜீமூதாதிகளின் ஜலத்தை யாசைப்படுமவனைப்போலே, ரக்ஷாகாபேக்ஷை பிறந்த தசையிலப்போதே தனக்குதவும்படி கைபுகுந்திருக்கிற வாசார்யவிஷயத்தை ஸௌலப்யமே பற்றாசாக உபேக்ஷித்து, பரமாகாச வர்த்தியாய் துஷ்ப்ராபமா யிருக்கிற பரத்வத்தையும், பூமியிலேயாயும் க்ஷிராப்தியளவும் செல்ல வல்லவர்களுக்கன்றியே யுதவாத வ்யூஹத்தையும், ஆஸந்நமாக வந்தும் தாத்காலிகர்க் கொழிய பாச்சாத்யர்க் குதவாத விபவத்தையும், நித்யஸந்நிதி யுண்டாயும் ஸம்பாஷணாதிகளா லிவனோடு கைகலந்திராத வர்ச்சாவதரத்தையும், இருக்கிறவிடந் தன்னிலே யுண்டாயிருந்ததாகிலும் யமநியமாதி க்ரமேண யத்நித்து தர்சிக்கவேண்டும் அந்தர்யாமித்வத்தையு மாசைப்படக் கடவனல்ல னென்கை. “சக்ஷுர் கமயம் குரும் த்யக்த்வா சாஸ்த்ர கம்யந்து யஸ் மரேத், கரஸ்தமுதகம் த்யக்த்வா கநஸ்த மபிவாஞ்சதி” என்றும், “எட்டவிருந்த குருவை யிறை யன்றென்று விட்டு” என்று தொடங்கி, “அம்புதத்தைப் பார்த்திருப்பா னற்று” என்றும் சொல்லக்கடவதிறே. இது வ்யூஹாதிகளுக்கு முபலக்ஷணம்.
தாகம் அதிகமாக உள்ளபோது தனது கையில் உள்ளதான பாத்திரத்தில் உடனே பருகவல்லதான நீரை, தரையில் கொட்டிவிட்டு, ஆகாயத்தில் உள்ளதால் கைக்கு எட்டாமலும், பூமியில் உள்ளபோதிலும் மிகவும் தூரத்தில் உள்ளதாலும், அருகில் இருந்தாலும் நீர் பெருகும் காலம் அல்லாமல் மற்ற காலங்களில் கிட்டாமல் உள்ளதாலும், எந்தக் காலத்திலும் கிட்டும் என்றாலும் நீண்ட தூரம் சென்று பருகும்படி உள்ளதாலும், இருந்த இடத்தில் கிடைக்கும் என்றாலும் மண்வெட்டிகள் போன்ற பலவற்றால் மட்டுமே பூமியை வெட்டிப் பெறவேண்டும் என்பதாலும் கிட்டுவதற்கு அரிதாக உள்ள நீரையும், மேகத்தில் உள்ள நீரையும் விரும்புபவன் போன்று செய்வது என்னவென்றால் - தன்னை யாரேனும் காப்பாற்றவேண்டும் எண்று எண்ணிய சமயத்தில் தனக்கு உதவும் நிலையில் எப்போதும் ஆசார்யன் அருகில் உள்ளார் என்றபோதிலும், அவருடைய எளிமையைக் கண்டு உதாஸீனம் செய்து - பரமபதத்தில் உள்ளவனாய், கிட்டுவதற்கு அரியவனாக உள்ள பர நிலையையும், பூமியில் உள்ளபோதிலும் திருப்பாற்கடல் வரை சென்று காண முடிந்தவர்களுக்கு மட்டும் உதவும் வ்யூஹ நிலையையும், அருகில் வந்து அவதரிக்கும் போதும் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு அல்லாமல் பிற்காலத்தில் பிறந்தவர்களுக்கு உதவாத அவதார நிலையையும், எந்தக் காலத்திலும் அருகில் உள்ளபோதிலும் பேசுவது முதலான செயல்கள் செய்து ஜீவன்களுடன் சேர்ந்து நிற்காத அர்ச்சாவதார நிலையையும், ஜீவன் உள்ள இடத்திலேயே உள்ள ஸர்வேச்வரன் என்பதற்கு ஏற்ப யமம், நியமம் போன்ற நெறிகளை முறையாகக் கடைப்பிடித்து நின்றால் மட்டுமே காண இயல்வதாகிய அந்தர்யாமி நிலையும் ஆசைப்படுதல் கூடாது. கீழே உள்ள வரிகள் காண்க: புராண ஸமுச்சயம் - சக்ஷுர் கமயம் குரும் த்யக்த்வா சாஸ்த்ர கம்யந்து யஸ் மரேத், கரஸ்தமுதகம் த்யக்த்வா கநஸ்த மபிவாஞ்சதி - கண்ணுக்கு நேரே புலப்படும் ஆசார்யனை விட்டு சாஸ்த்ரங்களால் மட்டுமே அறியவல்ல ஸர்வேச்வரனை யார் ஒருவன் எண்ணுகிறானோ, அவன் கையில் உள்ள நீரை விடுத்து மேகத்தில் உள்ள நீரை விரும்புவன் போன்றவன் ஆவான். ஞானசாரம் (33) – எட்டவிருந்த குருவை யிறை யன்றென்று விட்டு … அம்புதத்தைப் பார்த்திருப்பா னற்று - அருகில் உள்ள ஆசார்யன் தனக்கு எஜமான அல்லன் என்று கைவிட்டு, அடைவதற்கு அரிதாக உள்ள ஸர்வேச்வரனை அடைய முற்படுதல் என்பது, கண்ணை மூடிக்கொண்டு கையில் உள்ள தண்ணீரை நிலத்தில் கொட்டிவிட்டு ஆகாயத்தில் உள்ள நீர் தனது தாகத்தைத் தீர்க்கும் என்று நிற்பவன் செயல் போன்றதாகும்.