Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 448)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளைக் கணிசிக்கக் கடவனல்லன்.

அநந்தரம், இவ்வுபாய நிஷ்டனான வதிகாரிக்கு கர்த்தவ்யாகர்த்தவ்ய விஷயங்களை விஸ்தரேண வருளிச்செய்கிறார். அதில், ப்ரதமத்திலே, ஸுலபமான ஆசார்ய விஷயத்தை விட்டு துர்லபமான பகவத்விஷயத்தை யிச்சிப்பானல்லனென்னு மிடத்தை த்ருஷ்டாந்த முகேந வருளிச்செய்கிறார் (கைப்பட்ட) இத்யாதியாலே.

அடுத்ததாக ஆசார்ய அபிமானம் என்ற உபாயத்தில் நிலைநிற்கும் அதிகாரிக்குச் செய்யத்தக்க விஷயங்கள் எவை என்று விரிவாக அருளிச்செய்கிறார். அவற்றில் முதலாவதாக, எளிதாகக் கிட்டவல்ல ஆசார்யனைக் கைவிட்டு, அரிதாக உள்ள பகவத் விஷயத்தை உபாயமாக விரும்புதல் கூடாது என்று இந்தச் சூர்ணையில் ஓர் உதாரணம் மூலம் அருளிச்செய்கிறார்.

– அதாவது, கையிலே யிருக்கிற தநம்போலே அதிஸுலபனா யிருக்கிற ஆசார்யனைக் குறைய நினைத்து அநாதரத்தாலே கைவிட்டு, பூமியிலே பிறர் புதைத்து வைத்த தநம்போலே எட்டப்படாமையாலே “அரும்பொருள்” என்னும்படி துர்லபமான பகவத் விஷயத்தை ரக்ஷகமாகப் பற்ற இச்சிக்கக் கடவனல்ல னென்கை. “ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் ய உபாஸதே, லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்த மந்வேஷதி க்ஷிதௌ” என்றும், “பற்று குருவை” என்று தொடங்கி, “தன், கைப்பொருள் விட்டாரேனும் காசினியில் தாம் புதைத்த, அப்பொருள் தேடித் திரிவானற்று” என்றும் சொல்லக்கடவதிறே.

– அதாவது, கையில் உள்ள பணம் போன்று மிகவும் எளிதாகக் கிட்டவல்ல ஆசார்யனைத் தாழ்வாகச் சிந்தித்து ஆராதிக்காமல் கைவிட்டு, பூமிக்கு அடியில் மற்றவர்களால் புதைத்து வைக்கப்பட்ட காரணத்தால் யாருக்கும் எட்டாமல் உள்ளதால் “இது கிட்டுவதற்கு அரியது” என்று கிட்டுவதற்கு அரிதாக உள்ள பகவத் விஷயத்தைத் தனக்குப் பாதுகாப்பாக விரும்புதல் கூடாது. இதனைக் கீழே உள்ள வரிகளில் தெளிவாகக் காணலாம்: ஸுலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் ய உபாஸதே, லப்தம் த்யக்த்வா தநம் மூடோ குப்த மந்வேஷதி க்ஷிதௌ - கிடைப்பதற்கு எளிய ஆசார்யனைக் கைவிட்டு யார் ஒருவன் கிடைப்பதற்கு அரிய பகவானை வணங்குகிறானோ அவன், கையில் உள்ள பொருளை விட்டு பூமியில் புதைத்து வைக்கப்பட்ட பொருளைத் தேடும் மூடன் ஆவான். ஞானசாரம் (34) - தன், கைப்பொருள் விட்டாரேனும் காசினியில் தாம் புதைத்த, அப்பொருள் தேடித் திரிவானற்று - தான் அண்டியுள்ள ஆசார்யன் தனக்குத் தஞ்சமல்ல என்று எண்ணி, மற்றொருவனான பரம்பொருளைத் தஞ்சமாகக் கொள்ளுதல் என்பது, தனது கையில் உள்ள செல்வத்தை விடுத்து யாரோ பூமியில் புதைத்து வைத்துள்ள செல்வத்தைத் தேடி அலைபவன் செயல் போன்றதாகும்.