Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 447)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஆசார்யாபிமானமே யுத்தாரகம்.
பாரிசேஷ்யாத் கீழ் தாமருளிச்செய்ததே உபாயமென்று தலைக்கட்டுகிறார் (ஆசார்யாபிமாநமே யுத்தாரகம்) என்று.
– மற்ற அனைத்தையும் தள்ளியதால் எஞ்சி நிற்பதும், தான் மேலே அருளிச் செய்ததும் ஆகிய ஆசார்ய அபிமானமே மேலான உபாயம் என்று உரைக்கிறார்.
– அதாவது, மோக்ஷ ஸாதநதயா சாஸ்த்ர ஸித்தங்களான பக்த்யாதி களொன்று முபாயமன்றியிலே நின்றபின்பு, நிரதிசய க்ருபாவானாய் நிர்ஹேதுகமாகத் தன்னை யங்கீகரித்தருளி நிரபாயமாக நோக்கிக்கொண்டு போரு மாசார்யன் “இவன் நம்முடையவன்” என்றிருக்கு மந்தவபிமாநமே யிவனை ஸம்ஸாரத்தினின்றும் உத்தரிப்பிக்கு மென்கை. ஆக, (ஸ்வதந்த்ரனை யுபாயமாகத்தான் பற்றின போதிறே) என்று தொடங்கி உபபாதித்துக் கொண்டு வந்த சரமோபாய ஸ்வரூபத்தை யுள்ளபடி சோதித்து நிர்ணயித்தருளினாராய்த்து.
மோக்ஷ உபாயங்கள் என்று சாஸ்த்ரங்கள் விதித்துள்ள பக்தி போன்றவை உபாயம் அல்ல என்று ஆன பின்னர், எல்லையற்ற கருணை உள்ளவராகவும், எந்தவிதமான காரணமும் இல்லாமல் நம்மை அங்கீகரித்துக்கொண்டு, நமக்கு எந்தவிதமான தீமையும் வராமல் காப்பாற்றுவதும் ஆசார்யன் ஆவார். இவ்விதம் உள்ள ஆசார்யன், “இவன் நம்மைச் சேர்ந்தவன்” என்று கொள்ளும் அபிமானம் மட்டுமே இவனை ஸம்ஸாரத்திலிருந்து உயர்த்திவிடும் என்று கருத்து. ஆகவே, சூர்ணை 407ல் ஸ்வதந்த்ரனை யுபாயமாகத்தான் பற்றின போதிறே – என்றுள்ள வாக்கியம் தொடங்கி விவரித்து வந்து இறுதி உபாயத்தின் ஸ்வரூபத்தை, உள்ளது உள்ளபடி ஆராய்ந்து இங்கு நிரூபித்து அருளினார் என்று கருத்து.