Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 445)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
பகவத் ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே ப்ரபத்தி நழுவிற்று.
அநந்தரம், ப்ரபக்தி யுபாயமன்றியே நின்றபடியை அருளிச்செய்கிறார் (பகவத் ஸ்வாதந்த்ர்ய) இத்யாதியாலே.
– அடுத்து ப்ரபத்தியும் உபாயமாக இல்லாத நிலையை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸ்வபாரதந்த்ர்யாநுரூபையாய் மஹா விச்வாஸரூபையான ப்ரபத்தி, பந்தமோக்ஷோபாய நிர்வாஹகனான பகவான் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே மீளவும் கர்மாநுகுணமாக வைத்த சிந்தை வாங்குவித்து ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்? என்கிற மஹாபயத்தாலே இவனுக் குபாயமன்றியிலே நழுவி நின்ற தென்கை.
தன்னுடைய சுதந்திரத்திற்கு ஏற்றபடி ஸர்வேச்வரனிடம் மஹாவிச்வாஸம் என்ற வடிவமாக உள்ளது ப்ரபத்தியாகும். ஆனால் இத்தகைய ப்ரபத்தி என்பது, ஸம்ஸாரபந்தம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றின் நிர்வாஹகனாக உள்ள ஸர்வேச்வரன் தனது தடையற்ற சுதந்திரம் காரணமாக, மீண்டும் கர்மங்களைக் காரணமாகக் காண்பித்து, ஸம்ஸாரத்தில் உழலும்படிச் செய்தால் என்ன செய்வது என்ற அச்சம் காரணமாக, இவனுக்கு உபாயமாக உள்ள தன்மையில் இருந்து விலகுகிறது.