Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 444)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஸ்வ ஸ்வாதந்த்ர்ய பயத்தாலே பக்தி நழுவிற்று.
இப்படி (ஆசார்யா பிமாநமொழிய கதியில்லை) என்பானென்? சாஸ்த்ர ஸித்தங்களான பக்த்யாத்யுபாய விசேஷங்களுண்டே! என்கிற சங்கையிலே, இதொழிந்தவை யெல்லா மிவனுக் குபாயமன்றிக்கே நின்றமையை அடைவே யருளிச்செய்கிறார் மேல். அதில் ப்ரதமத்திலே, பக்தி உபாயமன்றியே நின்றபடியை அருளிச்செய்கிறார் (ஸ்வஸ்வாதந்த்ர்ய) இத்யாதியாலே.
இவ்விதம் சூர்ணை 443ல் உள்ளபடி – ஆசார்ய அபிமாநம் ஒழிய கதியில்லை – என்று ஏன் கூறவேண்டும்? சாஸ்த்ரங்களில் பக்தி உபாயம் போன்ற பலவும் கூறப்பட்டுள்ளன அல்லவோ? இவ்விதம் ஒரு சந்தேகம் எழலாம் என்பதால், ஆசார்ய அபிமானம் தவிர்ந்துள்ள மற்ற உபாயங்கள் அனைத்தும் உண்மையாக இவனுக்கு உபாயம் அல்லாமல் உள்ளதை வரிசையாக அருளிச்செய்கிறார். அவற்றில் முதலானவதாக பக்தியோகம் உபாயம் அல்லாமல் இருப்பதை இந்தச் சூர்ணையில் உரைக்கிறார்.
– அதாவது, பகவத்ப்ராப்தி ஸாதநதயா விஹிதையாய் ஸ்வயத்ந ஸாத்யையான பக்தி, பகவதேக பாரதந்த்ர்ய விரோதியான விரோதியான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தை யுண்டாக்கு மென்னும் பயத்தாலே இவனுக் குபாயமன்றியிலே நழுவி நின்ற தென்கை.
ஸர்வேச்வரனை அடைவதற்கு உபாயமாக விதிக்கப்பட்டதும், ஜீவாத்மா தனது முயற்சியால் அடைவதும் என்று கூறப்படும் பக்தியானது, பகவானுக்கு மட்டுமே வசப்பட்டு நிற்பது என்ற நிலைக்கு விரோதியாக உள்ளதால், “பக்தியிடம் வசப்பட்டிருத்தல்” என்ற தனது சுதந்த்ர நிலையை ஏற்படுத்துக்கூடும் என்ற அச்சம் காரணமாக, இவனுக்கு உபாயமாக உள்ளது என்று தன்மையில் இருந்து நழுவுகிறது.