Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 443)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஸ்வாபிமாநத்தாலே ஈச்வராபிமாநத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு, ஆசார்யாபிமாந மொழிய கதியில்லையென்று பிள்ளை பலகாலு மருளிச் செய்யக் கேட்டிருக்கையா யிருக்கும்.
இனி (ஸ்வாபிமாநத்தாலே) என்று தொடங்கி, (ஆசார்யபிமாநமே யுத்தாரகம்) என்னுமளவாக, இப்படி ததீயர் முன்னாகப் பற்றப்படும் ஸதாசார்யனுடைய அபிமாநமே உஜ்ஜீவநத்துக்கு உசிதோபாயமென்னு இப்ப்ரபந்த தாத்பர்யத்தை ப்ரகாசிப்பித்தருளுகிறார். பெருவிலையனான ஆபரணத்துக்கு நாயகக்கல்போலே யாய்த்து வசநபூஷணத்துக்கு இப்ப்ரதேசம் நாயகரத்நமா யிருக்கும்படி. இத்தனையு மருளிச் செய்கையைப் பற்ற அதிஷ்டிகையிட்டுக் கொண்டு வந்தது கீழடங்கலும்; மேலடங்கலும் இதில் நிஷ்டையை ஸ்தாபிக்கிறது. இதில் ப்ரதமத்திலே, இவ்வர்த்தம் ஸத்ஸம்ப்ரதாய ஸித்தமென்று ஸர்வரும் விச்வஸிக்கைக்குடலாக இது தமக்கு ஆப்தோபதேசலப்த மென்னுமிடத்தை அருளிச்செய்கிறார் (ஸ்வாபிமாநத்தாலே) என்று தொடங்கி.
– அடுத்து “ஸ்வாபிமாநத்தலே” என்று தொடங்கும் இந்தச் சூர்ணை முதல், “ஆசார்ய அபிமாநமே உத்தாரகம்” என்றுள்ள சூர்ணை 447 முடிய உள்ள சூர்ணைகள் மூலம், இவ்விதமாக பாகவதர்களை முன்னிட்டுக் கொண்டு பற்றப்படும் சிறந்த ஆசார்யனுடைய அபிமானம் என்பதே ஜீவன் கரையேறுவதற்கான உபாயம் என்று இந்த ப்ரபந்தம் மூலம் வெளிப்படும் கருத்தை உணர்த்துகிறார். மிகுந்த விலையுள்ள ஓர் ஆபரணத்திற்கு நடுவில் பதிக்கப்படும் உயர்ந்த இரத்தினங்கள் போன்று இந்தப் பகுதி ஸ்ரீவசனபூஷணத்துக்கு உள்ளது (“இந்த பகுதி” என்பது சூர்ணை 447ல் உள்ள “ஆசார்ய அபிமானமே” என்று தொடங்கி உள்ள சூர்ணைகளைக் குறிக்கும்). இந்தப் பகுதியில் இந்த அர்த்தத்தை அருளிச்செய்யும் விதமாகவே, அவதாரிகை தொடக்கமாக இதுவரை உள்ள பகுதிகளிலும், இனி வர உள்ள பகுதிகளிலும் (சூர்ணை 447க்கு மேலே உள்ளவை), இந்த ஆசார்ய நிஷ்டையை நிலைநாட்டுகிறார். இவ்விதம் கூறத் தொடங்கும்போது, முதலில் இந்த அர்த்தமானது நம்மாழ்வார் தொடக்கமான சிறந்த ஸம்ப்ரதாயத்தால் வந்தது என்பதை அனைவரும் நம்பவேண்டும் என்பதற்காக, இது தனக்கு மிகவும் நம்பத் தகுந்தவர்களுடைய உபதேசத்தால் கிட்டியதாக அருளிச்செய்கிறார்.
– அதாவது, அநாதிகாலம் ‘நானே யெனக்கு நிர்வாஹகன்’ என்றிருக்கும் தன்னுடைய துரபிமாநத்தாலே, ‘இவன் நமக்கு சேஷம், இவன் கார்யம் நமக்கே பரம்’ என்று தன்னை உஜ்ஜீவிப்பிக்கைக்குடலான ஈச்வராபிமாநத்தை அழித்துக்கொண்ட இவனுக்கு, துர்கதியே பற்றாசாக அங்கீகரித்து தன்னுடைய உஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணிப்போரும் பரமதயாளுவான ஆசார்யன், “இவன் நம்முடையவன்” என்றபிமாநித்திருக்கு மந்த அபிமாநமொழிய வேறு உஜ்ஜீவநோபாயமில்லை என்று, ஸகல சாஸ்த்ரஸாரவிதக்ரேஸரரான நம்பிள்ளை திருவடிகளிலே பழுக்க ஸேவித்து ததேக பரதந்த்ரராய் ஸகல சாஸ்த்ர தாத்பர்யங்களையும் அவரருளிச் செய்யக்கேட்டு தந்நிஷ்டராயிருக்கும் நம்முடைய ஆசார்யரான பிள்ளை, தஞ்சமாகப் பலகாலு மருளிச் செய்யக் கேட்டிருக்கையா யிருக்குமென்றபடி. ஆகையால், ஆசார்யாபி மாநமே இவ்வாத்மாவுக் குஜ்ஜீவநோபாய மென்று கருத்து.
எல்லையற்ற காலமாக “நானே எனக்கு எஜமானன்” என்று எண்ணியபடி தவறான சிந்தனைகளுடன் கூடிய ஜீவாத்மா, அந்தத் தவறான எண்ணத்தால், “இந்த ஜீவாத்மா நமக்கு அடிமைப்பட்டவன், இவனுடைய செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுப்பது நமது கடமை” என்று ஜீவாத்மாவைக் கரையேற்றக் காரணமாக உள்ள ஸர்வேச்வரனுடைய க்ருபையை அழித்துக் கொள்கிறான். இப்படியாக உள்ள ஜீவாத்மாவின் பரிதாபமான நிலையைக் கண்டு, அவனைத் தனது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு இவனைக் கரையேற்றுவதே தனது கடமை என்று ஆசார்யன் உள்ளார். இப்படியாக மிகவும் கருணையுடன் “இந்த ஜீவாத்மா நம்மைச் சேர்ந்தவன்” என்று எண்ணும் ஆசார்ய அபிமானம் தவிர கரையேற வேறு வழியில்லை என்று, அனைத்து சாஸ்த்ரங்களின் பொருளை அறிந்தவர்களின் தலைவரான நம்பிள்ளைக்கு நீண்ட நாட்கள் சிஷ்யராக இருந்து, நம்பிள்ளைக்கு மட்டுமே அடிமையாக நின்று வரும், அனைத்து சாஸ்த்ரங்களின் பொருளையும் நம்பிள்ளை அருளிச்செய்யக் கேட்டு அவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டபடி ஆழ்ந்துள்ளவரும், நமது ஆசார்யராக உள்ளவரும் ஆகிய வடக்குத் திருவீதிப்பிள்ளையானவர் அனைவருக்கும் தஞ்சமாகப் பலமுறை அருளிச்செய்யக் கேட்டுள்ளேன் என்று கருத்து. ஆகவே ஆசார்யனுடைய க்ருபையே இந்த ஜீவாத்மா கரையேறத் தேவையான உபாயம் என்று கருத்து.