Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 442)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

கொடியைக் கொள்கொம்பிலே துவக்கும்போது சுள்ளிக்கால் வேண்டுமா போலே, ஆசார்யாந்வயத்துக்கும் இது வேணும்.

– இப்ப்ரச்சத்துக் குத்தர மருளிச்செய்கிறார் (கொடியை) என்று தொடங்கி.

– கடந்த சூத்திரத்தில் எழுப்பிய கேள்விக்கு இங்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, உபக்நாபேக்ஷமாய் வளருவதொரு கொடியை அதின் பரிணாஹத்துக்கெல்லாம் இடங்கொடுக்கத்தக்க பெரியதொரு உபக்நத்திலே சேர்க்கும்போது, முதலிலே அது தன்னோடே சேர்க்கப் போகாமையாலே தரைப்படாமல் முந்துறதான் இதுக் காச்ரயமாய்க் கொண் டணுகி நின்று தன்னோட்டை யந்வயமுகேந கொள் கொம்பிலே நொழுந்துவிக்கும் சுள்ளிக்கா லபேக்ஷிதமாமாப்போலே, கோல்தேடி யோடுங் கொழுந்துபோலே அபிமுகனான விச்சேதநன் ஆச்ரித ரத:பதியாம லுத்தரிப்பிக்கும் மஹதாச்ரயமான ஆசார்யன் திருவடிகளில் அந்வயிக்கும்போது, முதலிலே ததந்வயம் ஸித்திக்கை அரிதாகையாலே முந்துறத் தாங்க ளாஸந்நராய் நின்று தங்களோடே யிணக்குவித்து அவ்வழியாலே ஆசார்ய விஷயத்திலே சேர்க்கும் பாகவதர்க ளோட்டை ஸம்பந்த மவச்யா பேக்ஷித மென்கை. இப்படி ஆசார்யாந்வயத்துக்கடி பாகவதர்களாகில், (ஆசார்ய லாபம் பகவானாலே) என்பானென் னென்னில்; அதுக்குக் குறையில்லை. பாகவதாந் வயந்தனக்கடி யவனாகையாலே; ஆபிமுக்ய பர்யந்தமாகத்தானே க்ருஷி பண்ணிக் கொண்டு வந்து பின்னை பாகவதர்களோடே யிணக்கி அவ்வழியாலேயிறே யவன்றான் ஆசார்ய விஷயத்திலே சேர்ப்பது; இது இத்தனையும் இவரருளிச் செய்த த்ருஷ்டாந்தத்திலே ஸித்தம். எங்ஙனே யென்னில்; சேதநனை கொடியினுடைய ஸ்தாநேயாகவும், ஆசார்யனை கொள்கொம்பினுடைய ஸ்தாநேயாகவும், பாகவதர்களை சுள்ளிக்காலினுடைய ஸ்தாநோயாகவு மருளிச்செய்கையாலே, கர்ஷகனா யிருப்பா னொருவன் ஸ்வப்ரயோஜநார்த்தமாக முதலிலே வித்தை யிட்டு முளைப்பித்து கொழுந்து சரிக்குமளவும் வளர்த்துக்கொண்டு போந்ததொரு கொடியை, இதுக்கினி ஓர் உபக்நம் வேணுமென்று தானே உபக்நமும் தேடி அதிலே சென்றேறுகைக்கு சுள்ளிக்காலும் நாட்டி இவ்வழியாலே உபக்நத்திலே சேர்க்குமாப்போலே, ஸர்வசேஷியான ஸர்வேச்வரன் ஸ்வப்ரயோஜநார்த்தமாக இச்சேதநனை முதலிலே ஸ்ருஷ்டித்து, “ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம்” இத்யாதிபடியே க்ரமேணாபிமுக்ய பர்யந்தமாக விளைத்து இவனுக்கோ ராசார்யனையும் இன்னானென்றுதானே திருவுள்ளம் பற்றி, அவனோடே சேர்க்கும் பாகவதர்களோடே முதலந்வயிப்பித்து, அவ்வழியாலே ஆசார்ய விஷயத்திலே அந்வயிப்பிக்கு மென்னுமிடம் தோற்றுகையாலே, கொள்கொம்பிலே யேறவிட்ட கர்ஷகனுக்கே அந்தக் கொடியாலுள்ள ப்ரயோஜநமாமாப்போலே, ஆசார்ய விஷயத்தி லீச்வரன் சேர்த்த சேதநனா லுள்ள ப்ரயோஜநமு மீச்வரனதே யென்னுமிடமும் பலிதம். இனி அசேதநமான கொள்கொம்பு போலன்றியே சேதநோத்தமனான இவ்வாசார்யன் றானும் பரஸம்ருத்தயேக பரனாகையாலே, ஸ்வசேஷியான வீச்வரனுடைய ப்ரயோஜநமே ஸ்வப்ரயோஜநமாக நினைத்திருக்குமிறே.

– ஒரு கொடியானது வளரும்போது அது படர்வதற்கு இடம் அளிக்கவல்ல ஒரு பந்தலை அமைத்து அதில் அந்தக் கொடியைச் சேர்ப்பார்கள். ஆனால் அந்தப் பந்தலில் கொடியைத் தொடக்கத்திலேயே சேர்க்க இயலாது என்பதால், கொடி முதலில் தரையில் துவண்டு விழாமல் இருப்பதற்காக, முதன்முதலில் அது படர்வதற்கு இடம் கொடுப்பதாகவும், தன்னுடைய தொடர்பு மூலம் அந்தக் கொடியானது தன்னைப் பற்றிக் கொண்டு அந்தப் பந்தலில் ஏற உதவி செய்வதாகவும் உள்ளது எதுவென்றால் அந்தப் பந்தலைத் தாங்கி நிற்கும் சுள்ளிக்கால்கள் (பந்தலின் கால்கள்) ஆகும். இங்கு இந்தச் சுள்ளிக்கால்கள் தேவைப்படுவது போன்று, பாகவத ஸம்பந்தம் அவசியம் என்பதை அடுத்து உரைக்கிறார். இரண்டாம் திருவந்தாதி (27) – கோல் தேடி ஓடும் கொழுந்து போலே - என்பதற்கு ஏற்ப, தன்னை அண்டிய அடியார்களுக்கு எந்தவிதமான தாழ்ச்சியும் வராத விதத்தில் அவர்களைக் கரையேற்றவல்ல கொடிக்கம்பு போன்றுள்ள ஆசார்ய ஸம்பந்தம் என்பதைப் பெற இந்தச் சேதனன் முயல்கிறான். அது கிட்டுவதற்கு அரிதாக உள்ளதால், முதலில் தங்களோடு சேர்ந்து கொண்டு அதன் மூலம் ஆசார்ய ஸம்பந்தத்தை ஏற்படுத்தவல்ல பாகவத ஸம்பந்தம் என்பது அவசியமாகிறது என்று கருத்து. இங்கு ஒரு கேள்வி எழலாம். ஆசார்ய ஸம்பந்தம் கிட்டுவது பாகவதர்களால் மட்டுமே என்று உரைத்தால், சூர்ணை 425ல் – ஆசார்ய லாபம் பகவானாலே - என்று எப்படிக் கூறப்பட்டது? இதற்கு விடை அளிக்கிறார் - அது தவறில்லை. பாகவதர்களுடன் சேர்க்கையை ஏற்படுத்துவது பகவானே ஆகிறான் என்பதால் ஆகும். நல்லவர்களுடன் ஸம்பந்தம் ஏற்படுதல் என்பதை ஸர்வேச்வரன் தானாகவே ஜீவனுக்கு உண்டாக்கி, பின்னர் பாகவதர்களுடன் சேர்த்து வைத்து, அதன் பின்னர் அந்த ஜீவனை ஆசார்யனிடம் சேர்க்கிறான். இந்தக் கருத்து அனைத்தும் மேலே இவர் அருளிச்செய்த பந்தல், சுள்ளிக்கால் என்ற உதாரணத்தில் வெளிப்படை ஆகும். எப்படி? ஜீவனைக் கொடியாகவும், ஆசார்யனைக் கொள்கொம்பாகவும், பாகவதர்களைச் சுள்ளிக் காலாகவும் கொள்வதன் மூலம் ஆகும். ஒரு உழவன் தனது பயனுக்காக முதலில் விதையை விதைத்து, கொழுந்து விடும்படியாக ஒரு செடியை வளர்க்கிறான்; ஒரு கட்டத்தில், “இந்தச் செடிக்கு இனி கொள்கொம்பு வேண்டும்”, என்று எண்ணியவனாக, தானே ஒரு கொள்கொம்பை வைத்து, அதில் அந்தச் செடி பற்றிக் கொண்டு ஏறும்விதமாகச் சுள்ளிக்கால்களை நட்டு, அதன் மூலம் மூலம் அந்தச் செடி பந்தலில் சேரும்படிச் செய்கிறான். இதே போன்று அனைத்து உயிர்களுக்கும் எஜமானனாகிய ஸர்வேச்வரன் தனக்குப் பயன்படுவதற்காக ஜீவனைப் படைக்கிறான். பின்னர் சூர்ணை 435ல் கூறப்பட்ட – ஈச்வரஸ்ய ச ஸௌஹார்த்தம் - என்ற ச்லோகத்தில் கூறியபடி, ஆபிமுக்யம் என்பதான ஸர்வேச்வரனிடம் ஆழ்ந்த ஈடுபாடு என்பது முடிய ஜீவாத்மாவுக்கு ஏற்படுத்துகிறான். அடுத்து இவனுக்கு இன்னவர் ஆசார்யன் என்று தனது திருவுள்ளத்தில் தீர்மானிக்கிறான். அந்த ஆசார்யனிடம் சேரவைக்கும் பாகவதர்களுடன் முதலில் இந்த ஜீவாத்மாவைச் சேர்க்கிறான். அவர்கள் மூலம் ஆசார்யனிடம் சேர்ப்பிக்கிறான். இந்தக் கருத்து மிகவும் தெளிவாக அந்த உதாரணம் மூலம் விளங்கும். ஆக கொள்கொம்பில் படரவிட்ட கொடியானது உழவனுக்கு உதவுவது போன்று, ஆசார்யனோடு ஸர்வேச்வரனால் சேர்க்கப்பட்ட ஜீவாத்மாவால் உண்டாகும் பயன் என்பது ஸர்வேச்வரனுக்கே ஆகிறது என்று கருத்து. அறிவு இல்லாத பந்தல் போன்று அல்லாமல், சிறந்த அறிவுள்ள இந்த ஆசார்யன், மற்றவர்களுடைய நலம் என்பதை மட்டுமே சிந்திப்பவர் என்பதால், ஸர்வேச்வரனுக்கு ஏற்படும் பலனையே தனது பலனாகவும் கொள்ளுவார் அல்லவோ?