Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 440)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

இத்தையொழிய பகவத் ஸம்பந்தம் துர்லபம்.

இங்ஙன் சொல்லுகிறதென்? இவ்வாசார்ய ஸம்பந்தம் குலைந்ததாகிலும் “ஒழிக்க வொழியாது” என்கிற பகவத் ஸம்பந்த முஜ்ஜீவநத்துக் குடலாகாதோ வென்ன அருளிச்செய்கிறார் (இத்தை யொழிய) என்று தொடங்கி.

– இவ்விதம் ஏன் கூறவேண்டும்? ஆசார்ய ஸம்பந்தம் என்பது நீங்கினாலும், திருப்பாவை (28) - ஒழிக்க வொழியாது – என்பதற்கு ஏற்ப உள்ள பகவத் ஸம்பந்தம் என்பது கரையேற்றாதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநாதி ஸித்தமா யிருக்கச் செய்தேயும், ஆசார்ய னுணர்த்துவதற்கு முன்பு அஸத்கல்பமாய் அவனுணர்த்தின பின்பு இவனுக்கு கார்யகரமாகக் கடவதா யிருக்குமது இவ்வாசார்ய ஸம்பந்தம் குலைந்தபோது இதடியாக வந்த தானும் குலைந்துபோமாகையாலே, இவ்வாசார்ய ஸம்பந்தத்தை யொழிய பகவத் ஸம்பந்தம் இவனுக்குக் கிடையாதென்கை. ஆகையால் இது போய்த்தாகிலும் அது நமக்கு உஜ்ஜீவநத்துக் குடலென்றிருக்க விரகில்லை யென்று கருத்து.

பகவத் ஸம்பந்தம் என்பது எல்லையற்ற காலமாக உள்ளது என்றாலும், ஆசார்ய ஸம்பந்தம் இல்லாமல் உபதேசம் இன்றி உள்ளபோது, அந்த பகவத் ஸம்பதம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் ஆசார்ய உபதேசத்தின் பின்னர் பகவத் ஸம்பந்தம் அவனுடைய கார்யங்களைச் செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட பகவத் ஸம்பந்தம் என்பது ஆசார்ய ஸம்பந்தம் நீங்கியவுடன், ஆசார்ய ஸம்பந்தத்தால் வந்த காரணத்தால், தானும் நீங்கிவிடுகிறது. எனவே ஆசார்ய ஸம்பந்தம் இல்லை என்றால் பகவத் ஸம்பந்தமும் கரையேற்ற உதவாது என்று கருத்து.