Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 439)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
தாமரையை அலர்த்தக்கடவ ஆதித்யன் தானே நீரைப் பிரித்தால் அத்தை யுலர்த்தமாபோலே, ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணு மீச்வரன் தானே, ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அத்தை வாடப்பண்ணும்.
ஆசார்ய ஸம்பந்தம் கிடந்தாலும் ஸ்வரூப விகாஸக னீச்வரனன்றோ, அது குலைந்தாகிலு மித்தனை ஆத்மகுணமுடையவனுக்கு அவன் ஸ்வரூப விகாஸத்தைப் பண்ணானோ என்கிற சங்கையிலே அருளிச்செய்கிறார் (தாமரையை) என்று தொடங்கி.
– ஒருவனுக்கு ஆசார்ய ஸம்பந்தம் உள்ளபோதிலும், அவனுடைய ஆத்ம ஸ்வரூபத்தை மலரச் செய்வது ஸர்வேச்வரன் அல்லவோ? அந்த ஆத்மஸம்பந்தம் நீங்கினாலும், ஆத்மகுணங்கள் உள்ள ஒருவனுக்கு ஸர்வேச்வரன் ஆத்மஸ்வரூபத்தை மலரும்படிச் செய்யமாட்டானோ? இந்தக் கேள்விகளுக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஜலஜமென்னும்படி ஜலத்திலே பிறந்து ஜலைக தாரகமா யிருக்கும் தாமரைக்கு, “செங்கமல மந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லாலலராவால்” என்னும்படி நியமேந விகாஸகனாய்ப் போரு மாதித்யன்றானே, ஸ்வதாரகமான ஜலத்தை விச்சேஷித்தால் அந்த தாமரையை விகஸிப்பியாதமாத்ர மன்றிக்கே சோஷிப்பிக்குமாப்போலே, ஆசார்யாந்வயத்தாலே ஸத்தை பெற்று ஸ்வஸத்தா தாரகமான தத்ஸம்பந்தம் குலையாதே நிற்குமளவில், இவனுடைய ஸ்வரூபத்தை ஜ்ஞாந விகாஸமுகேந “உள்ள உலகளவும் யானு முளனாவன்” என்னும்படி விகஸிப்பிக்கு மீச்வரன்றானே, ஸ்வஸத்தா தாரகமான ஆசார்ய ஸம்பந்தத்தை ஸ்வவிப்ரதிபத்தியாலே இவன் குலைத்துக்கொண்ட காலத்தில், தான் விகஸிப்பிக்கக் கடவ அந்த ஸ்வரூபத்தை விகஸிப்பியாத மாத்ரமன்றிக்கே, நாளுக்கு நாளும் நஷ்ட ப்ரஜ்ஞமாய் ஸங்கோசித்துப் போம்படி பண்ணுமென்கை. “நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்ய துர்ப்புத்தே: கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர்ந தோஷயதி” என்னக்கடவதிறே.
ஜலஜம் என்ற பெயர் பொருந்தும்விதமாக (ஜலஜம் = தண்ணீரில் பிறந்த பொருள்), நீரில் பிறந்து, நீரையே தனக்கு ஆதாரமாகக் கொண்டுள்ள தாமரைக்கு, பெருமாள் திருமொழி (5-6) – செங்கமல மந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லாலலராவால் - என்று கூறுவதற்கு ஏற்ப, எப்போதும் தவறாமல் மலர்ச்சியை அளிப்பவனாகிய சூரியனே அந்தத் தாமரையானது தன்னைக் காப்பாற்றியபடி உள்ள தண்ணீரை விட்டுப் பிரிந்தால், தாமரையை மலரச் செய்யாதது மட்டும் அல்லாமல், வாடும்படியும் செய்துவிடுகிறான். இதே போன்று, ஆசார்யனுடைய ஸம்பந்தம் காரணமாக ஒரு பொருளாகி, தான் இவ்விதம் ஒரு பொருளாக இருப்பதற்குக் காரணமான ஆசார்ய ஸம்பந்தத்தை ஒருவன் இழக்காமல் இருந்தால், அவனுடைய ஸ்வரூபத்தை ஞான வளர்ச்சி மூலமாக பெரிய திருவந்தாதி (76) – உள்ள உலகளவும் யானு முளனாவன் - என்பதற்கு ஏற்றபடி ஆத்மஸ்வரூபத்தை மலரும்படிச் செய்யும் ஸர்வேச்வரன் செய்வது என்னவென்றால் - ஜீவாத்மா தனது இருப்புக்குக் காரணமாக உள்ள ஆசார்ய ஸம்பந்தத்தை தன்னுடைய வேறுபட்ட எண்ணங்கள் காரணமாக குலைத்துக் கொள்ளும்போது, அந்த ஆத்மஸ்வரூபத்தை மலர்த்த வேண்டிய ஸர்வேச்வரனாகிய தான், மலரச் செய்யாமல் விடுவது மட்டும் அல்லாமல், மேன்மேலும் அறிவையும் குறையும்படிச் செய்கிறான் என்று கருத்து. நாராயணோபி விக்ருதிம் யாதி குரோ: ப்ரச்யுதஸ்ய துர்ப்புத்தே: கமலம் ஜலாதபேதம் சோஷயதி ரவிர்ந தோஷயதி - ஆசார்யனை இழந்த அறிவற்ற ஒருவனிடம் நாராயணனும் மாறுபாட்டை அடைகிறான்; நீரை விட்டு அகன்ற தாமரையை எவ்விதம் சூரியன் வாடச் செய்கிறானோ அது போன்றே ஆகும் – என்றது காண்க.