Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 438)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணிப் பூணலாம்; தாலி போனால் பூஷணங்க ளெல்லாம் அவத்யத்தை விளைக்கும்.
ப்ரயோஜந மில்லாமையேயன்று, அவத்யகரமுமென்கிறார் (தாலி கிடந்தால்) என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறியது போன்று பயனற்றவை மட்டுமே அல்லாமல், அவை தாழ்வினையும் உண்டாக்கும் என்கிறார்.
– அதாவது, பதிவ்ரதையான ஸ்த்ரீக்கு பதிஸம்பந்த ஸூசகமான தாலி யொன்றும் போகாமல் கிடந்தால், பூஷணங்க ளில்லையே யாகிலும் முதலுண்டானபோது பண்ணிப் பூண்டு கொள்ளலா யிருக்கும்; இத்தனை பூஷணமுண்டே என்று நினைத்துத் தாலியை வாங்கிப் பொகட்டால், விதவாலங்காரகல்ப மாகையாலே பூண்ட பூஷணங்க ளெல்லாம் அவத்யாவஹங்களா யிருக்கு மென்கை. இத்தால், ஆத்மபூஷணங்களான ஜ்ஞாந வைராக்ய பக்திக ளில்லையே யாகிலும், ஆசார்ய ஸம்பந்தமாத்ரம் குலையாமல் கிடந்தால், அவன ப்ரஸாதத்தாலே அவை க்ரமேண உண்டாக்கிக் கொள்ளலாம்; ஆசார்ய ஸம்பந்த மித்தனையுங் குலைந்தால், ஆத்ம குணங்களான ஜ்ஞாந பக்தி வைராக்யங்க ளெல்லா முண்டானாலும் அவை ச்லாக்யதா ஹேதுவன்றிக்கே அவத்யாவஹமாய் விடுமென்றபடி.
கற்பு நிறைந்த ஒரு பெண்ணுக்கு அவளுடைய கணவனுடன் அவளுக்கு உள்ள ஸம்பந்தத்தை உணர்த்துகிற தாலியானது இருந்தால் போதுமானது; செல்வம் குறைவாக உள்ள காரணத்தால் அவளுக்கு வேறு ஆபரணங்கள் இல்லையென்றாலும், ஏதோ ஒரு காலத்தில் செல்வம் கிட்டும்போது மற்ற ஆபரணங்களைச் செய்து அவள் அணிந்து கொள்ளமுடியும். ஆனால் “இத்தனை ஆபரணங்கள் உள்ளனவே” என்று எண்ணியவளாக ஒரு பெண் தனது தாலியைக் கழற்றினால், அவளுடைய அந்தச் செயல் விதவைக்குச் செய்யும் அலங்காரம் போன்று, தாலி தவிர அவள் அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தும் அவளுக்குத் தாழ்வை மட்டுமே உண்டாக்கும். இதே போன்று, ஆத்மாவுக்கு அணிகலன்களாக உள்ள ஞானம், வைராக்யம், பக்தி போன்றவை ஒருவனுக்கு இல்லை என்றாலும், ஆசார்ய ஸம்பந்தம் நீங்காமல் இருந்தால், அவருடைய க்ருபை காரணமாக அவனுக்கு அவை சரியான காலத்தில் வந்து சேர்ந்துவிடும். மாறாக ஒருவனுக்கு ஞானம், பக்தி, வைராக்யம் ஆகியவை இருந்து, ஆசார்ய ஸம்பந்தம் நீங்கினால், அவை சிறப்புக்குக் காரணம் ஆகாமல் தாழ்மைக்குக் காரணமாகிவிடும் என்று கருத்து.