Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 437)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஆசார்ய ஸம்பந்தம் குலையாதே கிடந்தால் ஜ்ஞாந பக்தி வைராக்யங்க ளுண்டாக்கிக் கொள்ளலாம்; ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தால் அவை யுண்டானாலும் ப்ரயோஜன மில்லை.

– “அசிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, அகாத பகவத் பக்தி ஸிந்தவே” என்கிறபடியே ஆசார்யன்றனக் கேற்றம் ஜ்ஞாந வைராக்ய பக்திகளாலேயிறே; அந்த ஜ்ஞாந வைராக்ய பக்திக ளுண்டானவ னிந்த ஆசார்ய ஸம்பந்தத்தை நெகிழ நின்றாகிலும் அவை பகவல் லாபத்துக் குடலாமோ வென்ன வருளிச்செய்கிறார் மேல் (ஆசார்ய ஸம்பந்தங் குலையாதே கிடந்தால்) என்று தொடங்கி.

ஸ்தோத்ரரத்னத்தில் (1) – அசிந்த்யாத் புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராசயே, அகாத பகவத் பக்தி ஸிந்தவே – இப்படிப்பட்டது என்று எண்ண இயலாததும், வியக்க வைப்பதும், ஸர்வேச்வரனுடைய க்ருபை காரணமாக எளிதாகக் கிட்டவல்லதும் ஆகிய ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டமாக உள்ளவரும், பகவானை மட்டுமே த்யானிப்பவரும், பகவத் பக்திக்குக் கடல் போன்றவரும் ஆகிய நாதமுனிகளை நான் வணங்குகிறேன் – என்பதன் மூலம் ஆசார்யனுக்கு மேன்மை என்பது ஞானம், வைராக்யம், பக்தி என்பதால் ஏற்படுகிறது என்று அறியலாம். அப்படிப்பட்ட ஞானம், வைராக்யம், பக்தி போன்றவை நிறைந்த ஒருவன், ஆசார்ய ஸம்பந்தத்தில் சிறிது குறைவாக நின்றால் கூட அவனால் ஸர்வேச்வரனை அடைய இயலுமோ என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, கீழ்ச்சொன்னபடியே யுத்தாரகனுமாய் உபகாரகனுமா யிருந்துள்ள ஸ்வாசார்யன் “இவனென்னுடையவன்” என்றபிமாநிக்கும்படி அவன் திருவடிகளில் தனக்குண்டான ஸம்பந்தம் ஸ்வ விப்ரதிபத்தியாலே குலையாதபடி அத்தை நோக்கிக் கொண்டு கிடந்தால், ஆத்மாலங்காரங்களான தத்வஜ்ஞாநம் அப்ராப்த விஷய வைராக்யம் ப்ராப்தி விஷயபக்தி யாகிற ஆத்மகுணங்க ளில்லையே யாகிலும், அவ்வாசார்ய ப்ரஸாதாதிகளாலே க்ரமேண உண்டாக்கிக் கொள்ளலாம்; ஸர்வமங்கள ஹேதுவான அந்த ஆசார்ய ஸம்பந்தம் ஸ்வ விப்ரதிபத்தியாலே குலைந்தால், ஜ்ஞாநாதிக ளானவவை பூர்வ ஸுக்ருதங்களாலே சிறிதுண்டாய்த்தாகிலும், பகவதங்கீகார ஹேது வாகாமையாலே நிஷ்ப்ரயோஜந மென்கை.

இதுவரை கூறப்பட்டபடி ஸம்ஸாரத்திலிருந்து மேலே உயர்த்தி விடுபவரும், உதவி செய்பவருமாக உள்ள ஆசார்யன், “இவன் எனது சிஷ்யன்” என்று சொந்தம் கொண்டாடும்படியாக, ஆசார்யனுடைய திருவடிகளில் தனக்கு ஏற்பட்ட ஸம்பந்தம் என்பது, தனக்கு உண்டான மாறுபட்ட எண்ணங்களால் குறையாத விதத்தில் பார்த்துக் கொண்டால் போதுமானது; அவனுக்கு ஆத்ம ஆபரணங்களாக உள்ள உண்மை அறிவு, சிற்றின்பத்தில் வெறுப்பு, ஸர்வேச்வரனிடம் பக்தி போன்றவை இல்லையென்றாலும், அந்த ஆசார்ய ஸம்பந்தம் காரணமாக அவற்றை அவன் காலப்போக்கில் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அனைத்து மங்களங்களையும் அளிக்கவல்ல காரணமான ஆசார்ய ஸம்பந்தம் என்பது தனது மாறுபட்ட எண்ணங்களால் குறைந்தால், ஞானம் போன்றவை இவன் செய்த புண்ணியங்களால் ஏற்பட்டாலும், அவை பகவான் இவனை ஏற்பதற்குக் காரணமாக ஆகமாட்டா என்பதால் பலனற்றவையே ஆகும்.