Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 436)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

உபகார்ய வஸ்து கௌரவத்தாலே ஆசார்யனிற்காட்டில் மிகவு முபகாரகன் ஈச்வரன்.

ஆனால் இருவரு முபகாரத்தில் ஸமரோவென்ன அருளிச்செய்கிறார் மேல் (உபகார்ய வஸ்து) என்று தொடங்கி.

அப்படியென்றால் உதவி செய்வதில் ஆசார்யனும் ஸர்வேச்வரனும் ஒத்தவர்களா என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, உபயருமுபகரித்த வஸ்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் ஆசார்யோபகார்ய வஸ்துவான பந்தமோக்ஷாபய ஹேதுவாய் ப்ரதம பர்வமுமாயிருக்கிற பகவத் விஷயத்திற் காட்டில் பகவதுபகார்ய வஸ்துவான மோக்ஷைக ஹேதுவாய் சரமபர்வமுமா யிருக்கிற ஆசார்ய விஷயத்தினுடைய கௌரவத்தாலே, ஈச்வரனை யுபகரித்த ஆசார்யனிற் காட்டில் ஆசார்யனை யுபகரித்த ஈச்வரன் மஹோபகாரக னென்கை.

ஸர்வேச்வரன், ஆசார்யன் ஆகிய இருவரும் உதவி செய்த வஸ்துக்களான முறையே ஆசார்யன், ஸர்வேச்வரன் என்பவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, ஆசார்யனால் உதவி செய்யப்படுவபவனும், ஸம்ஸாரம் மற்றும் மோக்ஷம் ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனைக் காட்டிலும் ஸர்வேச்வரனால் உபகரிக்கப்படுபவரும், ஸம்ஸாரம் என்பதில் இருந்து விடுதலை என்பதான மோக்ஷத்திற்கு மட்டுமே காரணமாக உள்ளவரும் ஆகிய ஆசார்யனுடைய பெருமையால், ஸர்வேச்வரனை அளித்த ஆசார்யனைக் காட்டிலும் ஆசார்யனை அளித்த ஸர்வேச்வரனே மிகப் பெரிய உதவி செய்தவன் என்று கருத்து.