Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 434)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
பகவல்லாபம் ஆசார்யனாலே.
– உத்தாரகத்வத்தி லாசார்யனுடைய ஆதிக்யத்தை அருளிச்செய்தார் கீழ்; உபகாரகத்வத்தி லீச்வரனுடைய வாதிக்யத்தை யருளிச்செய்கைக்காக அடிகொண் டெழுந்திருக்கிறார் மேல் (பகவல் லாபம்) என்று தொடங்கி.
மோக்ஷத்திற்கு கொண்டு போகும் தன்மையில் ஆசார்யனுடைய வைபவத்தைக் கடந்த சூர்ணையில் அருளிச்செய்தார். உபகாரம் செய்வதில் ஸர்வேச்வரனுடைய முதன்மையை அருளிச் செய்யும் பொருட்டு இந்தச் சூர்ணையில் தொடங்குகிறார்.
– அதாவது, நிருபாதிக சேஷியாய் நிரங்குச ஸ்வதந்த்ரனா யிருக்கும் பகவானை லபிக்கை, தத்ஸம்ருத்த்யேக ப்ரயோஜநனாய்க் கொண்டு மங்களாசாஸநத்துக் காளாக வேணுமென்று தன்னை யங்கீகரித்து தத்வ்யாமோஹ விஷயமாக்கின ஸ்வாசார்யனாலே யென்கை.
தனக்கு இயல்பான ஸ்வாமியாக உள்ளவனும், எல்லையற்ற சுதந்திரம் உள்ளவனுமாகிய ஸர்வேச்வரனை ஜீவாத்மா அடைதல் எப்படி என்றால் - ஸர்வேச்வரனுடைய நினைவு ஒன்றையே தனக்குக் கிட்டும் பலனாகக் கொண்டு, அவனையே திருப்பல்லாண்டு பாடியபடி இருக்கும் நிலைக்குத் தன்னை ஆளாக்க வேண்டும் என்று எண்ணி, தன்னை ஏற்றுக்கொண்டு, அன்பிற்கு இலக்காக்கிய ஆசார்யனால் ஆகும் என்று கருத்து.