Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 433)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஈச்வர ஸம்பந்தம் பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கும். ஆசார்ய ஸம்பந்தம் மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும்.
இன்னமுமொரு முகத்தாலே ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிறார் (ஈச்வர ஸம்பந்தம்) என்று தொடங்கி.
மேலும் ஒருவிதத்தாலும் ஆசார்யனுடைய வைபவத்தை அருளிச்செய்கிறார்.
இவ்விடத்தில், (ஈச்வர ஸம்பந்தம்) என்கிறது, (ஈச்வரனைப் பற்றுகை) என்று கீழ்ச்சொன்ன ததாச்ரயணரூப ஸம்பந்தத்தை; அது, (பந்த மோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாகையாவது), கர்மாநுகுணமாக ஸம்ஸரிப்பிக்கவும் காருண்யாநுகுணமாக முக்தனாக்கவும் வல்ல நிரங்குச ஸ்வதந்த்ரனோ டுண்டான ஸம்பந்த மாகையாலே, உபய ஸாதாரணமா யிருக்கை. ஆசார்ய ஸம்பந்தமாகிறது, (ஆசார்யனைப் பற்றுகை) என்று கிழ்ச் சொன்ன ததாச்ரயணாரூப ஸம்பந்தம்; அது, (மோக்ஷத்துக்கே ஹேதுவாகையாவது), கர்மாநுகுணமாக ஸம்ஸரிக்கவும்விடும் ஸ்வதந்த்ர னன்றிக்கே ஸர்வ ப்ரகாரத்தாலு மிவனை யுஜ்ஜீவிப்பித்தே விடும் நிரதிசய க்ருபாவானோட்டை ஸம்பந்த மாகையாலே, ஸம்ஸார மோக்ஷங்களுக்குப் பொதுவன்றிக்கே ஸம்ஸார விமோசநைக ஹேதுவா யிருக்கை. இத்தால் மோக்ஷைக ஹேதுத்வ நிபந்தநமான வைபவம் சொல்லப்பட்டது.
சூர்ணையில் உள்ள “ஈச்வர ஸம்பந்தம்” என்பது சூர்ணை 427ல் கூறப்பட்ட “ஈச்வரனைப் பற்றுகை” என்பதான ஸர்வேச்வரனை அண்டி நிற்பதாகிய தொடர்பையே ஆகும். அந்தத் தொடர்பு, “பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருக்கும்” என்றது - நம்முடைய கர்மங்களுக்கு ஏற்றபடி ஸம்ஸாரத்தில் மீண்டும் ஆழ்த்தவும், தனது க்ருபையின் காரணமக மோக்ஷம் அளிக்கவும் வல்ல, தடையற்ற சுதந்திரம் நிறைந்த ஸர்வேச்வரனுடனான தொடர்பு என்பதால், இந்த இரண்டுக்கும் பொதுவாக இருக்கும் என்று கருத்து. “ஆசார்ய ஸம்பந்தம்” என்பது சூர்ணை 427ல் கூறப்பட்ட “ஆசார்ய ஸம்பந்தம்” என்ற ஆசார்யனை அண்டி நிற்பதான தொடர்பையே ஆகும். அது, “மோக்ஷத்துக்கே ஹேதுவாக இருக்கும்” என்றது – அந்தத் தொடர்பு கர்மங்களுக்கு விளைவாக மீண்டும் இந்த ஸம்ஸாரத்தில் உழலவிடுதல் என்பதைச் செய்யாமல், அனைத்துவிதத்திலும் ஜீவனைக் கரையேற்றுவதான எல்லையற்ற க்ருபை உள்ள ஒருவருடைய ஸம்பந்தம் என்பதால், பிறப்பு மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டுக்கும் பொதுவாக இல்லாமல், ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அளிக்க மட்டுமே காரணமாக உள்ளதாகும். இதன் மூலம் ஆசார்யன் மோக்ஷத்திற்கு மட்டுமே காரணமாக உள்ள வைபவம் கூறினார்.