Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 432)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஆசார்யனுக்கு ஸத்ருச ப்ரத்யுபகாரம் பண்ணாலாவது விபூதி சதுஷ்டயமும் ஈச்வர த்வயமு முண்டாகில்.

இன்னமு மொரு வழியாலே ஆசார்ய வைபவத்தை தர்சிப்பிக்கிறார் (ஆசார்யனுக்கு) என்று தொடங்கி.

மேலும் ஒருவிதத்திலும் ஆசார்யனுடைய மேன்மையை உணர்த்துகிறார்.

– அதாவது, உபயவிபூதியையும் விபூதிமானான வீச்வரனியும் தானிட்டது வழக்காம்படி பண்ணிக்கொடுத்த வாசார்யன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருசமாக ப்ரத்யபகாரம் பண்ணலாவது, இப்படியே இன்னமுமிரண்டு விபூதியும் விபூதிமானாயிருப்பானோ ரீச்வரனும் வேறோ யுண்டாகி லென்கை. “யோதத்யாத் பகவத் ஜ்ஞாநம் குர்யாத் தர்மோபஸேவநம், க்ருத்ஸ்நாம்வா ப்ருதிவீம் தத்யாந் ந தத்துல்யம் கதஞ்சந” என்னா நின்றதிறே. இத்தால், ஆசார்யனுடைய ப்ரத்யுபகா ராவகாச ரஹித மஹோபகார கர்த்ருத்வமாகிற வைபவம் சொல்லிற்றாய்த்து.

நித்யவிபூதி மற்றும் லீலாவிபூதி ஆகிய இரண்டையும், இந்த இரண்டு விபூதிக்கும் சொந்தக்காரனாகிய ஸர்வேச்வரனையும் ஜீவாத்மாவுடைய விருப்பத்திற்கு ஏற்ப நடக்கும்படி ஆசார்யன் உதவி செய்கிறார். இத்தகைய உதவிக்கு ஏற்ற கைம்மாறு செய்யவேண்டும் என்றால், இது போன்று மேலும் இரண்டு விபூதிகளும், இந்த இரண்டு விபூதிகளையும் உடைய மற்றொரு ஸர்வேச்வரனும் இருந்தால் மட்டுமே இயலும். யோதத்யாத் பகவத் ஜ்ஞாநம் குர்யாத் தர்மோபஸேவநம், க்ருத்ஸ்நாம்வா ப்ருதிவீம் தத்யாந் ந தத்துல்யம் கதஞ்சந - ஸர்வேச்வரன் குறித்த ஞானம் மற்றும் தர்மம் ஆகியவற்றைக் குறித்து எந்த ஆசார்யன் உபதேசம் செய்தாரோ அந்த ஆசார்யனுக்குக் கைம்மாறாக இந்த உலகம் முழுவதையும் அளித்து பணிவிடை செய்யவேண்டும். அவ்விதம் செய்தாலும் தகுந்த கைம்மாறு செய்ததாகாது - என்றது காண்க. இதன் மூலம் கைம்மாறு செய்ய இயலாத பேருதவி செய்த ஆசார்யனுடைய பெருமை மேலும் உணர்த்தப்பட்டது.