Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 431)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஆகையிறே குருபரம்பரையிலே அந்வயித்ததும், ஸ்ரீகீதையு மபயப்ரதாநமு மருளிச்செய்ததும்.

அதெங்கே கண்டதென்னு மபேக்ஷையிலே, அத்தை மூதலிக்கிறார் (ஆகையிறே) என்று தொடங்கி.

இவ்விதம் ஸர்வேச்வரன் உள்ளதை எங்கே காணலாம் என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஆசார்யத்வத்தை யாசைப்பட்டிருக்கையாலேயிறே, “ஸதாசார்ய வம்சோ ஜ்ஞேய:, ஆசார்யாணமஸாவஸா விதி ஆபகவத்த:” என்னும்படி குரு பரம்பரையிலே த்வயோபதேஷ்ட்ருத்வே நாந்வயித்ததும்; ஆசார்ய க்ருத்யத்தை யேறிட்டுக் கொண்டு அர்ஜுநனைக் குறித்து, தத்வ விவேகாதி சரமோபாய பர்யந்தார்த்த ப்ரதிபாதிகையான ஸ்ரீகீதை யருளிச்செய்ததும்; ஸ்ரீவிபீஷணாழ்வான் நிமித்தமாக, “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வபூதேப்யோததாம் யேதத் வ்ரதம் மம” என்று அபயப்ரதாந மருளிச்செய்தது மென்கை. இத்தால், ஈச்வரனு மாசைப்படும்படி யன்றோ ஆசார்யத்வத்தின் பெருமை யென்று ஆசார்ய வைபவம் சொல்லிற்றாய்த்து.

ஆசார்யனாக உள்ள நிலையை ஸர்வேச்வரன் ஆசைப்பட்டதால் அல்லவோ, ஸதாசார்ய வம்சோ ஜ்ஞேய:, ஆசார்யாணமஸாவஸா விதி ஆபகவத்த: - ஆசார்யனுடைய பரம்பரையை அறியவேண்டும், ஆசார்ய பரம்பரையில் உள்ள ஒவ்வொருவரையும் ஸர்வேச்வரன் முடிய அறிதல் வேண்டும் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஆசார்யபரம்பரையில் ஸர்வேச்வரன் பெரியபிராட்டிக்கு த்வயத்தை உபதேசிக்கும் ஆசார்யனாக வந்து நின்றான்? அதனால் அல்லவோ ஆசார்யனின் செயலைக் கைக்கொண்டவனாக, அர்ஜுனனை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு, தத்வ விவேகம் தொடக்கமாக, “தானே இறுதி உபாயம்” என்பது வரையிலான உபதேசங்களை உள்ளடக்கிய ஸ்ரீமத்பகவத்கீதையை வெளிப்படுத்தினான்? மேலும் விபீஷணனை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு, இராமாயணம் யுத்தகாண்டம் (18-35) – ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வபூதேப்யோததாம் யேதத் வ்ரதம் மம - என்னை ஒருமுறை சரணம் புகுந்தவனுக்கும், “உனக்கு நான் அடிமை” என்று என்னிடம் கூறுபவனுக்கும் அனைத்து உயிர்கள் மூலமாக உண்டாகவல்ல அச்சத்தை நீக்கி, அச்சம் இன்மையை அளிக்கிறேன்; இது எனது விரதம் – என்பதற்கு ஏற்ப உள்ளதான அபயப்ரதானம் அருளிச்செய்தான். இவை மூலம் ஸர்வேச்வரனும் ஆசைப்படும்படியாக அல்லவோ ஆசார்யனுடைய மேன்மை உள்ளது என்ற கருத்து உணர்த்தப்பட்டு, ஆசார்ய வைபவம் கூறப்படுகிறது.