Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 429)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஈச்வரனுக்கு சேஷவஸ்துவை யுபகரித்தான்; சேதநனுக்கு சேஷியை யுபகரித்தான்.
– இரண்டுதலைக்கு மிவனுபகரித்தவை யெவை யென்ன வருளிச்செய்கிறார் (ஈச்வரனுக்கு) என்று தொடங்கி.
ஸர்வேச்வரன் மற்றும் ஜீவாத்மா ஆகிய இருவருக்கும் ஆசார்யன் எவ்விதம் உபகாரம் செய்தார் அல்லது உதவி செய்யும் விதத்தில் அளித்தது என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது மேன்மேலும் ஸ்ருஷ்ட் யவதாராதிகளைப் பண்ணி வசீகரிக்கப் பார்த்த விடத்திலும் ஓராத்மவஸ்துவு மெட்டப்படாமையாலே இழவாளனா யிருக்கிற வீச்வரனுக்கு, சேஷமான வாத்மவஸ்துவை, அஜ்ஞாத ஜ்ஞாபநமுகேந திருத்தி இஷ்ட விநியோகார்ஹமாம்படி கைப்படுத்தினான்; பகவத் ஜ்ஞாநாபாவத்தாலே அநாதிகால மஸத்கல்பனாய்க் கிடந்த சேதநனுக்கு, பகவத் ஸம்பந்தத்தை யறிவித்து சேஷியான வவனைக் காட்டிக்கொடுத்தா னென்கை. இத்தால், ஆசார்யனுடைய சேதநேச்வரர்க ளிருவர்க்கு முபகாரகனாகையாகிற வைபவம் சொல்லப்பட்டது.
மேன்மேலும் ஸ்ருஷ்டிகள் செய்தும், அவதாரங்கள் பல எடுத்தும் வசீகரம் செய்ய முனைந்தாலும், ஒரு ஜீவாத்மாவும் தன்னை வந்து சேராமல் இழந்து நிற்கும் ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள ஜீவாத்மாவை, அந்த ஜீவாத்மாவுக்கு தெரியாதவற்றை உணர்த்தி, ஸர்வேச்வரனுடைய விருப்பத்தின்படி ஆசார்யன் ஜீவாத்மாவை ஸர்வேச்வரனுக்கு வசப்படுத்துகிறார். ஸர்வேச்வரனை அறியவல்ல ஞானம் மறைக்கப்பட்டு எல்லையற்ற காலம் இல்லாத ஒரு பொருள் போன்று கிடந்த ஜீவாத்மாவுக்கு, ஸர்வேச்வரனுடன் அவனுக்கு உள்ள ஸம்பந்தத்தை உணர்த்தி, அடிமையான அவனுக்கு எஜமானனாகிய ஸர்வேச்வரனைக் காண்பித்துக் கொடுக்கிறார். இதன் மூலம் ஸர்வேச்வரன், ஜீவாத்மா ஆகிய இருவருக்கும் ஆசார்யன் உதவி செய்கிறார் என்ற பெருமை உணர்த்தப்பட்டது.