Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 428)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஆசார்யன் இருவர்க்கும் உபகாரகன்.
– ஆக, ப்ராப்ய நிர்ணயத்தைப் பண்ணி, (இதுக்கு ஸத்ருசமாக வேணுமிறே ப்ராபகம்) என்றவித்தாலே, ஆசார்ய கைங்கர்யமாகிற சரமப்ராப்யத்துக்கு ஆசார்யனே ஸத்ருசோபாய மென்னுமத்தை ப்ரதிபாதித்து, அப்படியன்றிக்கே ஈச்வரனை யுபாயமாகக் கொள்ளுமளவில் வரும் விரோதங் காட்டி, ஆசார்யனுக்கு ப்ராப்யத்வ மீச்வரனோ டந்வயத்தாலேயாமோபாதி ப்ராபகத்வமும் ததநந்யத்வ நிபந்தந மென்னுமத்தையும் ஈச்வரனைப் பற்றுதல் இவனைப் பற்றுமதுக்குள்ள வேற்றத்தையுமருளிச் செய்தார் கீழ்; இனிமேல், பல ஹேதுக்களாலும் ஆசார்ய வைபவத்தை ப்ரகாசிப்பிக்கிறார், இவ்விஷயத்தை யுபாயமாகப் பற்றுமவர்களுக்கு ருசிவிச்வாஸங்கள் விளைகைக் குறுப்பாக. அதில் ப்ரதமத்திலே, ஈச்வர சேதநர்களிருவர்க்குமிவ னுபகாரக னானமையை யருளிச்செய்கிறார் (ஆசார்யன்) என்று தொடங்கி.
– ஆக, சூர்ணை 425ல், “இதுக்கு ஸத்ருசமாக வேணுமிறே ப்ராபகம் ” என்பதால், அடையப்பட உள்ள பேறு இன்னது என்று நிர்ணயம் செய்து, அதற்கான மார்க்கம் இவ்விதம் பொருத்தமாக இருத்தல்வேண்டும் என்று கூறியதால், ஆசார்ய கைங்கர்யம் என்ற பேறு கிட்ட ஆசார்யனே உபாயம் என்று விவரித்தார். இவ்விதம் கொள்ளாமல் ஈச்வரனை உபாயமாகக் கொண்டால் உண்டாகவல்ல முரண்பாட்டினையும் உரைத்தார். மேலும் ஆசார்யன் பேறாக உள்ள நிலை என்பது ஈச்வரனுடன் ஆசார்யனுக்கு உள்ள சம்பந்தம் காரணமாகவே என்பது போன்றே, ஆசார்யன் உபாயமாக உள்ள நிலை என்பது அவர் ஈச்வரனோடு ஒன்றாக உள்ளதால் ஆகும் என்பதையும் கூறினார். மேலும் ஈச்வரனைப் பற்றுதலைக் காட்டிலும் ஆசார்யனைப் பற்றுவதால் ஏற்படும் ஏற்றத்தையும் இதுவரை அருளிச்செய்தார். இனி, இந்த ஆசார்ய விஷயத்தைப் பற்றுபவர்களுக்கு அதில் ருசியும், விச்வாஸமும் ஏற்படுவதற்காக, பல காரணங்கள் மூலம் ஆசார்யனின் வைபவத்தை உரைக்க உள்ளார். முதலில் ஸர்வேச்வரன் மற்றும் சேதனன் ஆகிய இருவருக்கும் ஆசார்யன் செய்யும் உதவியை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, இப்படி யுபாயமாகக் கீழ்ச்சொல்லப்பட்ட வாசார்யன், சேஷிசேஷ பூதரான வீச்வர சேதந ரிருவர்க்கும் அபிமத வஸ்துக்களைக் கொடுத்த உபாகாரக னென்கை.
இவ்விதம் உபாயமாக உரைக்கப்பட்ட ஆசார்யன், அனைவருக்கும் எஜமானனாகிய ஸர்வேச்வரன் மற்றும் அடிமையான ஜீவாத்மா ஆகிய இருவருக்கும் வேண்டியதை அளித்து உபகாரங்கள் செய்கிறார் என்று கருத்து.