Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 427)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஈச்வரனைப் பற்றுகை கையைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி; ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்துக் கார்யங் கொள்ளுமோபாதி.

இப்ப்ரபந்தத்தி லுபக்ரமமே பிடித்து (ஸ்வதந்த்ரனை) இத்யாதி வாக்யத் தளவும், ஸித்தோபாயதயா ஸகல சாஸ்த்ர ஸித்தனான வீச்வரனை பரமோபாயமாகவும், ஆசார்ய னஜ்ஞாத ஜ்ஞாபநமுகேந உபகாரகனாகவுமிறே சொல்லிப் போந்தது; இப்போது, ஈச்வரனைவிட்டு ஆசார்யனே யுபாயமென்னுமளவில் சாஸ்த்ர விரோதமும் ஸ்வோக்தி விரோதமும் சம்பவியாதோ, ஈச்வரனை யுபாயமாகப் பற்றுமதிற் காட்டில் ஆசார்யனை யுபாயமாகப் பற்றினால்வரு மேற்றந்தானேதோ வென்கிற சங்கையின் மேலே யருளிசெய்கிறார் (ஈச்வரனைப் பற்றுகை) என்று தொடங்கி.

– இந்த நூலின் தொடக்கத்திலிருந்து, சூர்ணை 407ல் – ஸ்வதந்த்ரனை - என்பது முடிய, ஸித்தோபாயம் என்று அனைத்து சாஸ்த்ரங்களிலும் கூறப்படும் ஸர்வேச்வரனை மட்டுமே உயர்ந்த உபாயமாகவும், ஆசார்யன் என்பவர் அறியாதவற்றை உணர்த்தவல்ல உபாயமாகவும் அல்லவோ கூறி வந்தார்? இப்படி உள்ளபோது இங்கு ஸர்வேச்வரனை விடுத்து, ஆசார்யனே உபாயம் என்று கூறினால், சாஸ்த்ரத்தோடு மட்டும் அல்லாமல், தன்னுடைய பேச்சிலும் முரண்பாடு ஏற்படும் அல்லவோ? ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றுவதைக் காட்டிலும் ஆசார்யனை உபாயமாகப் பற்றினால் உண்டாகும் உயர்வு என்ன? இது போன்ற பல சந்தேகங்களுக்கு இந்தச் சூர்ணையில் விடை அருளிச் செய்கிறார்.

அதாவது, ஈச்வரனைப் பற்றுகை, அவன் கையைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி; ஆசார்யனைப் பற்றுகை, அவன் காலைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி யென்கை. இங்ஙனருளிச் செய்தது, ஈச்வர விஷயத்தோடு ஆசார்ய விஷயத்துக்குண்டான அநந்யத்வமும், அவ்விஷயத்தைப் பற்றுமதி லிவ் விஷயத்தைப் பற்றுமதுக் குண்டான கார்ய ஸித்தியில் அமோகத்வமும் தோற்றுகைக்காக. அதெங்ஙனே யென்னில்? சரணத்வோக்தியாலே ததநந்யத்வம் ஸம்பரதிபந்நம். (ஈச்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி) என்கையாலே - மஹாப்ரபுவா யிருப்பா னொருவனை வசீகரித்துக் காரியங் கொள்ளுவா னொருவன் அவன் கையைப் பிடித்து வேண்டிக்கொண்டு காரியங் கொள்ளப் பார்க்குமளவில், நீர்மையாலே நெஞ்சிளகிக் காரியஞ் செய்யவுமாய், ஸ்வாதந்த்ர்யத்தாலே உதறி விடவுமா யிருக்கையாலே இன்னபடி யென்று அறுதியிட வொண்ணாதாப்போலே, ஆச்ரிதனான விவனுடைய வபேக்ஷிதம் தன்னுடைய க்ருபையாலே நெஞ்சிளகிக் காரியஞ் செய்யில் பலிக்கும்படியாய், ஸ்வாதந்த்ர்யத்தாலே முறுகிச் செய்யாதொழியில் விபலிக்கும்படியா யிருக்கையாலும்; (ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி) என்கையாலே - அப்படி ப்ரபுவானவன்றன்னையே காலைப்பிடித்து வேண்டிக்கொண்டு காரியங்கொள்ளுமளவில் தயாபரவசனாய் காரியஞ் செய்தல்லது நில்லாமையாலே தப்பாமல் காரியம் ஸித்திக்குமாப்போலே, ஆச்ரிதனான விவனுடைய வபேக்ஷித மறுதியாக பலிக்கும்படி யிருக்கையாலும் அமோகத்வம் ஸம்ப்ரதிபந்நம்.

– ஸர்வேச்வரனைப் பற்றுதல் என்றால் அவனுடைய திருக்கரங்களைப் பிடித்து நம்முடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றது; ஆசார்யனைப் பற்றுதல் என்றால் அவருடைய திருவடியைப் பிடித்துக் கார்யம் நிறைவேற்றிக் கொள்ளுதல் போன்றது என்று கருத்து. இவ்விதம் கூறியது ஏன் என்றால்- ஈச்வர விஷயம் என்பது ஆசார்ய விஷயத்தைக் காட்டிலும் வேறு அல்ல; ஈச்வரனைப் பற்றுவதைக் காட்டிலும் ஆசார்யனைப் பற்றுவதன் மூலம் எண்ணும் காரியம் நிச்சயமாக நிறைவேறும் என்று உணர்த்தவே ஆகும். அது எப்படி? “காலைப் பற்றி” என்று கூறுவதால் ஈச்வரனுக்கும் ஆசார்யனுக்கும் வேறுபாடு இல்லை என்பது தெளிவாகிறது. (ஈச்வரனைப் பற்றுகை அவன் கையைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி) - மிகுந்த செல்வம் நிறைந்துள்ள ஒருவனை வசப்படுத்தி தன் செயலை நிறைவேற்றிக் கொள்ள ஒருவன் எண்ணினால், அந்தச் செல்வந்தனின் கையைப் பிடித்துக்கொண்டு தனது செயலை நிறைவேற்ற முயன்றால், அந்தப் பணக்காரன் தனது மனதில் உள்ள இரக்கம் காரணமாக அந்தச் செயலை நிறைவேற்றிக் கொடுக்கலாம் அல்லது தனது சுதந்திரம் காரணமாக அதனை உதறித் தள்ளவும் செய்யலாம். ஆகவே அந்தச் செயல் நிறைவேறுமா இல்லையா என்பது உறுதியல்ல என்றாகிறது. அதாவது தன்னை அண்டியவனுடைய விருப்பமானது அந்தப் பணக்காரன் தனது கருணையால் மனம் இரங்கினால் நிறைவேறும்படியும், தனது சுதந்திரத்தால் கர்வம் கொண்டால் நிறைவேறாதபடியும் ஆகலாம். (ஆசார்யனைப் பற்றுகை அவன் காலைப் பிடித்துக் காரியங் கொள்ளுமோபாதி) - ஆனால் அந்தச் செல்வந்தனுடைய கால்களைப் பிடித்துக் கொண்டு தனது விருப்பத்தைக் கூறி விண்ணப்பித்தால், அந்தப் பணக்காரன் மிகுந்த கருணை உள்ளவனாக மாறி, அந்தக் காரியத்தைச் செய்து கொடுக்காமல் இருக்கமாட்டான்; ஆக அந்தச் செயல் நிச்சயமாக நிறைவேறும் என்றாகிறது. ஆக, ஆசார்யனைப் பற்றுதல் என்பது ஸர்வேச்வரனுடைய திருவடிகளைப் பற்றுதல் போன்றதால், அடியவனாகிய இவன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும் என்று கருத்து.