Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 426)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

அல்லாதபோது ப்ராப்ய ப்ராபகங்களுக்கு ஐக்யமில்லை.

இப்படி யல்லாதபோது வரும் ஹாநியேதென்ன அருளிச்செய்கிறார் (அல்லாதபோது) என்று தொடங்கி.

இவ்விதம் கொள்ளவில்லை என்றால் ஏற்படும் தோஷம் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படி ப்ராப்யத்துக்கு ஸத்ருசமாம்படி ஆசார்யனை ப்ராபகமாகக் கொள்ளாதே ஈச்வரனை ப்ராபகமாகக் கொள்ளும்போது, ப்ராப்யத்துக்கும் ப்ராபகத்துக்கும் தன்னி லைக்யமில்லை யென்கை. ப்ரதம பர்வத்துக்குண்டான ப்ராப்ய ப்ராபகைக்யம், சரமபர்வத்துக்கு மொக்குமிறே; ஆகையாலேயிறே பிள்ளை யமுதனார், “பேறொன்று மற்றில்லை நின்சரணன்றி, அப்பேறளித்தற் காறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்க ளிரண்டு மேகவிஷயமேயாக அருளிச்செய்தது.

இவ்விதம் பேற்றுக்கு ஏற்றபடியான உபாயமாக ஆசார்யனைக் கொள்ளாமல் ஸர்வேச்வரனை உபாயமாகப் பற்றினால், பேற்றுக்கு அதனைப் பெற்றுத் தரவல்ல உபாயத்துக்கு ஒன்றுடன் ஒன்று ஒற்றுமை இல்லை என்று கருத்து. முதல் நிலையில் உள்ள “பேறு – உபாயம்” என்பதற்கு இடையே உள்ள ஒற்றுமை, இறுதி நிலையிலும் பொருந்தவேண்டும் அல்லவோ? இதனால்தான் திருவரங்கத்தமுதனார் இராமாநுச நூற்றந்தாதியில் (45) - பேறொன்று மற்றில்லை நின்சரணன்றி, அப்பேறளித்தற் காறொன்றுமில்லை மற்றச் சரணன்றி - என்று பலன் மற்றும் பலனைப் பெறும் உபாயம் ஆகிய இரண்டையும் ஒரே விஷயமாக அருளிச்செய்தார்.