Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 424)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

நித்யசத்ருவா யிறே யிருப்பது.

– இதில், க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்குமென்றவிது தன்பக்கலிலே அகப்பட்டாரைப் புறம்பொரு விஷயமறியாதபடி பண்ணும் இவ்விஷயத்தின் ஸ்வபாவம் சொல்லுகைக்காகக் கூட்டிக் கொண்டவித்தனை; புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கு மென்னுமதுவே இவ்விடத்தில் அபேக்ஷிதம்; ஆனபின்பு க்ஷுத்ர புருஷார்த்த பஞ்ஜகத்வம் ப்ராஸங்கிக மாகையாலே அத்தைவிட்டு ப்ராகரணிகமான சரம புருஷார்த்த பஞ்ஜகத்வத்தை மூதலிக்கிறார் (நித்ய சத்ருவாயிறே யிருப்பது) என்று.

சூர்ணை 423ல் கூறப்பட்ட “க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும்” என்பது, தன்னிடம் ஈடுபாடு கொண்டவர்களை மற்ற எந்த விஷயத்தையும் அறியாதபடி செய்யவல்ல பகவத் விஷயத்தின் தன்மையை உணர்த்துவதற்காகக் கூட்டிக்கொண்டார். இங்கு “புருஷார்த்த” என்று சொற்றொடரே அவசியமானதாகும். ஆகவே “க்ஷுத்ர” என்பது இந்த இடத்தில் வந்தேறிய கருத்து என்பதால், இங்கு கூறப்படும் விஷயத்திற்கு அது அவசியமற்றது என்று கருதி அதனைக் கைவிட்டு, இந்த இடத்திற்குப் பொருத்தமாக உள்ள “புருஷார்த்த” என்பதை இங்கு விவரிக்கிறார்.

– அதாவது, “சத்ருக்நோ நித்யசத்ருக்ந:” என்று, பெருமாளுக்கு அபிமத விஷயமான ஸ்ரீபரதாழ்வானையே தனக்கு உத்தேச்யமாகப் பற்றி அவனையல்ல தறியா தேயிருக்கும் ஸ்ரீசத்ருக்நாழ்வான் பரதாநுவ்ருத்திக்கு விரோதியான ராம ஸௌந்தர்யமாகிற நித்யசத்ருவை ஜயித்திருக்கு மென்கையாலே. ததீய கைங்கர்ய நிஷ்டனுக்கு நித்ய சத்ருவாயிறே பகவத் ஸௌந்தர்ய மிருப்பதென்கை. ஆகையால், இப்படி விலக்ஷணமான விஷயத்தில் ஸம்ச்லேஷ விச்லேஷங்களிரண்டும் புருஷார்த்த காஷ்டையைக் குலைக்குமென்னக் குறையில்லை என்று கருத்து. – அன்றிக்கே, கீழச் சொன்ன குணதோஷங்க ளிரண்டும் செய்யுமத்தை யருளிச்செய்கிறார் (குணதோஷங்களிரண்டும்) என்று தொடங்கி. குணமாவது, (இங்கு அது செய்ய வொண்ணாது) என்கிறவிடத்தில் சொன்ன பும்ஸாம் த்ருஷ்டி சித்தாப ஹாரியான ஸௌந்தர்ய சீலாதிகள்; தோஷமாவது, (குணம்போலே யுபாதேயமா யிருக்கும்) என்கிறவிடத்திற் சொன்ன “கடியன் கொடியன்” இத்யாதிகள். (இரண்டும் க்ஷுத்ர புருஷார்த்தத்தையும் புருஷார்த்த காஷ்டையையுங் குலைக்கும்) என்றது, ஓரொன்றே யிரண்டையும் செய்யுமென்றபடி. குணமிரண்டையும் செய்கையாவது, “மலைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாந் துறந்தார் தொழுதா ரத்தோள்” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கையும், ஸ்வவைலக்ஷண்யத்தாலே ஆழங்கால்படுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வ நிஷ்டையைக் குலைக்கையும்; தோஷமிரண்டையுங் குலைக்கையாவது, குணம்போலே உபாதேயமாய், அவனென்றே கிடக்கும்படி பண்ணுகையாலே ஊணுறக்கம், பந்து, கழல் முதலானவற்றில் பொருந்தாமையை விளைத்து க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கையும், “சிறுமா மனிசரா யென்னை யாண்டாரிங்கே திரிய, நறுமாவிரை நாண்மலரடிக்கீழ் புகுதல் உறுமோ” என்னும்படியான புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கையும் என்றிங்ஙனே யோஜிக்கவுமாம். இந்த யோஜநைக்கு, (நித்யசத்ரு) என்கிறவிது, ஸௌந்தர்யாதி குணவிசிஷ்ட வஸ்து விஷயமாகக் கடவது. அங்ஙனு மன்றிக்கே, குணம் புருஷார்த்த காஷ்டையைக் குலைக்கும், தோஷம் க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்கும் என்று இங்ஙனே விபஜித்து யோஜிப்பாருமுண்டு. அப்போதைக்கும், குணம் புருஷார்த்த காஷ்டையைக் குலைக்குமென்னுமதுக்கும், தோஷம் க்ஷுத்ர புருஷார்த்தத்தைக் குலைக்குமென்னுமதுக்கும் பூர்வ யோஜநைகளிற் சொன்னபடியே பொருளாகக் கடவது. இவ்விஷய ஸ்வபாவ மிதுவாகையாலே சரம பர்வமான ஆசார்ய கைங்கர்யமாகிற இதுதான் துர்லபமென்று ஸிம்ஹாவலோகந ந்யாயத்தாலே கீழோடே யந்வயம்.

இராமாயணம் அயோத்யாகாண்டம் (1-1) - சத்ருக்நோ நித்யசத்ருக்ந: – எப்போதும் சத்ருக்களாக உள்ள இந்த்ரியங்ளை வென்ற சத்ருக்னன் - என்று கூறுவதற்கு ஏற்ப உள்ள சத்ருக்னன், ஸர்வேச்வரனாகிய இராமனுக்கு மிகவும் ப்ரியமான பரதனையே தனக்கு உத்தேச்யம் என்று பற்றிய பரதன் அல்லாமல், வேறு எதனையும் அறியாதவன் ஆவான். அவன் பரதனுக்குத் தொண்டு செய்வதற்குத் தடையாக உள்ள “இராமனின் ஸௌந்தர்யம்” என்ற நித்யசத்ருவை வென்றவன் ஆவான். இவ்விதம் இராமாயணத்தில் கூறப்பட்டதன் மூலம், அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்தபடி உள்ளவன் என்ற ஒருவனுக்கு நித்யமான பகையாக உள்ளது ஸர்வேச்வரனுடைய அழகே ஆகும் என்று கருத்து. ஆகவே இவ்விதம் மிகவும் உயர்ந்த விஷயமான ஸர்வேச்வரன் விஷயத்தில் பிரிந்துள்ளதும் சேர்ந்துள்ளதும் என்ற நிலைகள் இரண்டும் (எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல்), புருஷார்த்தத்தின் எல்லையான பாகவத கைங்கர்யம் என்பதைக் குலைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கருத்து. – அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். அதாவது சூர்ணை 423ன் தொடக்கத்தில் கூறப்பட்ட குணங்கள் மற்றும் தோஷங்கள் ஆகிய இரண்டும் செய்வதை இங்கு “குணதோஷங்களிரண்டும்” என்று தொடங்கி அருளிச்செய்கிறார் எனலாம். குணம் என்பது சூர்ணை 416ல் “இங்கு அது செய்ய வொண்ணாது” என்று கூறப்பட்டதும், ஆண்களின் கண்கள் மற்றும் நெஞ்சம் ஆகிய இரண்டையும் அபகரிக்கவல்லதான அழகு மற்றும் சீலம் போன்றவையும் ஆகும். தோஷம் என்பது சூர்ணை 417ல் “குணம்போலே யுபாதேயமா யிருக்கும்” என்று கூறப்பட்டதும், திருவாய்மொழியில் (5-3-5) - கடியன் கொடியன் – என்று கூறப்பட்டதும் ஆகும். சூர்ணை 423ல் - (இரண்டும் க்ஷுத்ர புருஷார்த்தத்தையும் புருஷார்த்த காஷ்டையையுங் குலைக்கும் என்று கூறப்பட்டது என்னவென்றால், “குணம் அல்லது தோஷம்” ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மட்டுமே இரண்டு புருஷார்த்தங்களையும் குலைக்கும் – என்பதாகும். – குணம் இந்த இரண்டையும் செய்வது எப்படி என்று முதலில் அருளிச்செய்கிறார். இரண்டாம் திருவந்தாதி (42) - மலைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாந் துறந்தார் தொழுதா ரத்தோள் - என்பது போன்றவற்றில் கூறப்பட்டபடி, தாழ்ந்த புருஷார்த்தங்களைக் குலைக்கிறது; தனது அழகு போன்றவை மூலம் ஈடுபாடு உண்டாக்கி, புருஷார்த்தத்தின் எல்லைநிலமான அடியார்களிடம் ஈடுபாடுடன் இருத்தல் என்ற நிலையைக் குலைக்கிறது - இவை குணம் செய்யும் செயல்களாகும். அடுத்த தோஷம் இந்த இரண்டையும் செய்வது எப்படி என்று அருளிச்செய்கிறார். குணம் போன்று கைக்கொள்ளத்தக்கதாகவும், ஸர்வேச்வரனை மட்டுமே எப்போதும் ஈடுபடும்படிச் செய்வதாலும் உணவு, உறக்கம், பந்து, கழல் போன்ற எதிலும் மனம் பொருந்தாமையை ஏற்படுத்தி, தாழ்ந்த புருஷார்த்தங்கள் குறித்த ஈடுபாட்டைக் குலைக்கிறது. மேலும் திருவாய்மொழி (8-10-3) – சிறுமா மனிசரா யென்னை யாண்டாரிங்கே திரிய, நறுமாவிரை நாண்மலரடிக்கீழ் புகுதல் உறுமோ - என்பதற்கு ஏற்ப உள்ள புருஷார்த்தத்தின் எல்லையான அடியார்களிடம் ஈடுபடுதல் என்பதையும் குலைக்கிறது. – இவ்விதம் இரண்டாவது விதமாகப் பொருள் கொண்டால், சூர்ணை 424ல் உள்ள “நித்யசத்ரு” என்பது அழகு முதலான தன்மைகளுடன் கூடிய ஸர்வேச்வரன் என்ற பொருள் தரும். இந்த இரண்டுவிதத்திலும் அல்லாமல், சூர்ணை 423ல் கூறப்பட்ட “குணம்” என்ற பதம் புருஷார்த்தத்தின் எல்லையைக் குலைக்கும் (அதாவது அடியார்களிடம் ஈடுபடவிடாமல் தடுக்கும்) என்றும், தோஷம் என்ற பதம் தாழ்ந்த புருஷார்த்தத்தில் ஈடுபட விடாமல் குலைக்கும் என்றும் பிரித்துக் கூட்டிப் பொருள் உரைப்பவர்களும் உண்டு. இவ்விதம் கொண்டாலும், குணம் என்பது புருஷார்த்தத்தின் எல்லையைக் குலைக்கும் என்பதற்கும், தோஷம் என்பது தாழ்ந்த புருஷார்த்தத்தின் ஈடுபாட்டைக் குலைக்கும் என்பதற்கும் முன்பு கூறியபடியே பொருள் கொள்க. ஸர்வேச்வரனுடைய தன்மை இதுவாக உள்ளதால், கடைசி நிலையான ஆசார்ய கைங்கர்யம் என்னும் இதுவே கிட்டுவதற்கு அரியது என்பதை சிம்ஹாவலோகன நியாயத்தினால், கடந்த சூர்ணையுடன் சேர்த்து பொருள் கொள்ளவேண்டும் (சிம்ஹாவலோகன ந்யாயம் - தான் நடந்து வந்த பாதையை மீண்டும் நோக்குவது சிங்கத்தின் இயல்பு).