Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 423)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

குணதோஷங்களிரண்டும் க்ஷுத்ர புருஷார்த்தத்தையும் புருஷார்த்த காஷ்டையையும் குலைக்கும்.

(ப்ரதமபர்வத்தை விட்டு) என்கிறவிடத்திலே, அர்த்தாதுக்தமான பகவத் ஸம்ச்லேஷமும், (தோஷமுண்டானாலும்) என்கிறவிடத்தில், அர்த்தாதுக்தமான தத் விச்லேஷமுமாகிற இவையிரண்டும் செய்யுமத்தை அருளிச்செய்கிறார் (குண தோஷங்களிரண்டும்) என்று தொடங்கி.

சூர்ணை 415ல் “ப்ரதமபர்வத்தை விட்டு” என்பதில் ஆழ்ந்த பொருளாக மனதில் படுவதான “ஸர்வேச்வரனுடைய சேர்க்கை”, சூர்ணை417ல் “தோஷமுண்டானாலும்” என்பதில் ஆழ்ந்த பொருளாக உள்ள “ஸர்வேச்வரனுடைய பிரிவு” ஆகிய இரண்டு நிலைகளாலும் விளைவது என்ன என்பதை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– குணமாவது, ஸ்வஸௌந்தர்யாதிகளை ஆச்ரிதர்க்கு முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுத்துக் கொண்டிருக்குங் கலவி; தோஷமாவது, அவ்வநுபவாலாபத்தாலே அவர்கள் கண்ணாஞ்சுழலை யிட்டுத் துடிக்கத் தான் முகங்காட்டாதே யிருக்கையாகிற பிரிவு. இவை யிரண்டும், (க்ஷுத்ர புருஷார்த்தத்தையும் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கையாவது), ஓரொன்றே யிரண்டையும் குலைக்கை. இதில் குணமிரண்டையும் குலைக்கையாவது, “மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு” என்றும், “மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாந் துறந்தார் தொழுதாரத்தோள்” என்றும், தத்விஷய வைலக்ஷண்யத்தாலே க்ஷுத்ர விஷய வைராக்யத்தைப் பிறப்பிக்கையாலே, க்ஷுத்ர புருஷார்த்தாந்வயத்தைக் குலைக்கையும்; “பயிலுஞ்சுடரொளி” யிலே ததீயசேஷத்வத்திலே ஊன்றி நின்ற ஆழ்வாரை, அந்த ததீயருடைய ஸ்வரூபநிரூபகத்வேந ப்ரஸ்துதமான தத்ஸௌந்தர்ய சீலாதிகளாலே ததீயதாஸ்ய ரஸத்தை மறந்து அவனை அநுபவிக்கையிலாசை கரை புரண்டு அநந்தரந் திருவாய்மொழியிலே தாமும் தம்முடைய கரண க்ராமங்களும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிடும்படி பண்ணினாப்போலே, வேறொன்றுக்காகப் புகுந்தாலும் தன்னை யொழியப் புறம்பொன்றுக் காளாகாதபடி பண்ணும் த்ருஷ்டி சித்தாபஹாரியான அவன் பக்கலிலே சுழியாறுபடுத்தி புருஷார்த்த காஷ்டையான ததீய சேஷத்வத்தில் நிலையைக் குலைக்கையும். தோஷ மிரண்டையும் குலைக்கையாவது, அநுபவாலாப க்லேசத்தாலே ஸர்வகாலமும் தன்பக்கலிலே மநஸ்ஸாய், “உண்டறியா ளுறக்கம் பேணாள்”, “பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலுட்டாள் பாவைபேணாள்” என்கிறபடியே, முன்பநுபவித்துப் போந்த ப்ராக்ருத போகங்களாகிற க்ஷுத்ர புருஷார்த்தங்களில் பொருந்தாமையை விளைக்கையும்; “அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டா ரிங்கே திரிய, செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமாவிரை நாண்மலரடிக்கீழ்ப் புகுதல், உறுமோ பாவியேனுக்கு” என்றும், “தனிமாத் தெய்வத் தனிரடிக்கீழ் புகுதலன்றி யவனடியார், நனிமாக் கலவியின்பமே நாலும் வாய்க்க நங்கட்கு” என்றும் இப்படி தத்விஷய ஸம்ச்லேஷ ரஸம் வேண்டாதபடி ததீயவிஷய ஸம்ச்லேஷ ரஸமே அமையுமென்றிருக்கு மவர்களையும், அந்த ததீயருடனே கூடியிருந்தாலு மவர்கள் பக்கல் நெஞ்சற்று அவனை அநுபவிக்கையி லாசையாலே, “காணவாராய்”, “காணுமாறருளாய்” என்று கூப்பிடுவது, “வெஞ்சிறைப்புள்” இத்யாதிகளாலே அவர்கள் தங்களோடே வெறுத்து வார்த்தை சொல்லுவதாம்படி பண்ணுகையாலே, புருஷார்த்த காஷ்டையில் நெஞ்சு பற்றாதபடி பண்ணுகையும்.

– (குணம்) - ஸர்வேச்வரன் தனது ஸௌந்தர்யம் போன்ற பலவற்றையும் தனது அடியார்கள் அனுபவிக்கும் விதத்தில் முழுவதுமாகக் கொடுத்தபடி இருப்பதாகும். (தோஷம்) அப்படிப்பட்ட அனுபவம் கிட்டாதபோது அவர்கள் மதி மயங்கித் தவித்தபடிச் செய்வதான ஸர்வேச்வரனுடைய பிரிவு ஆகும். – (க்ஷுத்ர புருஷார்த்தத்தையும் புருஷார்த்த காஷ்டையும் குலைக்கையாவது) – இந்த இரண்டில் ஒவ்வொன்றே இரண்டையும் குலைப்பதாக உள்ளது. குணம் என்பது இரண்டையும் குலைக்கை என்பது எப்படி? இது இரண்டு விஷயத்தில் குலைக்கும் என்கிறார். முன்றாம் திருவந்தாதி (14) – மாற்பால் மனஞ்சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – என்றும், இரண்டாம் திருவந்தாதி (42) – மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாந் துறந்தார் தொழுதாரத்தோள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப பகவத் விஷயத்தின் மேன்மை காரணமாக தாழ்ந்த விஷயங்களின் மீது உள்ள ஈடுபாட்டைத் தவிர்த்து, அவற்றில் விருப்பம் இல்லாத நிலையை ஏற்படுத்துவதால், அற்பமான விஷயங்களில் உள்ள ஈடுபாட்டை இல்லாமல் ஆக்குகிறது. திருவாய்மொழி (3-7) - பயிலுஞ்சுடரொளி – என்னும் திருவாய்மொழியில் பாகவத கைங்கர்யத்தில் ஆழ்ந்து நின்ற ஆழ்வாரை, அந்த அடியார்களுடைய தன்மையை உணர்த்தும் விதத்தில் கூறப்பட்டதான ஸர்வேச்வரனுடைய அழகு, சீலம் போன்றவைகள் மூலம், அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்வதில் உள்ள சுவையை மறந்து ஸர்வேச்வரனை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை கரைபுரண்டு ஓடும்படிச் செய்து, அடுத்த திருவாய்மொழியில் (3-8) – முடியானே - என்று தானும் தன்னுடைய இந்த்ரியங்களும் மிகுந்த தாகம் எடுத்தவர்கள் தண்ணீருக்காக ஏங்குவது போன்று அழைக்கும்படிச் செய்தது (எதுவென்றால், அவனுடைய குணம்). இவ்விதம் ஆழ்வாரைச் செய்தது போன்று, அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்தல் முதலான செயல்களில் ஈடுபட்டாலும், தன்னைத் தவிர வேறு எதற்கும் அடிமையாக்காதவிதம் செய்பவனாக கண்ணையும் மனதையும் ஈர்த்தபடி உள்ள ஸர்வேச்வரனிடம் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளும்படிச் செய்து, புருஷார்த்தத்தின் எல்லையான அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்தல் என்ற நிலையைக் குலைக்கிறது. – அடுத்து, தோஷம் இரண்டையும் எவ்விதம் குலைக்கிறது என்கிறார். ஸர்வேச்வரனை அனுபவிக்கும் நிலைமை கிட்டாத காரணத்தால் ஏற்படும் துன்பத்தால் எப்போதும் அவனிடம் தங்கள் மனதை வைத்தவர்களாக, திருநெடுந்தாண்டகம் (12) - உண்டறியா ளுறக்கம் பேணாள் - என்றும், பெரியதிருமொழி (5-5-9) – பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பாலுட்டாள் பாவைபேணாள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப முன்பு தாங்கள் அனுபவித்தபடி இருந்த உலகியல் இன்பங்களான தாழ்ந்த பயன்களில் மனம் பொருந்தாமல் உள்ள நிலையை ஏற்படுத்துதல். திருவாய்மொழி (8-10-3) – அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டா ரிங்கே திரிய, செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமாவிரை நாண்மலரடிக்கீழ்ப் புகுதல், உறுமோ பாவியேனுக்கு, திருவாய்மொழி (8-10-7) – தனிமாத் தெய்வத் தனிரடிக்கீழ் புகுதலன்றி யவனடியார், நனிமாக் கலவியின்பமே நாலும் வாய்க்க நங்கட்கு - என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுடனான சேர்க்கை வேண்டாதபடி, அவன் அடியார்களுடைய சேர்க்கையால் இன்பம் ஏற்படும் என்று உள்ளவர்களைக் கூட, அவர்கள் அடியார்களுடன் சேர்ந்துள்ள காலத்திலும் அந்த அடியார்களிடம் ஈடுபடாமல், ஸர்வேச்வரனை அனுபவிக்கவேண்டும் என்ற ஆசை காரணமாக திருவாய்மொழி (8-5-2) - காணவாராய் – என்றும், (8-1-2) – காணுமாறருளாய் - என்றும் அவனை அழைத்தல், மற்றும் திருவாய்மொழி (1-4-1) - வெஞ்சிறைப்புள் - என்றும் கூறுவதற்கு ஏற்ப அடியார்களை வெறுத்து சொற்கள் உரைத்தல் போன்றவற்றைச் செய்யவைப்பதால், புருஷார்த்தத்தின் எல்லையான அடியார்களுக்கு கைங்கர்யம் என்பதில் மனம் நிற்காதபடி செய்தல்.