Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 422)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
நிர்க்ருணனாக சங்கித்துச் சொல்லுமவஸ்த்தையிலும் காரணத்தை ஸ்வகதமாகவிறே சொல்லிற்று.
அநந்தரம், பிராட்டியுடைய வசநத்தை தர்சிப்பிக்கிறார் (நிர்க்ருணனான) என்று தொடங்கி.
அடுத்து இந்த விஷயத்தில் சீதையின் வாக்குகளைக் காண்பிக்கிறார்.
– அதாவது, பிரிவாற்றாமையாலே பெருகக் கலங்கின ஸ்ரீஜநகராஜன் திருமகள், பெருமாள் தன்னாற்றாமைக் குதவவந்து முகங் காட்டப்பெறாத இன்னாப்பாலே, “க்க்யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராகவ: ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோசச்சங்கே” என்று, பெருமாளை நிர்க்ருணராக சங்கித்துச் சொல்லுகிற அவஸ்தையிலும், “மத்பாக்ய ஸங்க்ஷயாத்” என்று, இப்படி சங்கிக்கைக்கடி யென்னுடைய பாக்யஹாநி யென்கையாலே, சங்கா காரணத்தை ஸ்வகதமாகவிறே சொல்லிற்றென்கை.
தன்னுடைய பிரிவாற்றாமை காரணமக ஜனகனின் புத்ரியான சீதை, இராமன் தனது பிரிவாற்றாமை நீக்கும்விதம் வந்து உதவாமல் இருந்த காரணத்தால் மிகுந்த துன்பம் கொண்டாள். ஆனால் இராமாயணம் ஸுந்தரகண்டம் (26-13) – க்க்யாத: ப்ராஜ்ஞ க்ருதஜ்ஞச்ச ஸாநுக்ரோசச்ச ராகவ: ஸத்வ்ருத்தோ நிரநுக்ரோசச்சங்கே - உயர்ந்த அறிவுள்ளவன், நன்றி மறக்காதவன், இரக்கம் உள்ளவன், சிறந்த அறிவுள்ளவன், சிறந்த ஒழுக்கம் உள்ளவன் - என்று பலவிதமான உயர்ந்த தன்மைகள் கொண்ட இராமன், என்னுடைய புண்ணியக்குறைவு காரணமாக எனக்குக் கருணை காண்பிக்க இயலாமல் உள்ளானோ என்று ஸர்வேச்வரனைக் குணம் இல்லாதவனாகச் சந்தேகத்துடன் உரைக்கும் நிலையிலும் கூட, “மத்பாக்ய ஸங்க்ஷயாத் - எனது புண்ணியக்குறைவே இந்தச் சந்தேகத்தின் அடிப்படைக் காரணம்”, என்று அவனிடம் குணம் இல்லாமல் போயிற்றா என்று சந்தேகத்திற்கான காரணமும் தன்னிடமே உண்டு என்றது காண்க.