Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 421)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

இப்படி சொல்லும்படி பண்ணிற்று க்ருபையாலே யென்று ஸ்நேஹமும் உபகார ஸ்ம்ருதியும் நடந்ததிறே.

இவ்வுக்திதான் தாயார் சொன்ன குணஹாநிக்கு ஒரு பரிஹாரம் பண்ணின மாத்ரமோ, ஸஹ்ருதயமாகச் சொன்னதோ வென்கிற சங்கையிலே, இதன் ஸஹ்ருத்ய த்வத்தை மூதலிக்கிறார் (இப்படி) என்று தொடங்கி.

இவ்விதம் தாய் ஒருவள், “அவன் குணம் இல்லாதவன்” என்று உரைத்தது கேட்ட மகள், ஒரு சொல் அளவில் மட்டுமே “நீ கூறுவது போன்று அவன் இல்லை” என்று மறுத்தாளா அல்லது தனது மனப்பூர்வமாக இவ்விதம் உரைத்தாளா என்ற சந்தேகம் எழலாம். இந்தப் பெண் மனப்பூர்வமாகவே உரைத்தாள் என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, குணஹாநி சொன்னத்தைத் தள்ளி குணம் சொல்லும்படி பண்ணிற்று க்ருபையாலே யென்று, “மிக விரும்பும்” என்று, ஸ்நேஹமும், “பிரான்” என்று உபகார ஸ்ம்ருதியும் நடந்ததிறே; ஆகையால் “தகவுடையவனே” என்றவிது ஸஹ்ருதயோக்தி யென்கை.

தன்னுடைய தாயானவள், “அவன் குணம் அற்றவன்” என்று கூறியதைக் கேட்டு, அந்தச் சொற்களைத் தள்ளிய மகள், “அவன் குணம் உள்ளவன்” என்று உரைக்கும்படியாகச் செய்தது எதுவென்றால், ஸர்வேச்வரனிடம் உள்ள கருணை காரணமாகவே ஆகும் என்று அறியவேண்டும். இதனை அடுத்துள்ள திருவாய்மொழி (2-4-6) – மிக விரும்பும் - என்பதால் வெளிப்படும் சிநேஹம் மூலமும், (2-4-6) – பிரான் - என்று அவன் காண்பித்த சிநேஹத்திற்கு நன்றி கூறுவதன் மூலமும் மகள் உரைத்தாள் அல்லவோ? எனவே, (2-4-6) – தகவுடையவனே - என்று உரைத்தது மனப்பூர்வமாகவே ஆகும் என்று கருத்து.