Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 420)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

நிர்க்ருணனென்று வாய் மூடுவதற்கு முன்னே க்ருணாவானென்று சொல்லும்படியா யிருந்ததிறே.

விச்லேஷ தசையில் தோற்றும் நைர்க்ருண்யாதி தோஷத்தை அங்கீகரித்து, அதுதான் குணவதுபாதேயமாயிருக்கும்படியை அருளிச்செய்தார் கீழ்; அந்த நைர்க்ருண்யாதி தோஷந்தான் முதலிலே இவ்விஷயத்தி லில்லை யென்னுமிடத்தை அபியுக்த வசநங்களாலே தர்சிப்பிக்கிறார் மேல். அதில் முதலிலே, ஆழ்வாருடைய வசநத்தை தர்சிப்பிக்கிறார்.

(நிர்க்ருணன் என்றால் அருள் அற்றவன் என்று பொருள்). பிரிந்துள்ள நிலையில் தோன்றுவதான கடியன், கொடியன் போன்றவை குற்றங்களாக இருப்பதாகத் தோன்றினாலும், அவற்றைக் குணமாகவே ஏற்பதைக் குறித்துக் கடந்த சூர்ணையில் அருளிச்செய்தார். ஆனால் உண்மையில் “கருணை அற்றவன்” முதலான குற்றங்கள் அவனிடம் இல்லை என்பதை, நம்பத் தகுந்தவர்களுடைய வாக்குகள் கொண்டு உரைக்கிறார். அவற்றில் முதலில் ஆழ்வாருடைய வாக்கு கொண்டு அருளிச்செய்கிறார்.

– அதாவது, “என தவளவண்ணர் தகவுகளே” என்று எங்ஙனே யிருந்தன சுத்த ஸ்வபாவரான உம்முடைய க்ருபைகள், நாட்டிலே இப்படி ருஜுக்களுமாய் பரது:காஸஹிஷ்ணுக்களுமா யிருப்பார் சில தார்மிகர் நடையாட அபலைகளுக்கு அழகிதாகக் குடிக்கிடக்கலா யிருந்ததென்று, பெண்பிள்ளை யாற்றாமைக் குதவாதது கொண்டு திருத்தாயார் நிர்க்ருணனென்று வாய் மூடுவதற்கு முன்னே, அவள் வாயைப் புதைத்தாப்போலே “தகவுடையவனே” என்று, கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ, அது நங்குற்றங்காண் என்று க்ருணாவத்தையைச் சொல்லும்படியா யிருந்ததிறே யென்றபடி.

– “திருவாய்மொழி (2-4-5) - என தவளவண்ணர் தகவுகளே - என்ற பாசுரத்தில் ‘அடியார்கள் விஷயத்தில் சுத்தஸ்வபாவம் உள்ளவன்’ என்று கூறியபடி இருந்த உனது கருணைகள் எங்கே போயின? நாட்டில் இவ்விதம் உன்னைப் போன்ற நேர்மை தவறாதவர்களும், மற்றவர்களுடைய துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள இயலாதவர்களுமாகிய சில தர்மவான்கள் நடமாடினால், இங்கு பெண்கள் மிகவும் சுகமாக வாழலாம்”, என்று தாய் ஒருவள் தனது பெண் விஷயத்தில் அவன் இரக்கம் கொண்டு உதவாமல் இருந்தது குறித்து, அவன் கருணை அற்றவன் என்று உரைத்தாள். அவ்விதமாக உரைத்து அவள் தனது வாயை மூடுவதற்கு முன்பாகவே, அந்தத் தாயின் மகள், திருவாய்மொழி (2-4-6) – தகவுடையவனே - என்று கூறினாள். அதாவது தனது தாயிடம் அந்தப் பெண், “நீ உரைப்பது தவறாகும். கருணையின் இருப்பிடமும் பிறப்பிடமும் என்றுள்ள ஒருவனிடம் கருணை இல்லை என்று நீ கூறுவது சரியா? அவன் தனது கருனையை நம்மிடம் கான்பிக்காதது நமது குற்றம் காரணமாக அல்லவோ?”, என்று அவனுடைய கருணையின் பூர்ணத்வம் குறித்து உரைப்பது போன்றதாக அல்லவோ காணலாம்!