Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 419)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

குணம் உபாதேயமாகைக்கீடான ஹேது தோஷத்துக்கு முண்டிறே.

– எல்லாஞ் செய்தாலும் தோஷம் குணம்போலே உபாதேயமாகக் கூடுமோ வென்னு மாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (குண முபாதேயமாகைக்கு) என்று தொடங்கி.

எவ்விதமாகச் சமாதானம் உரைத்தாலும், குற்றம் என்பதைக் குணமாகக் கருதிக் கைக்கொள்ள இயலுமோ என்ற சந்தேகத்திற்கு இங்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, பகவத்குணம் தத்ப்ரவணர்க்கு உபாதேயமாகைக்கீடான ப்ராப்த சேஷிகதத்வமாகிற ஹேது, அவ்விஷயத்தில் தோற்றுகிற தோஷத்துக்கு முண்டிறே யென்கை. இத்தால், அவன் பக்கலுள்ள தென்னுமத்தாலே குண முபாதேயமாகிற வோபாதி, அவன் பக்கலுள்ள தென்னுமத்தைப்பற்ற தோஷமு முபாதேயமாகக் குறையில்லை என்றதாய்த்து. இப்படியாகையாலே தோஷமுண்டானானுமது மீளுகைக் குடலாகாதென்று கருத்து.

ஸர்வேச்வரனுடைய குணமானது அவனிடம் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபட்டபடி உள்ளவர்களுக்குக் கைக்கொள்ளும்படியாக உள்ளதன் காரணம், “இவன் நமக்கு இயல்பான எஜமானன்” என்பதால் ஆகும். அதே போன்று அவன் நமக்கு எஜமானனாக உள்ளதால் அவனிடம் தோஷங்கள் என்று நமக்குத் தோன்றுவதும் கைக்கொள்ளத் தக்கவையே ஆகும். ஆகவே அவனிடம் உள்ளவை என்ற காரணத்தால் குணங்கள் எவ்விதம் கைக்கொள்ளத்தக்கவையாக உள்ளனவோ அதே போன்று, அவனிடம் உள்ளது என்று நமக்குத் தோன்றும் காரணத்தால் குற்றங்களும் கைக்கொள்ளத் தக்கவையே ஆகும் என்று கருத்து. ஆகவே அவனிடம் தோஷம் உள்ளது என்று தோன்றினாலும், அது அவனை விட்டு நாம் அகலக் காரணம் ஆகாது என்று கருத்து.