Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 417)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
தோஷமுண்டானாலும் குணம் போலே உபாதேயமா யிருக்கும்.
க்ஷுத்ர விஷயங்களுக்குச் சொல்லுகிற தோஷமொன்று மிங்குச் சொல்லலாவதில்லையேயாகிலும், ஸ்வவிஷய பக்திபரவசர்க்கு ஸ்வஸம்ச்லேஷ ஸுகத்தை உருவ நடத்தாதே விச்லேஷித்து துக்கத்தை விளைக்கையாலே “கடியன் கொடியன்” இத்யாதிப்படியே சொல்லலாம்படி தோற்றுவன சில தோஷமுண்டே; அதுதான் மீளுகைக் குடலானாலோவொன்ன அருளிச்செய்கிறார் (தோஷ முண்டானாலும்) என்று தொடங்கி.
தாழ்ந்த விஷயங்களுக்கு உரைக்கப்பட்ட தோஷங்கள் ஏதும் பகவத் விஷயத்திற்குக் கூற இயலாது. ஆனாலும் தன்னிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்களுக்கும் தன்னுடன் சேர்ந்து இருக்கவல்ல சுகத்தைப் பூர்ணமாக அவன் அளிப்பதில்லை. ஆகவே திருவாய்மொழி (5-3-5) - கடியன் கொடியன் - என்று கூறுவதற்கு ஏற்ப அவனிடம் சில தோஷங்கள் உண்டு அல்லவோ? அதன் காரணமாகப் பகவத்விஷயத்தில் ஈடுபட்டவர்கள் அவனை விட்டு அகன்று போவதற்கு வாய்ப்பு உண்டு அல்லவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அப்படி ஆற்றாமையாலே தோற்றுவன சில தோஷ முண்டானாலும், “கொடிய வென்னெஞ்ச மவனென்றே கிடக்கும்” என்று அவை தன்னையே விரும்பி மேல்விழும்படி இருக்கையாலே ஹேயமாயிராது, விஷயத்தை விரும்பி மேல் விழுகைக்குடலான குணம்போலே உபாதேயமா யிருக்குமென்கை.
அதாவது பிரிவாற்றாமை காரணமாக ஏற்படும் தோஷங்கள் அவனிடம் உள்ளது என்று தோன்றினாலும், திருவாய்மொழி (5-3-5) – கொடிய வென்னெஞ்ச மவனென்றே கிடக்கும் - என்பதற்கு ஏற்ப, அவனையே விரும்பி அவனிடம் ஈடுபாடுடன் உள்ளதன் காரணமாக, தோஷமாகத் தோன்றும் அவை தாழ்ந்தவையாக இருப்பதில்லை. அவையே, அவனை மேலும் விரும்பி ஈடுபாடு அடையத்தக்க குணங்களாகக் கைக்கொள்ளும்படியாக இருக்கும் என்று கருத்து.