Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 416)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
அங்கு தோஷதர்சநத்தாலே மீளலாம்; இங்கு இது செய்ய வொண்ணாது.
அதெங்ஙனே யென்னுமாகாங்க்ஷையிலே அருளிச்செய்கிறார் (அங்கு) என்று தொடங்கி.
ஆசார்ய கைங்கர்யத்தை அடைவது எளிதல்ல என்றால், “அது எப்படி?” என்று கேட்கலாம். இதற்கான விடையை அருளிச்செய்கிறார்.
– அதாவது, க்ஷுத்ர விஷயங்களின் தேஹதோஷாதிகளும் அல்பாஸ்திரத்வாதி தோஷங்களு முண்டாயிருக்கையாலே அவற்றை தர்சிக்கவே அருவருத்து மீளலாயிருக்கும்; விலக்ஷண விக்ரஹ யுக்தமாய் ஸமஸ்தகல்யாண குணாத்மகமாய் நித்யமாய் அபரிச்சேத்யமான இவ்விஷயத்தில் தோஷகந்த மில்லாமையாலே தோஷதர்சநம் பண்ணி மீளப்போகாதென்கை. “ஸங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷாச்ச சார்ங்கிண: ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி ரபாவாதேவ பச்சிம:” என்னக்கடவதிறே.
தாழ்ந்த விஷயங்களில் சரீரத்தின் தோஷங்கள் உள்ளதாலும், அந்த விஷயங்கள் அற்பமாக உள்ளதாலும், ஸ்திரமற்றவையாக உள்ளதாலும் அவற்றை உணர்கின்ற ஒருவன் அருவருப்பு கொண்டவனாக அவற்றைக் கைவிட்டு விடுவான். ஆனால் மிகவும் உயர்ந்ததான திருமேனி உள்ளதாகவும், அனைத்துவிதமான திருக்கல்யாண குணங்கள் கொண்டதாகவும், எப்போதும் உள்ளதாகவும், அளவிட இயலாததாகவும் உள்ள பகவத்விஷயத்தில் எந்தவிதமான தோஷங்களும் இருப்பதில்லை என்பதால் தோஷங்களைக் காரணம் காண்பித்துக் கைவிட இயலாது என்று கருத்து. ஸங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷாச்ச சார்ங்கிண: ஆநந்த்யாத் ப்ரதமோ ராசி ரபாவாதேவ பச்சிம: - சார்ங்கம் என்னும் வில் தரித்த ஸர்வேச்வரனுடைய குணங்களை எண்ண இயலாது, எத்தனை எண்ண முயன்றாலும் தோஷங்களை எண்ண இயலாது. குணங்கள் அளவற்றவை என்பதால் எண்ண இயலாது; தோஷங்கள் இல்லாமையால் எண்ண இயலாது – என்றது காண்க.