Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 413)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஸ்வரூப ப்ராப்தியை சாஸ்த்ரம் புருஷார்த்தமாகச் சொல்லாநிற்க, ப்ராப்தி பலமாய்க் கொண்டு கைங்கர்யம் வருகிறாப்போலே ஸாத்ய விவ்ருத்தியாய்க் கொண்டு சரமபர்வம் வரக்கடவது.

இப்படி ஆசார்ய கைங்கர்யமே சரமபர்வமென்று சாஸ்த்ரஞ் சொல்லாதிருக்கச் செய்தே, இது வருகிறவழிதா னென்னென்கிற சங்கையிலே யருளிச் செய்கிறார் (ஸ்வரூப ப்ராப்தியை) என்று தொடங்கி.

இப்படியாக ஆசார்யகைங்கர்யம் என்பது இறுதிபர்வம் என்று சாஸ்த்ரங்கள் கூறவில்லை என்றாலும், இதனை எவ்விதம் உறுதியாக உரைக்க இயலும் என்ற சந்தேகத்திற்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, “பரஞ்ஜ்யோதி ருபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே” என்று, ப்ராப்தி பூர்விகையாய் அநாதிகர்மநிபந்த நாசித் ஸம்பந்தத்தாலே மலாவகுண்டித மணிப்ரபைபோலே திரோஹிதமாக ஸ்வாஸாதாரணாகாரத்தினுடைய ஆவிர்ப்பாவ ரூபையான ப்ராப்தியை வேதாந்த சாஸ்த்ரம் புருஷார்த்தமாகச் சொல்லா நிற்க, இப்படி ஆவிர்ப்பூதமான ஸ்வரூபத்தையுடைய வாத்மா, சேஷகத்வைக நிருபணீயதயா சேஷிவிஷய கிஞ்சித்காரத்தாலல்லது செல்லாதபடியாய் இருக்கையாலே, அந்த ஸ்வரூப ப்ராப்தி பலமாய்க் கொண்டு பகவதநுபவ ஜநித ப்ரீதிகாரித கைங்கர்யம் வருகிறாப்போல, சேஷியான பகவானுக்கு ஸ்வவிஷய கிஞ்சித்காரத்திலும் ஸ்வகீயவிஷய கிஞ்சித்கார முகப்பாகையாலே, அந்த பகவத் கைங்கர்யமாகிற ஸாத்யத்தின் வ்ருத்தி ரூபமாய்க் கொண்டு மத்யமபர்வமான பாகவத கைங்கர்யம் வரகடவதாய், அந்த பாகவதர்க ளெல்லார்க்கும் ஸ்வவிஷய கிஞ்சித்காரத்திலும் தனக்குபகாரகனான வாசார்ய விஷயத்தில் கிஞ்சித்காரமே யுகப்பாகையாலே அந்த ஸாத்யத்தினுடைய விசேஷ வ்ருத்தியாய்க் கொண்டு சரமபர்வமான வாசார்ய கைங்கர்யம் வரக் கடவதென்கை.

சாந்தோக்ய உபநிஷத் (8-12-2) – பரஞ்ஜ்யோதி ருபஸம்பத்ய ஸ்வேநரூபேண அபிநிஷ்பத்யதே - சரீரத்தில் இருந்து புறப்படும் ஜீவன் பரஞ்ஜோதியான ஸர்வேச்வரனை அடைந்து, தனது ஸ்வரூப மலர்ச்சியைப் பெறுகிறான் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனை அடைந்தவுடன், எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள கர்மங்களால் ஏற்பட்ட சரீரத் தொடர்பினால், அழுக்கு கொண்டு மறைக்கப்பட்ட இரத்தினத்தின் பிரகாசம் போன்று, மறைக்கப்பட்ட தன்னுடைய ஸ்வரூபம் வெளிப்படுதல் என்பதான “பகவானை அடைதல்” என்பதை, வேதாந்த சாஸ்த்ரங்கள் ஜீவாத்மாவின் புருஷார்த்தமாக உரைக்கின்றன. இவ்விதம் தனது ஸ்வரூபம் விளங்கப்பெற்ற ஆத்மா, ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டிருத்தல் என்ற தன்மையால் மட்டுமே அறியப்படுவதாக உள்ளதால், அந்த ஸர்வேச்வரனுக்குச் செய்யும் கைங்கர்யம் அல்லாமல் மற்ற எதனாலும் விளங்காதபடி உள்ளது; இவ்விதம் வெளிப்பட்ட ஸ்வரூபத்தினைத் தனது பலமாகக்கொண்டு, ஸர்வேச்வரனுடைய அனுபவம் காரணமாக ஏற்படுகின்ற ப்ரீதியின் விளைவான கைங்கர்யம் வருவது போன்று, தனக்குக் கைங்கர்யம் செய்வதைக் காட்டிலும் தனது அடியார்களுக்குக் கைங்கர்யம் செய்வதால் ஸர்வேச்வரன் மகிழ்வதால், பகவத் கைங்கர்யம் என்பதான பலத்தின் அடிப்படையில் நடுவில் உள்ள நிலையான பாகவத கைங்கர்யம் ஏற்படுகிறது; அந்தப் பாகவதர்கள் அனைவருக்கும், தங்களுக்குச் செய்யும் கைங்கர்யத்தைக் காட்டிலும், தங்களுக்குப் பேருதவி செய்யும் ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யமே மகிழ்வை ஏற்படுத்துவதால், இந்தப் பலத்தின் மேன்மையான வளர்ச்சியான இறுதி நிலையான ஆசார்ய கைங்கர்யம் வருகிறது என்று கருத்து.