Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 412)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ப்ராப்யத்துக்கு ப்ரதமபர்வம் ஆசார்யகைங்கர்யம்; மத்த்யமபர்வம் பகவத்கைங்கர்யம்; சரமபர்வம் பாகவதகைங்கர்யம்.

– (ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்க வேணுமிறே) என்ற விடத்தில், ஸ்வரூபத்தை யொருவழியாலிசைந்து, பகவத் கைங்கர்யமன்றோ ப்ராப்யம், ப்ராப்யத்துக்கு ஸத்ருசமாக வேணுமென்றபடி யெங்ஙனே? என்பாருடைய சங்கையைப் பரிஹரிக்கைக்காக, ப்ரதமம் ப்ராப்யவேஷத்தை ஓடவைத்துக் காட்டுகிறார் (ப்ராப்யத்துக்கு) என்று தொடங்கி.

சூர்ணை 410ல் – ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்க வேணுமிறே – என்று அருளிச்செய்தார். ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தை மட்டுமே நன்றாக உணர்ந்தபடி, அவனுக்குக் கைங்கர்யம் செய்வது என்பது அல்லவோ பெரும் பேறாகும்? ஆனால் அந்தப் பேற்றுக்குச் சமமாக இருத்தல்வேண்டும் என்று கூறுவது எப்படி என்று சிலர் கேட்கலாம். இதற்கு விடையாக, பேறு என்பது இன்னது என்று முதலில் கூறுகிறார்.

– (ப்ராப்யமாவது) - சேஷத்வைக நிரூபணீயமான ஆத்மவஸ்துவுக்கு புருஷார்த்தமான கைங்கர்யம். பர்வசப்தம், அம்சவாசி. இங்கு, ப்ரதம பர்வமாகச் சொல்லுகிற ஆசார்ய கைங்கர்யமாவது, “திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கியபின்” என்கிறபடியே முதலடியிலே தன்னையங்கீகரித்து பகவத் விஷயத்துக் காளாம்படி திருத்தின ஆசார்யனுக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் கைங்கர்யம்; மத்யம பர்வமாகச் சொல்லுகிற பகவத் கைங்கர்யமாவது “அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்” என்கிறபடியே தானுகந்தாரைத் தன்னடியார்க்கடிமைப் படுத்தும் பகவானுக் குகப்பாகப் பண்ணும் பாகவத கைங்கர்யம், சரமபர்வமாகச் சொல்லுகிற பாகவத கைங்கர்யமாவது, ஆசார்யவானென் றுகக்குமவர்களாய், ஆசார்யவைபவ ஜ்ஞாபகராய், ஆசார்ய கைங்கர்யத்தி னேற்ற மறியுமவர்களான பாகவதர்களெல்லார்க்கு முகப்பாகப் பண்ணு மாசார்ய கைங்கர்யம். ஆக ஆசார்ய ப்ரீதி விஷயமான பகவத் கைங்கர்யத்தை ஆசார்ய கைங்கர்யமென்றும், பகவத் ப்ரீதி விஷயமான பாகவத் கைங்கர்யத்தை பகவத் கைங்கர்ய மென்றும், பாகவத ப்ரீதி விஷயமான வாசார்ய கைங்கர்யத்தை பாகவத கைங்கர்ய மென்றும் சொல்லிற்றாய்த்து. ஆகையால், ஆசார்ய கைங்கர்யம் ப்ராப்யமென்று சொன்ன விதில் குறையில்லையென்று கருத்து.

– ப்ராப்யம் என்றால் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாக உள்ள நிலை என்பதைத் தனது தன்மையாகக் கொண்டுள்ள் ஜீவாத்மாவுக்கு பயனாக உள்ள கைங்கர்யம் ஆகும். பர்வம் என்று சூர்ணையில் உள்ள பதம் “ஒரு பகுதியாகும்” என்ற பொருளை அளிப்பதாகும். இங்கு முதல் பர்வம் என்று கூறப்படும் ஆசார்ய கைங்கர்யம் என்றால் இராமானுச நூற்றந்தாதி (78) – திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கியபின் - என்பதற்கு ஏற்ப, தொடக்கத்திலேயே தன்னை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டும், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமையாக இருத்தல் வேண்டும் என்று திருத்திய ஆசார்யனுடைய மனம் மகிழும்படியாகச் செய்யும் பகவத்கைங்கர்யம் ஆகும். மத்யம பர்வம் என்று கூறப்படும் பகவத்கைங்கர்யம் என்றால், அமலனாதிபிரான் (1) – அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன் - என்று கூறுவதற்கு ஏற்ப, தான் யாரை அதிகமாக விரும்புகிறானோ அவர்களைத் தனது அடியார்களுக்கு அடிமைப்படுத்துகின்ற ஸர்வேச்வரனுடைய திருவுள்ளம் மகிழும்படியாகப் பாகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யம் ஆகும். இறுதிபர்வமாகக் கூறப்படும் பாகவத்கைங்கர்யம் என்றால், “சிறந்த ஆசார்யனைக் கொண்டவன்” என்று மகிழ்பவர்களாகவும், ஆசார்யனுடைய மேன்மைகளை எப்போதும் நினைவுபடுத்துபவர்களாகவும், ஆசார்யனின் மேன்மைகளை உணர்ந்தவர்களாகவும் உள்ள பாகவதர்கள் அனைவரும் மகிழ்ந்து நிற்கும்விதமாக ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யமே ஆகும். ஆகவே ஆசார்யன் மகிழும்படியாகச் செய்யப்படும் பகவத்கைங்கர்யம் என்பது ஆசார்யகைங்கர்யம் என்றும், பகவான் மனம் குளிரும்படிச் செய்யப்படும் பாகவதகைங்கர்யம் என்பது பகவத்கைங்கர்யம் என்றும், பாகவதர்கள் மகிழும்படியாகச் செய்யப்படும் ஆசார்யகைங்கர்யம் என்பது பாகவத கைங்கர்யம் என்றும் கூறப்பட்டது. எனவே “ஆசார்ய கைங்கர்யமே எப்போதும் அடையத் தக்கது” என்று கூறியதில் எந்தவிதமான தோஷமும் இல்லை என்று கருத்து.