Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 411)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

வடுகநம்பி ஆழ்வானையு மாண்டானையு மிருகரைய ரென்பர்.

இவ்வர்த்த விஷயமாக ஓரைதிஹ்யத்தை யருளிச்செய்கிறார் மேல் (வடுகநம்பி) என்று தொடங்கி.

இந்தக் கருத்தினை அடியொட்டியுள்ள ஒரு சம்பவத்தை உரைக்கிறார்.

– அதாவது, ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீமதுரகவிக ளிருந்தாப்போலே, ப்ராப்ய ப்ராபகங்களிரண்டு மெம்பெருமானார் திருவடிகளே என்று ப்ரதிபத்தி பண்ணி “தேவுமற்றறியேன்” என்றிருக்கும் வடுகநம்பி; எம்பெருமானார்க்கு நிழலுமடிதாறும் போலே அவிநாபூதராய் “ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே”, “ராமாநுஜார்யவசக: பரிவர்த்திஷீய” என்று உபயோபேயங்க ளவர்திருவடிகளும் அத்திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமுமென் றிருக்கும் கூரத்தாழ்வானையும், தாத்ருசரான முதலியாண்டானையும், ஸம்ஸாரத்திலிருப்பி லடிக்கொதிப்பாலேவந்த ஆர்த்தியின் மிகுதியாலே கலங்கி காதாசித்கமாகப் பெருமாள் பக்கலிலும் சென்று பல்காட்டுவது, தத்வைலக்ஷண்யங் கண்டவாறே ப்ரவணராய்ப் போருவதா மிவ்வளவைக்கொண்டு எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமானால் “தேவுமற்றறியேன்” என்றிருக்க வேண்டாவோ, அங்ஙனன்றிக்கே சரமாவதியிலும் ப்ரதமாவதியிலும் கைவைத்து நிற்கிற விவர்க ளிருகரைய ரென்றருளிச்செய்வ ரென்றபடி.

ஆழ்வாருடைய திருவடிகளே கதி என்று ஸ்வாமி மதுரகவிகயாழ்வார் இருந்தது போன்று, ஸ்வாமி எம்பெருமானார் திருவடிகளே பேறாகவும், அந்தப் பேற்றினை அடைய உதவும் வழியாகவும் உள்ளது என்று “தேவுமற்றறியேன்” என்பதற்கு ஏற்ப ஸ்வாமி வடுக நம்பி இருந்தார். அவர் அருளிச்செய்தது என்னவென்றால்: எம்பெருமானாருடைய நிழல் போன்றும், அவருடைய பாதுகைகள் போன்று பிரியாமல் உள்ளவர்களும்; ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே - ராமானுஜரின் திருவடிகளை சரணம் என்று பற்றுகிறேன் – என்றும், ஸுந்தர பாஹுஸ்தவம் (129) – ராமாநுஜார்யவசக: பரிவர்த்திஷீய - எம்பெருமானாருடைய திருவடிகளில் எப்போதும் இருந்தபடி கைங்கர்யம் செய்யவேண்டும் - என்றும் கூறியபடி, “உபாயம் என்பது இராமாநுசரின் திருவடிகள், உபேயம் அந்தத் திருவடிகளில் செய்யும் கைங்கர்யம்” என்று உள்ளபடி வாழ்கின்றவரும் ஆகிய கூரத்தாழ்வான்; அவரைப் போன்றே வாழ்ந்து வரும் முதலியாண்டான் ஆகிய இருவரையும் குறித்து வடுகநம்பி உரைத்தது என்னவென்றால் - இந்த உலகவாழ்வில் உள்ளதன் துன்பம் காரணமாக அதனை விலக்கிக்கொள்ளும் விதமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஸர்வேச்வரனிடம் சென்று வேண்டி நிற்பது, அவனுடைய ஸௌந்தர்யமான திருமேனியைக் கண்டவுடன் ஆழ்ந்த அன்பு கொண்டு மயங்கி நிற்பது என்ற அவர்கள் இருவருடைய நிலையைக் கண்டு வடுகநம்பி உரைப்பதாவது, “எம்பெருமானாருடைய திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று அறிந்த பின்னர் – தேவுமற்று அறியேன் - என்று இருக்கவேண்டாமோ? அப்படி இருக்காமல் அடியார்களைப் பின்பற்றுதல், ஸர்வேச்வரனைப் பின்பற்றுதல் என்றுள்ள இவர்கள் இருவரும், ஆற்றின் இரண்டு கரைகளையும் பற்றி நிற்பவர்கள் ஆவர்”, என்பதாகும்.