Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 410)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்த்திருக்க வேணுமிறே ப்ராபகம்.

இப்படி ப்ரமாணஸித்தமான அர்த்தத்தை உபபத்தியாலே ஸ்திரீகரிக்கிறார் மேல் (ஸ்வரூபத்துக்கும்) என்று தொடங்கி.

இவ்விதம் ப்ரமாணத்தில் அறியப்பட்ட அர்த்தத்தை யுக்திகள் கொண்டு நிலை நிறுத்துகிறார்.

ஸ்வரூபோபாய புருஷார்த்தங்களை நிஷ்கர்ஷிக்குமளவில், ப்ரதமம் ஸ்வரூபத்தை உள்ளபடி நிஷ்கர்ஷித்து, அநந்தரம் ப்ராப்யத்தை ததநுரூபமாக நிஷ்கர்ஷித்து ப்ராபகத்தை ததுபயாநுரூபமாக நிஷ்கர்ஷிக்க வேணுமிறே; வ்யுத்பத்தி தசையில் உபேயம் முற்பட்டு உபாயம் பிற்பட்டிருக்கும், அநுஷ்டாந தசையில் மாறாடியிருக்கும்; ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேராமையாலேயிறே உபாயாந்தரத்தை பரித்யஜித்தது; ஆகையால் (ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்க வேணுமிறே) என்கிறார். இனி, ஸ்வரூபந்தன்னை நிரூபித்தால் ஜ்ஞாநாநந்தங்களும் புறவிதழென்னும்படி பகவதநந்யார்ஹ சேஷத்வமே வடிவாய், அதினுடைய யாதாத்ம்யம் தச்சேஷத்வமும் புறவிதழென்னும்படி ததீயசேஷத்வமே வடிவாயிறே யிருப்பது; ஏவம்பூத ஸ்வரூபாநுரூபமான ப்ராப்யத்தை நிரூபித்தால் தத் கைங்கர்யம் ப்ரதமாவதியாய் ததீயகைங்கர்யம் சரமாவதியா யிருக்கும்; ஸ்வரூபப்ராப்ய வேஷமிதுவாகையாலே ததுபயாநுகுணமான ப்ராபகம் ததீயரேயாகவேண்டியிறே யிருப்பது; இனி அந்த ததீயரில் வைத்துக்கொண்டு, முதலடியிலே தன்னையங்கீகரித்து தத்வஜ்ஞாந ப்ரதாநத்தைப் பண்ணின மஹோபகாரகனான ஸ்வாசார்யனுக்கு சேஷமாயிருக்கை ஸமஸ்த பாகவதருடைய உகப்புமாய், தன் ஸ்வரூபத்தினுடைய எல்லை நிலமுமா யிருக்கும்; இந்த ஸ்வரூபத்துக் கநுரூபமான ப்ராப்யமும் ஸ்வாசார்யன் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யமா யிருக்கும். இப்படி ஸ்வரூப ப்ராப்யங்களாய் அத்தால் இவையிரண்டுக்கும் ஸத்ருசமான ப்ராபகம் ஸ்வாசார்ய சரணயுகளமாக வேணுமென்கை. இதுவே ஸ்வரூப ப்ராப்யங்களுக்குச் சேர்ந்த உபாயமென்கையாலே, ஈச்வர ஸ்வாதந்த்ர்யபீத்யா நிர்ப்பரத்வத்தைப் பற்ற இதில் போந்தவளவல்ல, முக்யோபாய மிதுவேயென்னுமிடம் ஸம்ப்ரதிபந்நமிறே.

ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் போன்றவற்றை நிச்சயிக்கும்போது முதலில் ஸ்வரூபத்தை உள்ளது உள்ளபடி நிச்சயிக்கவேண்டும்; தொடர்ந்து அந்த ஸ்வ்ரூபத்திற்கு ஏற்றபடி பலத்தை நிச்சயிக்கவேண்டும்; தொடர்ந்து அவற்றுக்கு ஏற்றபடி அடையும் வழியை நிச்சயிக்கவேண்டும் அல்லவோ? (இங்கு ஸ்வரூபம் என்பது ஆத்மாவின் தன்மை, அதாவது அது ஸர்வேச்வரன் மற்றும் ஆசார்யன் வசப்பட்டது என்று தெளிதல், ப்ராப்யம் அல்லது புருஷார்த்தம் என்பது ஆசார்யனுக்குச் செய்யும் தொண்டு, ப்ராபகம் அல்லது உபாயம் என்பது ஆசார்யனின் திருவடிகள்). ஸ்வரூபத்தை அறியும் நிலையில், பலனானது முற்பட்டு, அதனைப் பெறும் வழி என்பது பிற்பட்டிருக்கும்; ஆனால் அந்த உபாயத்தைக் கைக்கொண்ட பின்னர், உபாயம் முற்பட்டு புருஷார்த்தம் பிற்பட்டிருக்கும். ஸ்வரூபம் மற்றும் பலன் ஆகிய இரண்டுக்கும் பொருந்தாமல் உள்ளதால்தான், கர்மயோகம் போன்ற மற்ற உபாயங்கள் தள்ளப்பட்டன. எனவேதான் “ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்க வேணுமிறே” என்றார். அடுத்து ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை நன்றாக ஆராய்ந்தால், அது ஞானம் மற்றும் ஆனந்தம் வெளிப்பட்டபடி பகவானுக்கு அடிமையாக உள்ள தன்மையே வடிவமாக; ஜீவனுடைய உண்மையான நிலை என்பது ஸர்வேச்வரனுக்கு அடிமைப்பட்டிருத்தல் என்பது வெளிப்பட்டபடி அவன் அடியார்களுக்கு அடிமையாக உள்ள தன்மையே வடிவமான நிலையாகும். இத்தகைய ஆத்மஸ்வரூபத்தின் தன்மைக்கு ஏற்ற புருஷார்த்தம் எது என்று ஆராய்ந்தால் ஸர்வேச்வரனுக்குச் செய்யும் கைங்கர்யம் என்பது முதல் நிலையாகவும், அவனுடைய அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யம் இறுதிக்கட்ட நிலையாகவும் இருக்கும். ஆத்மாவின் தன்மை மற்றும் புருஷார்த்தத்தின் தன்மை ஆகிய இரண்டும் இவ்விதமாக உள்ளபோது, அந்த இரண்டுக்கும் ஏற்றபடியாக உள்ள உபாயம் என்பதும் அவன் அடியார்களாகவே அல்லவோ இருப்பது! இனி, அந்த அடியார்களுக்குள் முதல்நிலையில் தன்னை ஏற்றுக்கொண்டு, தத்வ ஞானத்தை அளித்து மிகப் பெரிய உபகாரம் செய்த தனது ஆசார்யனுக்கு அடிமையாக இருத்தல் என்பது அனைத்து அடியார்களுடைய மகிழ்வாகவும், தனது ஆத்ம ஸ்வரூபத்தின் எல்லையாகவும் இருக்கும். இத்தகைய ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்ற புருஷார்த்தம் என்பது தனது ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவே இருக்கும். இவ்விதம் ஆத்மஸ்வரூபமும் புருஷார்த்தமும் அமைந்துள்ளதால், இவை இரண்டிற்கும் ஏற்றதான உபாயம் என்பது தனது ஆசார்யனுடைய இரண்டு திருவடிகளே ஆகும் என்று கருத்து. இதுவே ஆத்மாவின் தன்மை மற்றும் புருஷார்த்தம் ஆகிய இரண்டுக்கும் தகுதியான உபாயம் என்பதால், ஸர்வேச்வரனுடைய சுதந்திரத்தைக் கண்டு அச்சம் கொண்டு, அதனை விட்டு, அச்சம் இன்மையை எதிர்நோக்கி, இதில் ஈடுபடவில்லை; முக்கியமான உபாயம் ஆசார்யனுடைய திருவடிகள் என்பதாலேயே ஆகும்.