Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 409)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

அவர்களைச் சிரித்திருப்பாரொருவ ருண்டிறே; அவர் பாசுரங்கொண்டு இவ்வர்த்த மறுதியிடக் கடவோம்.

பின்னை ஆர்பாசுரங்கொண் டறுதியிடுவதென்ன அருளிச்செய்கிறார் (அவர்களை) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் ஆழ்வார்களுடைய பாசுரங்களால் நிர்ணயிக்க இயலாது என்றார்; அப்படியென்றால் யாருடைய வாக்குகள் கொண்டு நிர்ணயிக்க இயலும் என்ற கேள்விக்கான விடையை அருளிச்செய்கிறார்.

அதாவது “மேவினேனவன் பொன்னடி, தேவுமற்றறியேன்” என்று, ஸ்வாசார்யரான நம்மாழ்வார் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமுமாகப் புரையறப்பற்றி அவிதிதாந்யதைவதராய் “நாவினால் நவிற்றின்ப மெய்தினேன்” என்று, தத் ஸங்கீர்த்த நாநந்த நிர்ப்பரராய், “அடியேன் சதிர்த்தேன்” என்று, உறுவதறிந்து பற்றின சதுரரா யிருக்கையாலே சரமபர்வத்தி லேற்றமறிந்து பேசாநிற்கச்செய்தே ததேகநிஷ்டரன்றியே ப்ரதமபர்வத்திலே மண்டி தத்வைலக்ஷண்ய பரவசராய், உண்டபோதொரு வார்த்தையு முண்ணாதபோதொரு வார்த்தையுஞ் சொல்லுகிற ஆழ்வார்கள் பதின்மரையும் அடியிலே ஓராசார்யன் திருவடிகளைப் பற்றி அநவரத ஸுகிகளாயிருக்கப் பெறாதே ஸ்வவைலக்ஷண்யத்தாலே பிச்சேற்றும் பகவத் விஷயத்திலே முந்துற முன்னமிழிந்து ததநுபவதசையி லொன்றைச் சொல்லுவது ததலாபதசையில் ஒன்றைச் சொல்லுவதாய், இவர்கள் படுகிறபாடென் என்று பரிஹஸித்திருக்கும் ஸ்ரீமதுரகவியாழ்வாரொருவ ருண்டிறே; சரமபர்வ நிஷ்டராய் ஸநைகரூப வசநரான இவருடைய பாசுரமான கண்ணிநுண் சிறுத்தாம்பைக் கொண்டு இவ்வர்த்தத்தை ஸம்சயவிபர்யய கந்தமற நிச்சயிக்கக் கடவோமென்கை. அதாவா, (உண்டபோது) இத்யாதிக்கு, பகவதநுபவம் பண்ணினபோது “உண்டு களித்தேற் கும்பரென்குறை”, “யாவர் நிகரகல் வானத்தே”, “மாறுளதோ விம்மண்ணின்மிசை” என்று இப்படி அநுபவ ஜநித ஹர்ஷப்ரகர்ஷ கர்விதமானதொரு வார்த்தையும், ததநுபவம் பெறாதபோது “மடியெல்லாம் முள்கலங்கி மயங்குமால்”, “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான்”, “காணவாரா யென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து”, “தீயோடுடன் சேர்மெழுகா யுலகில் திரிவேனோ” என்று இப்படி சோகவேக ஜநிதமானதொரு வார்த்தையுஞ் சொல்லுவாரொருவருமன்றிக்கே பத்துப் பேருண்டிறே; ததீயரே சேஷிகளும் உபாயோபேய பூதருமென் றறிந்திருக்கச் செய்தே, ததநுகுணமாக நிற்கமாட்டாமல் பகவத் விஷய வைலக்ஷண்ய பரவசராய் இப்படி உண்டபோதொரு வார்த்தை சொல்லுகிறவர்க ளுக்திகொண்டன்று ஸ்வாசார்ய சரண யுகளமே யுபாயோபேயமென்கிற இப்பரமார்த்த நிர்ணயம் பண்ணுவது, ஆழ்வார் திருவடிகளையே தமக்குத் தஞ்சமாகப் பற்றி “தேவுமற்றறியேன்” என்றிருக்கையாலே ப்ரதம பர்வத்திலே மண்டி ஹர்ஷசோக பரவசராய்ப் பேசுகிறவர்களைப் பரிஹஸித்திருப்பா ரொருவருண்டிறே; அப்படியிருந்துள்ள ஸ்ரீமதுரகவிகள் திவ்ய ஸூக்தியைக் கொண்டிவ்வர்த்த நிச்சயம் பண்ணக்கடவோமென்று இங்ஙனே யோஜிக்கவுமாம்.

கண்ணிநுண் சிறுத்தாம்பு (2) – மேவினேனவன் பொன்னடி, தேவுமற்றறியேன் - என்பதற்கு ஏற்ப தன்னுடைய ஆசார்யரான நம்மாழ்வாருடைய திருவடிகளை மட்டுமே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் கொண்டு, வேறு எந்த ஒரு தெய்வத்தையும் அறியாதவராகவும்; (2) - நாவினால் நவிற்றின்ப மெய்தினேன் - என்பதற்கு ஏற்ப நம்மாழ்வாருடைய திருநாமத்தை உரைப்பதில் மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவும்; அடியேன் சதிர்த்தேன் - என்று கூறுவதற்கு ஏற்ப அடையத்தக்கது எது என்று அறிந்து, அதனைப் பற்றி நின்ற சாமர்த்தியம் உள்ளவர் என்பதால், அப்படிப்பட்ட பாகவதர் விஷயத்தின் மேன்மை அறிந்து உரைத்தபோதிலும், அந்தப் பாகவதர்கள் விஷயத்தில் மட்டுமே ஈடுபட்டு நின்றுவிடாமல், முதல் நிலையான பகவத்விஷயத்தில் ஈடுபட்டு நின்றவராகவும்; ஸர்வேச்வரனுடைய அனுபவம் கிட்டினால் ஒருவிதமாகவும், அது கிட்டாமல் போனால் மற்றொரு விதமாகவும் உரைக்கின்ற பத்து ஆழ்வார்களைக் குறித்து, “தொடக்கத்தில் ஒரு ஆசார்யனுடைய திருவடிகளைக் கிட்டி நின்று எப்போதும் அதன் காரணமாகவே இன்பம் அனுபவித்தபடி இருக்காமல், தனது அழகு மற்றும் குணங்கள் முதலான விஷயங்கள் மூலம் தடுமாற வைக்கும் பகவத்விஷயத்தில் முதலில் ஈடுபட்டு அனுபவிக்கத் தொடங்கி, அந்த அனுபவம் கிட்டும்போது ஒருவிதம் உரைப்பது, அனுபவம் இழந்தால் மற்றொரு விதம் உரைப்பது என்று இவர்கள் படும்பாடு என்னே!”, என்று பரிகசிப்பவராகவும் உள்ள ஸ்வாமி மதுரகவியாழ்வார் ஒருவர் உள்ளாரே என்று கருத்து. இறுதி நிலையான பாகவதர்களிடம் மட்டுமே ஈடுபாடு உள்ளவராக, அவர்களைக் குறித்து மட்டுமே உரைப்பவரான இவருடைய பாசுரமான “கண்ணிநுண் சிறுத்தாம்பு” மூலம் இந்த அர்த்தத்தை எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் நிச்சயம் செய்வோம் என்று கருத்து. – அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். “உண்டபோது” என்றால் “பகவத் அனுபவம் கிட்டும்போது” அல்லது “பகவானை அனுபவிக்கும்போது” என்று பொருள். திருவாய்மொழி (10-8-7) - உண்டு களித்தேற் கும்பரென்குறை, திருவாய்மொழி (4-5-8) – யாவர் நிகரகல் வானத்தே, திருவாய்மொழி (6-4-9) – மாறுளதோ விம்மண்ணின்மிசை - என்பது போன்ற பாசுரங்களில் கூறப்பட்டபடி, ஸர்வேச்வரனை அனுபவிக்கும்போது ஏற்படும் அளவு கடந்த இன்பம் காரணமாக கர்வத்துடன் ஒருவிதமாக உரைப்பது; அவனை அனுபவிக்க இயலாதபோது திருவாய்மொழி (1-4-3) – மடியெல்லாம் முள்கலங்கி மயங்குமால், திருவாய்மொழி (1-4-8) – சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான், திருவாய்மொழி (8-5-2) - காணவாரா யென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து, திருவாய்மொழி (6-9-6) – தீயோடுடன் சேர்மெழுகா யுலகில் திரிவேனோ - என்பதற்கு ஏற்ப, துன்பத்தின் வேகத்தால் பிறக்கின்ற வேறுவிதமான சொற்களையும் உரைப்பவர்கள், ஒருவர் அல்லாமல் பத்து ஆழ்வார்கள் அல்லவோ? ஸர்வேச்வரனுடைய அடியார்களே தனக்கு எஜமானர்களாக, உபாய உபேயங்களாக உள்ளவர்களாக இருப்பவர்கள் என்று ஆழ்வார்கள் அறிவர்; அப்படி அறிந்தபோதிலும், அதன்படி நடக்க இயலாமல், ஸர்வேச்வரனுடைய குணங்கள் போன்ற சிறப்புகளில் ஈடுபட்டவர்களாக, அந்த அனுபவம் கிட்டும்போது ஒருவிதமாக உரைப்பவர்களாக உள்ளவர்களுடைய பாசுரங்கள் மூலமாக, தனது ஆசார்யனின் திருவடித்தாமரைகளே உபாயம் மற்றும் உபேயம் என்ற கருத்தை நிச்சயம் செய்வதில்லை. மாறாக, நம்மாழ்வார் திருவடிகளை மட்டுமே தனக்குத் தஞ்சமாகப் பற்றி, கண்ணிநுண் சிறுத்தாம்பு (2) – தேவுமற்றறியேன் – என்று கூறுவதற்கு ஏற்ப, அந்த அனுபவம் காரணமாக எப்போதும் இன்பத்துடன் உள்ளதால், தொடக்கத்தில் பகவத்விஷயத்தில் ஈடுபட்டு இன்பமும் துன்பமும் மாறிமாறி அடைந்த காரணத்தால் உரைக்கும் ஆழ்வார்களைப் பரிகசித்து உரைப்பவர் ஒருவர் உண்டு அல்லவோ? அப்படிப்பட்ட ஸ்வாமி மதுரகவியாழ்வாருடைய பாசுரங்கள் மூலமாக இந்த அர்த்தத்தை நாம் நிச்சயம் செய்வோம் என்றும் பொருள் கொள்ளலாம்.