Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 408)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

உண்டபோதொரு வார்த்தையு முண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார் பத்துப் பேருண்டிறே, அவர்கள் பாசுரங்கொண்ட ன்று இவ்வர்த்த மறுதியிடுவது.

ப்ரமாணாத் ப்ரமேய நிச்சயம் பண்ணவேணுமிறே; இவ்வர்த்தமென் கொண்டு நிர்ணயிக்கக் கடவோமென்னு மாகாங்க்ஷையிலே யருளிச்செய்கிறார் (உண்டபோது) என்று தொடங்கி.

ப்ரமாணம் மூலம் மட்டுமே ஒரு ஸித்தாந்தத்தை நிலைநாட்ட இயலும் என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. மேலும், கூறப்பட்ட பொருளை எந்த ப்ரமாணம் கொண்டு நிர்ணயம் செய்தோம் என்ற கேள்விக்கான விடையை அருளிச்செய்கிறார்.

– மயர்வறமதிநல மருளப்பெற்று பகவதநுபவைக தாரகரா யிருக்கும் ஆழ்வார்களுக்கு உண்டபோது முண்ணாதபோதுமாவன, பகவதநுபவ ததலாப காலங்கள்; அதில், பகவதநுபவம் பண்ணி ஹ்ருஷ்டரானபோது, தத்தாஸ்ய விவ்ருத்தி காமதயா ததீய தாஸ்யத்திலே யூன்றி, “பயிலும் பிறப்பிடைதோ றெம்மையாளும் பரமர்”, “நாளும் பிறப்பிடைதோ றெம்மையாளுடை நாதர்”, “வருமையு மிம்மையும் நம்மையளிக்கும் பிராக்கள்”, “சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்ம சன்மாந்தரங் காப்பர்”, “நன்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பர்”, “எம் பல்பிறப்பிடைதோறு எந்தொழு குலந்தாங்கள்”, “அவனடியார் சிறுமாமனிசரா யென்னை யாண்டாரிங்கே திரிய, செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமாவிரை நாண்மலரடிக் கீழ்ப்புகுதல், உறுமோ பாவியேனுக்கு” என்றும், “ஆரெண்ணும் நெஞ்சுடையாரவ ரெம்மை யாள்வாரே”, “ஞானத்தினொளி யுருவை நினைவாரென் நாயகரே”, “நச்சித்தொழுவாரை நச்சென்றன் நன்னெஞ்சே”, “பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே”, “கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங்கால் உண்ணாது வெங்கூற்ற மோவாது பாவங்கள் சேரா” என்றும், “ஈட்டங் கண்டிடக்கூடுமே லதுகாணும் கண்பயனாவதே”, “தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை யென்னாவதே”, “இன்புறுந்தொண்டர் சேவடி யேத்தி வாழ்த்து மென்னெஞ்சமே” என்றும், இத்யாதிகளிலே தத்விஷயத்திலுங் காட்டில் ததீயரே நமக்கு சேஷிகளு முபாயோ பேய பூதருமென்று அத்யாதரம் பண்ணிப் பேசுவது; பகவதநுபவாலாப க்லிஷ்டரான போது, அப்படி பரமசேஷிகளும் பரம ப்ராப்ய ப்ராபக பூதருமான ததீயர் ஸந்நிஹிதரா யிருந்தாலும் அவர்கள் பக்கல் நெஞ்சு செல்லாமல், பகவத் விஷயமே ப்ராப்யமும் ப்ராபகமுமாக நினைத்து, “காணவாராய்”, “காணுமாறருளாய்”, “வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்தில னென் செய்கேன்”, “வெஞ்சமத்தடு சரந்துரந்த வெம்மடிகளும் வாரானால்”, “வாசுதேவா வுன் வரவு பார்த்து வார்மணற் குன்றில் புலர நின்றேன்” என்று இத்யாதிகளாலே ஆர்த்தி பரவசரா யலற்றுவது ஊடுவது, “வெஞ்சிறைப்புள்”, “உங்களோடெங்களிடையில்லை” என்று இத்யாதிகளாலே, வெறுப்பது உதறுவதாகையாலே, (உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார்) என்கிறார். ஆழ்வார்களெல்லாருமேக ப்ரக்ருதிகளாய் ஏக கண்டரா யிருக்கையாலே, (பத்துபேருண்டிறே) என்கிறார். (அவர்கள் பாசுரங் கொண்டன்று இவ்வர்த்தமறுதி யிடுவது) என்றது, மயர்வற மதிநல மருளப் பெற்றவர்களாகையாலே ப்ரதமபர்வத்திற் காட்டில் சரமபர்வத்துக்குள்ள தன்னேற்றமடையத் தெளியக் கண்டு பேசினார்களே யாகிலும், சரமபர்வைக நிஷ்டரன்றியே ப்ரதமபர்வத்திலே மண்டி ததநுபவ ஹ்ருஷ்டரானபோ தொன்றைச் சொல்லுவது, ததலாப க்லிஷ்டரானபோ தொன்றைச் சொல்லுவதாய், ஒரு படிப்பாடரல்லாதவர்கள் பாசுரங்கொண்டன்று ஆசார்யனே உபாயமென் றிவ்வர்த்த நிச்சயம் பண்ணவதென்கை.

மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வார்கள் ஸர்வேச்வரனுடைய அனுபவங்களையே தங்களுடைய வாழ்வின் தாரகமாகக் கொண்டுள்ள காலம் என்பது அவர்களுக்கு உணவுள்ள காலமாகும்; அந்த அனுபவம் இல்லாத காலம் என்பது உண்ணாமை ஆகும். இவ்விதம் உள்ளபோது, ஸர்வேச்வரனை அனுபவித்த ஆனந்தத்துடன் உள்ள காலத்தில், அவனிடம் மேலும் அடிமைத்தனம் வளரும் விதமாக அவனுடைய அடியார்கள் விஷயத்தில் ஆழ்ந்து நின்று, கீழே உள்ளது போன்று உரைப்பார்கள்: திருவாய்மொழி (3-7-1) - பயிலும் பிறப்பிடைதோறு எம்மையாளும் பரமர் திருவாய்மொழி (3-7-2) - நாளும் பிறப்பிடைதோறு எம்மையாளுடை நாதர் திருவாய்மொழி (3-7-5) – வருமையும் இம்மையும் நம்மையளிக்கும் பிராக்கள் திருவாய்மொழி (3-7-6) – சலிப்பின்றியாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பர் திருவாய்மொழி (3-7-7) - நன்மை பெறுத்து எம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பர் திருவாய்மொழி (3-7-8) - எம் பல்பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்கள் திருவாய்மொழி (8-10-3) - அவனடியார் சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே, என் செந்தாமரைக்கண் திருக்குறளன் நறுமா விரை நாள் மலரடிக் கீழ்ப்புகுதல், உறுமோ பாவியேனுக்கு பெரியதிருமொழி (2-6-2) - ஆரெண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே பெரியதிருமொழி (2-6-3) - ஞானத்தினொளி உருவை நினைவார் என் நாயகரே பெரியதிருமொழி (2-6-5) – நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நன்னெஞ்சே பெரியதிருமொழி (7-4-4) - பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே பெரியதிருமொழி (7-4-8) - கண்ணாரக் கண்டு உருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங்கால் உண்ணாது வெங்கூற்றம் ஓவாது பாவங்கள் சேரா பெருமாள் திருமொழி (2-1) - ஈட்டங் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண்பயனாவதே பெருமாள் திருமொழி (2-2) - தொண்டரடிப்பொடியாட நாம் பெறில் கங்கைநீர் குடைந்தாடும் வேட்கை என்னாவதே பெருமாள் திருமொழி (2-4) - இன்புறுந்தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்து மென்னெஞ்சமே ஆக மேலே உள்ள வரிகளில் ஸர்வேச்வரனைக் காட்டிலும் அவனுடைய அடியார்களே நமக்கு எஜமானர்களாகவும், நமக்கு உபாயம் மற்றும் உபேயமாக உள்ளவர்களாகவும் மிகுந்த விருப்பத்துடன் உரைத்தபடி இருப்பர். அதே நேரத்தில் ஸர்வேச்வரனை அனுபவித்தல் என்பது கிட்டாமையால், மேலே கூறிய உபாயம் மற்றும் உபேயமாக உள்ள அடியார்கள் அருகில் உள்ளபோதிலும், அவர்களிடம் ஈடுபடாமல், ஸர்வேச்வரனையே உபாயமாகவும் உபேயமாகவும் எண்ணி கீழே உள்ளபடி உரைப்பர்: திருவாய்மொழி (8-5-2) - காணவாராய் திருவாய்மொழி (8-1-2) - காணுமாறருளாய் பெரியதிருமொழி (8-5-6) - வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் பெரியதிருமொழி (8-5-7) – வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால் பெருமாள் திருமொழி (6-1) - வாசுதேவா உன் வரவு பார்த்து வார்மணற் குன்றில் புலர நின்றேன்” போன்ற வரிகளின் மூலம் ஸர்வேச்வரனுடன் கூடி இருக்கவல்ல நிலை ஏற்படாத காரணத்தால் அடியார்களுடன் ஊடல் கொள்ளுதல்; திருவாய்மொழி (1-4-1) – வெஞ்சிறைப்புள், திருவாய்மொழி (2-8-7) – உங்களோடு எங்கள் இடையில்லை - போன்ற வரிகள் மூலம் அடியார்களை வெறுப்பதும் தள்ளுவதும் என்றுள்ளதால், “உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாதபோதொரு வார்த்தையும் சொல்லுவார்”, என்று சூர்ணையில் அருளிச்செய்தார் என்கிறார். ஆழ்வார்கள் அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் என்பதால் “பத்துபேர் உண்டிறே” - என்கிறார். (அவர்கள் பாசுரங் கொண்டன்று இவ்வர்த்தமறுதி யிடுவது) – மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் என்பதால், ஸர்வேச்வரனை வணங்குவதைக் காட்டிலும் அவனுடைய அடியார்களை வணங்குதல் என்பது சிறந்தது என்று தெளிந்து அருளிச்செய்தனர்; ஆனாலும் அடியார்களை மட்டும் பற்றி நிற்காமல், முதல் நிலையான ஸர்வேச்வரனிடம் ஆழமாக ஈடுபட்டு, அவனுடைய அனுபவம் கிட்டும்போது ஒருவிதமாகப் பேசுவது, அந்த அனுபவம் கிட்டாதபோது வருத்தம் அடைந்து, வேறுவிதமாகப் பேசுவது என்றுள்ள ஆழ்வார்களின் பாசுரங்கள் மூலம் “ஆசார்யனே உபாயம்” என்ற அர்த்தத்தை நிர்ணயம் செய்வதில்லை (அதாவது பத்துபேர் என்பது ஆண்டாள், மதுரகவியாழ்வார் நீங்கலாக உள்ள மற்றவர்கள்; ஆக இவர்கள் பத்துப்பேரின் பாசுரங்களால் நிர்ணயிக்க இயலாது என்று கருத்து).