Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (சூர்ணை 407)

ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்

ஸ்வதந்த்ரனை உபாயமாகத்தான் பற்றின போதிறே இப்ரஸங்கந்தா னுள்ளது.

அதில் இப்படி பயாபயங்களிரண்டும் மாறி மாறி யநுவர்த்தியாமல் எப்போது மொக்க நிர்ப்பயனா யிருக்கலாவதொரு வழியில்லையோ வென்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார். (ஸ்வதந்த்ரனை) என்று தொடங்கி.

இப்படியாகப் பயம் மற்றும் பயம் அல்லாத நிலை ஆகிய இரண்டும் மாறி மாறி வராமல், எப்போதும் பயம் அற்ற நிலையுடன் இருப்பதற்கான வழி ஏதும் இல்லையோ என்ற கேள்விக்கான விடையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, கர்மாநுகுணமாக ஸம்ஸரிப்பிக்கவும் காருண்யாநுகுணமாக ஸம்ஸார நிவ்ருத்தியைப் பண்ணித் திருவடிகளிலே சேர்த்துக்கொள்ளவும் வல்ல நிரங்குச ஸ்வதந்த்ரனான வீச்வரனை இஷ்டாநிஷ்ட ப்ராப்திபரிஹாரங்களுக்கு உபாயமாகப் பற்றினபோதிறே, யாவத்ப்ராப்தி பயாபயங்களிரண்டும் மாறி மாறி நடக்குமென்னுமிப் ப்ரஸங்கந்தா னுள்ளதென்கை. பரதந்த்ர ஸ்வரூபனாய் மோக்ஷைக ஹேதுவான ஸ்வாசார்யனை உபாயமாகப் பற்றினாலிப் ப்ரஸங்கமில்லை, ஸதத நிர்ப்பயனா யிருக்கலாமென்று கருத்து. (உபாயமாகத்தான்) என்று ஒரு முழுச்சொல்லித்தனை.

நம்முடைய கர்மங்களுக்கு ஏற்றபடி ஸம்ஸாரத்தில் உழலும்படிச் செய்தல், தனது கருணைக்கு ஏற்றபடி நம்மை இந்த ஸம்ஸாரத்திலிருந்து கரையேற்றி தனது திருவடிகளில் சேர்ந்துக் கொள்ளுதல் என்ற இரண்டிலும் வல்லவனாகவும், தடையற்ற சுதந்திரமானவனாகவும் உள்ள ஸர்வேச்வரனை, நமது விருப்பங்கள் நிறைவேறவும், நமக்கு விருப்பம் அல்லாதவை அகலவும் ஏற்ற உபாயமாகப் பற்றும்போதுதான், அவனை அடையும்வரை பயம் மற்றும் பயம் இன்மை ஆகிய இரண்டும் மாறி மாறி நடக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஆனால் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டிருத்தல் என்றுள்ள ஸ்வரூபம் கொண்டவரும், மோக்ஷம் ஒன்றுக்கே காரணமானவரும் ஆகிய தனது ஆசார்யனை ஒருவன் கைக்கொண்டால் இவ்விதம் பயம், பயனின்மை ஆகிய இரண்டும் மாறி மாறி வருவதில்லை; எப்போதும் பயமற்று இருக்கலாம் என்று கருத்து. “உபாயமாகத்தான்” என்பது ஒரு முழுச்சொல்லாகும்; அதனை “உபாயமாக + தான்” என்று பிரித்தல் கூடாது.