Sri Vachana Bhushanam - ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம் (Pravesam 1)
ஆறாம் ப்ரகரணம் – சரமபர்வ நிஷ்டை நிரூபணம்
ஆறாம் ப்ரகரண ப்ரவேசம்
ஸ்ரீவசநபூஷண ஆறாம் ப்ரகரண வ்யாக்யான அவதாரிகை
இப்ரபந்தத்தில் உபக்ரமமே பிடித்து இவ்வளவாக, ஸித்தோபாய பூதனான ஸர்வேச்வரனே சேதநர்க்கு பரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷஸித்திக்கு நிரபேக்ஷ ஸாதந மென்றருளிச்செய்து, உபாயபூதனான ஸர்வேச்வரன் கர்மநிபந்தநமாக ஸம்ஸரிப்பிக்கவும் காருண்ய நிபந்தநமாக முக்தனாககவும் வல்ல நிரங்குச ஸ்வதந்த்ரனாகையாலே அவனை உபாயமாகப் பற்றி யிருக்குமவர்களுக்கு, ஸ்வகர்மா நுஸந்தானத்தாலும் தத் காருண்யா நுஸந்தாநத்தாலும் வரும் பயாபயங்கள் யாவத்ப்ராப்தி மாறி மாறி நடக்கும்படியையும் தர்சிப்பித்தார் கீழ்; இனிமேல், “ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும்” என்றும், “திருமாமகள் கொழுநன் தானே குருவாகி” என்றுஞ் சொல்லுகையாலே அந்த ஸித்தோபாய பஹிர்ப்பூதமன்றியே தச்சரமாவதியாய், பந்த மோக்ஷங்க ளிரண்டுக்கும் பொதுவாயிருக்கை யன்றிக்கே மோக்ஷைக ஹேதுவா யிருக்கையாலே தந்நிஷ்டர்க்கு பயப்ரஸங்க மின்றியே எப்போது மொக்க நிர்ப்பயராய்க் கொண்டிருக்கலாம்படியாய், சரமாவதியான ஸ்வரூப ப்ராப்யங்களுக்கு அநுரூபமான சரமோபாயம் ஸதாசார் யாபிமாநமே யென்று ஸகல வேதாந்தஸார வித்தமரான பூர்வாசார்யர்கள் தங்களுக்குத் தஞ்சமாக வநுஸந்தித்து உபதேசித்தும் போந்த ரஹஸ்யார்த்தத்தை ஸகலருமறிந் துஜ்ஜீவிக்கும்படி ப்ரபந்த சேஷத்தாலும் ஸுஸ்பஷ்டமாக அருளிச்செய்கிறார்.
இந்த ப்ரந்தத்தின் தொடக்கம் முதல், இதுவரை உள்ள பகுதிகளில், எப்போதும் உதவுவதற்குச் சித்தமாக உள்ள உபாயமான ஸர்வேச்வரன் மட்டுமே ஜீவாத்மாக்களுக்கு மிகவும் உயர்ந்த புருஷார்த்தமான மோஷம் கிட்டுவதற்கான தனிக்காரணமாக உள்ளான் என்று அருளிச்செய்தார். இப்படிப்பட்ட ஸர்வேச்வரன், கர்மத்தின் காரணமாக இந்த ஸம்ஸாரத்தில் உழன்றபடி இருக்கும் விதத்தில், மீண்டும் பிறவி அளித்தல் அல்லது தனது அளவற்ற கருணை காரணமாக இதிலிருந்து விடுவித்து மோக்ஷம் அளித்தல் என்பதைச் செய்யவல்ல தடையற்ற சுதந்திரம் உள்ளவன் ஆவான். ஆகவே அவனை எப்போதும் சிந்தித்திருப்பவர்களுக்கும் கூட தங்களுடைய கர்மங்கள் குறித்து எண்ணுவதாலும், ஸர்வேச்வரனுடைய கருணையை எண்ணுவதாலும் முறையே பயமும், பயம் அற்ற நிலையும், மாறி மாறி ஏற்பட்டபடி உள்ளது என்று அருளிச்செய்தார். இனி ஜயாக்ய ஸம்ஹிதை – ஸாக்ஷாந் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் – ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணனே மனித ரூபம் எடுத்து ஆசார்யனாகி – என்றும், ஞானசாரம் (38) – திருமாமகள் கொழுநன் தானே குருவாகி – என்றும் கூறுவதால், ஸித்தோபாயமாக உள்ள ஸ்ரீமந் நாராயணனுக்குப் புறம்பாகச் செல்லாமல், அவனுக்கே எல்லை நிலமாய் ஈடுபட்டும், பந்தம் மற்றும் மோக்ஷம் ஆகிய இரண்டிற்கும் பொதுவாக இல்லாமல் அந்த ஸித்தோபாயமான ஸர்வேச்வரன் மோக்ஷத்திற்கு மட்டுமே காரணமாக உள்ளதால், அதில் மட்டுமே ஊன்றியிருப்பவர்களுக்கு அச்சம் ஏற்படச் சிறிதும் இடம் இல்லை என்பதால், எப்போதும் அச்சமற்ற நிலையில் இருக்கும்படியும் உள்ளதற்குக் காரணம், ஜீவாத்மாவின் ஸ்வரூபம் மற்றும் அவன் அடையும் பேறு ஆகியவற்றின் எல்லை உபாயமாக உள்ள நல்ல ஆசார்யனுடைய அபிமானமே ஆகும் என்கிறார். அதாவது அனைத்து வேதாந்தங்களின் சாரப்பொருளை நன்றாக உணர்ந்தவர்களான பூர்வாசார்யர்கள், தங்களுக்குத் தஞ்சமாக எண்ணியிருந்ததும், உபதேசித்து வந்ததுமாகிய இரகசியப்பொருளை, அனைவரும் அறிந்துகொண்டு கரையேறும்விதமாக, இந்த ப்ரபந்தத்தின் இந்தப் பாகத்தில் தெளிவாக அருளிச்செய்கிறார்.