Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 406)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
நிவர்த்ய ஜ்ஞாநம் பயஹேது, நிவர்த்தக ஜ்ஞாநம் அபயஹேது.
இப்படி உபயமும் மாறிமாறி ப்ராப்தியளவும் நடக்கிறதென்? தத்குண விச்வாஸத்தாலே யெப்போதுமொக்க நிர்ப்பயனா யிருக்க வொண்ணாதோ வென்ன அருளிச்செய்கிறார் (நிவர்த்ய ஜ்ஞாநம்) என்று தொடங்கி.
இப்படியாக பயம், பயம் அற்ற நிலை ஆகிய இரண்டும் ஏன் மாறி மாறி வரவேண்டும்? ஸர்வேச்வரனுடைய கருணை முதலான அவன் குணங்கள் மீது உள்ள நம்பிக்கை காரணமாக, எப்போதும் பயம் இல்லாதவனாக இருக்க இயலாதோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அவனுடைய காருண்யத்தாலே நிவர்த்திப்பிக்கப்படுமதான அவித்யா கர்மவாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்த விஷய ஜ்ஞாநம், இவை கிடக்கையாலே இன்னமும் ஸம்ஸாரம் மேலிடில் செய்வதென் என்கிற பயஹேது; “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று, ஸர்வேச்வரனிவற்றைத் தள்ளிப் பொகடும்படி பண்ணுகையாலே இவற்றுக்கு நிவர்த்தகமான அவனுடைய காருண்ய விஷய ஜ்ஞாநம், தத்பய ராஹித்ய ஹேதுவென்கை. நிவர்த்தக பலமறிந்தாலும் நிவர்த்யம் கிடக்குமளவும் பயமும் நடுநடுவே கலசிச்செல்லுமென்று கருத்து. – ஆக, இப்ப்ரகரணத்தால் இவனுக்கு பயாபய ஹேதுக்களும், ததுபய விபர்யயத்தில் ஸித்திக்குமதுவும், தந்நிபந்தந சங்கா பரிஹாரங்களும், ஸர்வேச்வரன் ஸம்ஸாரிகளுக் குஜ்ஜீவநத்தில் க்ருஷி பண்ணும்படியும், அஜ்ஞாத ஸுக்ருத பகவதங்கீகார ஹேதுத்வமும், இந்நிர்ஹேதுக விஷயீகார வைபவாநபிஜ்ஞர் படியும், ஏதத் வைபவாபிஜ்ஞர் படியும், இவ்வர்த்த மபியுக்த வசந ஸித்தமென்னுமதுவும், அஜ்ஞாத ஸுக்ருத வ்யாஜேந அவனங்கீகரிக்கும்படியும், அங்கீகார ஹேதுவாக்கு மஜ்ஞாத ஸுக்ருதங்களின் தத்க்ருஷி பலத்வமும், தந்நிரூபண பலிதமும், அங்கீகாரப் பற்றாசாமவை காதாசித்கமாக ஸ்வயமேவ விளைகைக் கடியும், அவற்றின் த்வைவித்யமும், ஏவம்பூத விஷயீகார சாஸ்த்ரஸித்தத்வமும், இவ்விஷயீகாரம் பெற்றவர் இத்தை வெளியாகப் பேசினபடியும், ஏததநபிஜ்ஞ வசந பரிஹாரமும், ஆபிமுக்யவத் த்வேஷஸ்யாபி தத் க்ருபா ஜநிதத்வமும், யாத்ருச்சிகாதிகளில் ஸுக்ருதநாம மீச்வர க்ருதமென்னு மதுவும், ஏததர்த்த விஷயாபியுக்த வசந பரஸ்பர விரோத பரிஹாராத்யநுக்தி ஹேதுவும், கீழ்ப்பரக்க உபபாதித்து வந்ததின் பலிதமும், ததாப்தி ஹேது தயா ஜ்ஞாநாதிகரநுஸந்தாநமும், நிர்ஹேதுக க்ருபாபலாவச்யாநுபாவ்யத்வமும், ஈத்ருச க்ருபா ப்ரவாஹ துர்நிவாரத்வமும், ப்ரகரணாதி ப்ரதிஜ்ஞாதார்த்த நிகமநமும், பயாபயாநுவர்த்தந காலாவதியும், ஏததுபய ஹேதுபூத ஜ்ஞாந விசேஷங்களும் சொல்லுகையாலே, இவ்வதிகாரிக்கு அத்வேஷாதி மோக்ஷபர்யந்த அகிலலாப ஹேதுவான பகவதாகஸ்மிக க்ருபா ப்ரபாவ விஸ்தரேண ப்ரதிபாதிக்கப்பட்டது. இத்தால், த்வயோபதேஷ்ட்ரு பூத ஆசார்யோப ஸத்த்யாதிகளுக்கும் ததுபதிஷ்ட த்வயார்த்த ஜ்ஞாநாதிகளுக்கும் ஹேதுவான பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப்பட்டது.
ஸர்வேச்வரனுடைய கருணை காரணமாக நீக்கப்படுவதான அறியாமை, கர்மம் (பூர்வவினைகள்), பழக்கம் என்பதான வாஸனை, அந்தக் கர்மங்களைச் செய்வதில் உள்ள ஆசை, சரீரத் தொடர்பு காரணமாக உலகவிஷயங்கள் குறித்த அறிவு முதலானவை தொடர்ந்தபடி உள்ளதால், “இனி உள்ள காலங்களில் ஸம்ஸாரம் தொடர்ந்தால் என்ன செய்வது?” என்ற நிலையே பயத்திற்குக் காரணமாக உள்ளது. கீதை (18-66) – ஸர்வபாபேயோ மோக்ஷயிஷ்யாமி - அனைத்து பாவங்களிலிருந்தும் உன்னை விடுவித்து மோக்ஷம் அளிப்பேன் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் இந்தத் துன்பங்கள் அனைத்தையும் நீக்குவதால், இவற்றை நீக்கும் அவனுடைய கருணை குறித்த ஞானம் என்பது பயத்தை நீக்கும் காரணமாக உள்ளது. ஆக புண்ணியபாவ கர்மங்களை நீக்கவல்ல ஸர்வேச்வரனுடைய வலிமையை அறிந்தாலும், இந்தச் சரீரம் உள்ளவரை பயம் என்பது இடைஇடையே வந்து கலந்து சென்றபடியேதான் இருக்கும் என்று கருத்து. – ஆக, இந்த ப்ரகரணத்தில் கீழே உள்ள விஷயங்கள் குறித்து விரிவாக அருளிச்செய்யப்பட்டது: அதிகாரிக்கு ஏற்படும் பயம், பயம் அற்ற நிலைகளுக்கான காரணங்களும், இந்த இரண்டும் மாறாடினால் ஏற்படுவது என்ன என்பதும் அதனால் ஏற்பட்ட சந்தேகங்களும், அவற்றுக்கான சமாதானமும் ஸர்வேச்வரன் இந்த உலகில் உள்ள ஸம்ஸாரிகளைக் கரையேற்றச் செய்யும் முயற்சிகளும், நாம் அறியாமல் செய்கிற புண்ணியச் செயல்கள் கூட ஸர்வேச்வரன் ஏற்பதற்குக் காரணமாகின்றன என்னும் கருத்தும் இப்படியாக எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்ளுவதன் பெருமையை அறியாதவர்களுடைய தன்மை இப்படியாக எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்ளுவதன் பெருமையை அறிந்தவர்களுடைய தன்மை இப்படியாக அவன் ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஆழ்வார்களுடைய வாக்கினால் வெளிப்படுகிறது நாம் அறியாமல் செய்த புண்ணியங்களையும் ஒரு வாய்ப்பாகக் கொண்டு அவன் ஏற்கும் நிலை. இவ்விதம் அவன் ஏற்பதற்கு உறுப்பாக உள்ளதான, “அறியாமல் செய்த புண்ணியங்கள்” என்பதும் அவனுடைய முயற்சியால் மட்டுமே ஏற்படுகிறது. அந்த முயற்சியின் நிரூபணத்தால் உண்டாகவல்ல பயன் ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்வதற்குக் காரணமாக உள்ள “அறியாமல், தற்செயலாகச் செய்த புண்ணியம்” முதலானவற்றை உண்டாக்குவதற்கான காரணம் அப்படிப்பட்ட காரணங்கள் இரண்டு வகைப்படும் இவ்விதம் காரணம் இல்லாமல் அவன் உதவுதல் என்பது குறித்து சாஸ்த்ரங்களில் கூறப்பட்டுள்ளன இப்படியாகக் காரணம் இல்லாமல் ஸர்வேச்வரனால் உதவப் பெற்றவர்கள் அது குறித்து உரைப்பது இதனை அறியாதவர்கள் கூறும் சொற்களுக்கான சமாதானம் ஸர்வேச்வரனிடம் ஆழ்ந்த ஈடுபாடு, அவனை விலக்காமல் இருந்தல் முதலானவை ஸர்வேச்வரனுடைய கருணையால் ஏற்படுகின்றன தற்செயலாகச் செய்யும் நற்செயல்களுக்கு “புண்ணியம்” என்று பெயர் வைத்தது ஸர்வேச்வரனே ஆவான் இப்படிப்பட்ட விஷயத்தில் ஆழ்வார்களுடைய பாசுரங்களில் ஒன்றுக்கொண்று முரண்பட்டதாகத் தோன்றினாலும், அதற்கான காரணம் அல்லது சமாதானம் கூறாமல் விட்டதற்கான காரணம் இதுவரை விரிவாக உரைத்தவற்றிலிருந்து கிடைக்கும் பொருள் ஸர்வேச்வரனை அடைவதற்கு ஏதுவாக அறிவுள்ளவர்கள் செய்து வரும் சிந்தனைகள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் உண்டாகும் ஸர்வேச்வரனுடைய கருணையை அனுபவித்தே தீரவேண்டும். இப்படிப்பட்ட கருணை என்ற வெள்ளத்தைத் தடுக்க இயலாதது ப்ரகரணத்தின் தொடக்கத்தில் உரைக்கத் தொடங்கிய கருத்தை நிறைவு செய்தல் பயம், பயம் இன்மை போன்றவை தொடர்ந்தபடி உள்ள காலம் எதுவரை என்று கூறுதல் இப்படிப்பட்ட பயம், பயம் இன்மை ஆகிய இரண்டுக்கும் காரணமாக உள்ள ஞானங்கள் குறித்து உரைப்பதால், இந்த அதிகாரிக்கு ஸர்வேச்வரனை விலக்காமை தொடங்கி மோக்ஷம் அடைதல் வரை உள்ள அனைத்து பலன்களுக்கும் காரணமாக உள்ள ஸர்வேச்வரனுடைய “காரணம் இல்லாமல் உண்டாகும் கருணை” என்பதன் பெருமை விரிவாகக் கூறப்பட்டது ஆக இதன் மூலம் த்வயம் முதலானவற்றை உபதேசிக்கும் ஆசார்யனை அடைந்து வணங்கி நிற்பது போன்றவற்றுக்கும், அவரால் உபதேசிக்கப்பட்ட த்வயம் போன்றவற்றில் அறிவுள்ள தன்மை முதலானவற்றுக்கும் காரணமாக உள்ளதான “காரணம் இல்லாமல் ஏற்படும் ஸர்வேச்வரனின் கருணை” குறித்தும் அதன் பெருமை குறித்தும் கூறப்பட்டது.