Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 405)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
பயாபயங்களிரண்டும் மாறிமாறி ப்ராப்தியளவும் நடக்கும்.
– இப்பயாபயங்க ளிரண்டு மிவனுக் கெவ்வளவாக நடக்குமென்ன அருளிச்செய்கிறார் (பயாபயங்க ளிரண்டும்) என்று தொடங்கி.
இத்தகைய பயம், பயம் அற்ற நிலை ஆகிய இரண்டும் சேதனனுக்கு எதுவரை ஏற்படும் என்ற சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, பகவத் க்ருபா விஷயமாய் ப்ரக்ருதியோடே யிருக்கையாலே அநாதிகாலம் ஸம்ஸரண ஹேதுவாய்ப் போந்த ஸ்வகர்மத்தை அநுஸந்திப்பது அத்தைப் பாராதே அங்கீகரித்த பகவத் காருண்யத்தை அநுஸந்திப்பதாய்க் கொண்டிறே இவ்வதிகாரி யிருப்பது; அதில், கர்மத்தை யநுஸந்தித்தபோது பயமும், காருண்யத்தை யநுஸந்தித்தபோது அபயமுமாய், இரண்டும் மாறிமாறி ப்ரக்ருதி ஸம்பந்தமற்று பகவத்ப்ராப்தி பண்ணுமளவும் நடக்குமென்கை.
ஸர்வேச்வரனுடைய கருணையின் இலக்காக உள்ளபோதிலும், இந்த ஸம்ஸார உலகத்தின் தொடர்பு உள்ளதன் காரணமாக அல்லவோ இந்த அதிகாரி, எல்லையற்ற காலமாகத் தன்னை ஸம்ஸாரத்தில் நிறுத்தியபடி உள்ள தனது கர்மத்தை எண்ணுதல், அந்தக் கர்மங்களை ஆராயாமல் தன்னை ஏற்றுக் கொண்ட ஸர்வேச்வரனுடைய கருணையை எண்ணுதல் - என்றபடி உள்ளான்? இவற்றில் தனது கர்மத்தைக் குறித்து எண்ணும்போது பயமும், ஸர்வேச்வரனுடைய கருணையை எண்ணும்போது பயம் அற்ற நிலையும் ஆகிய இரண்டும் இந்த ஸம்ஸார ஸம்பந்தம் நீங்கி, ஸர்வேச்வரனை அடையும் காலம்வரை மாறி மாறி வந்தபடியேதான் இருக்கும் என்று கருத்து.