Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 404)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

பயஹேது கர்மம்; அபயஹேது காருண்யம்.

ப்ரகரணாதியில் பயாபயஹேதுக்களாகச் சொன்ன ஸ்வதோஷ பகவத் குணங்களில் வைத்துக்கொண்டு, கர்ம காருண்யங்கள் ப்ரதாநங்களாகையாலே அவற்றை யுபபாதித்துக் கொண்டு வந்தார் கீழ்; அது தன்னை நிகமித்தருளுகிறார் மேல் (பயஹேது) என்று தொடங்கி.

இந்த ப்ரகரணத்தின் தொடக்கத்தில் (சூர்ணை 366) பயம் மற்றும் பயம் இல்லாத நிலை ஆகியவற்றுக்குக் காரணமாக சேதனனின் தோஷங்கள் மற்றும் ஸர்வேச்வரனுடைய குணங்கள் முறையே கூறப்பட்டன. இவற்றில் முக்கியமானவை சேதனனின் கர்மங்களும், ஸர்வேச்வரனுடைய க்ருபையும் ஆகும். அதனால் அவை இரண்டையும் இதுவரை விளக்கினார். அதனை இப்போது நிறைவு செய்கிறார்.

– அதாவது, ஈச்வரனே உபாயமென்றிருக்கிற இவ்வதிகாரிக்கு இன்னமும் ஸம்ஸாரமநுவர்த்திக்கில் செய்வதென் என்கிற பயத்துக்கு ஹேது, “அநாதிகாலம் ஸம்ஸரிக்கைக்குக் காரணமாய்ப் போந்த ஸ்வகர்ம ஸ்மரணம்; “சூழ்பிறப்பு மருங்கே வரப் பெறுமே” என்கிறபடியே, ஸம்ஸாரம் நம்மருகும் வரமாட்டாது, சரீராவஸாநத்திலே பகவத் ப்ராப்திக்கு கண்ணழிவில்லை என்று நிர்ப்பயனா யிருக்கைக்கு ஹேது, கர்மத்தைப் பாராம லங்கீகரித்து ஸம்ஸாரத்தை யடியறுத்துத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகைக் குறுப்பான அவனுடைய நிர்ஹேதுக காருண்ய ஸ்மரண மென்கை. (ஸ்வ தோஷாநுஸந்தாநம், பகவத் குணநுஸந்தாநம்) என்று தொடங்கினத்தை நிகமிக்கிற விடமாகையாலே (கர்மம், காருண்யம்) என்கிறவிடத்தில் ஸ்மரண பர்யந்தம் விவக்ஷிதம்.

“ஸர்வேச்வரன் மட்டுமே உபாயம்” என்றுள்ளவனுக்கு “இன்னமும் ஸம்ஸாரம் தொடர்ந்தால் என்ன செய்வது?”, என்று உண்டாகும் பயத்திற்குக் காரணம், எல்லையற்ற காலமாக ஸம்ஸாரத்தில் உழல்வதற்குக் காரணமாக இருந்து வருகின்ற தனது கர்மத்தைக் குறித்து எண்ணுதலே ஆகும். திருவிருத்தம் (45) – சூழ்பிறப்பு மருங்கே வரப் பெறுமே - என்று கூறுவதற்கு ஏற்ப, “ஸம்ஸாரம் நம்மை நெருங்கி வராது. இந்தச் சரீரத்தின் முடிவில் ஸர்வேச்வரனை நாம் அடைவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை” என்று உண்டாகும் பயம் இல்லாத நிலைக்குக் காரணம் - நாம் செய்த கர்மங்களை ஆராயாமல், நம்மை ஏற்றுக்கொண்டு, ஸம்ஸாரத் தொடர்பை அறுத்து, தனது திருவடிகளில் அவன் சேர்ந்துக் கொள்வதற்குக் காரணமாக உள்ள அவனுடைய “எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படும் கருணை” என்பதே ஆகும் என்று எப்போதும் சிந்திப்பதே ஆகிறது. சூர்ணை 366ல் “ஸ்வதோஷ அநுஸந்தாநம், பகவத் குண அநுஸந்தாநம்” என்று தொடங்கியதை நிறைவு செய்யும் இடம் என்பதால் இங்கு “கர்மம்” என்பதை நமது கர்மம் என்றும், “காருண்யம்” என்பதை ஸர்வேச்வரனுடைய கருணை என்றும் கொள்ளவேண்டும்.