Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 403)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
க்ருபை பெருகப்புக்கால் இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் தகைய வொண்ணாதபடி இருகரையுமழியப் பெருகும்.
ஏவம்பூதக்ருபை அநாதியாயிருக்கச் செய்தே, கர்மகர்த்தாவான சேதநனுடையவும் தத்பலதாதாவான வீச்வரனுடையவும் ஸ்வாதந்த்ர்யங்களாலே தகையப்பட்டன்றோ கிடந்துபோந்தது, இன்னமு மப்படியானாலோவென்ன வருளிச் செய்கிறார் (க்ருபை பெருகப்புக்கால்) என்று தொடங்கி.
– ஸர்வேச்வரனுடைய இத்தகைய கருணை என்பது எல்லையற்ற காலமாக இருந்து வருவதாகும். ஆனால் கர்மங்களைச் செய்யும் ஜீவன் மற்றும் அந்தக் கர்மங்களுக்கு பலன் அளிக்கும் ஸர்வேச்வரன் ஆகிய இருவருடைய சுதந்திரம் காரணமாக அத்தகைய கருணையானது தடுக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் வரும் காலங்களில் அப்படியே இருந்துவிட்டால் என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, க்ருபாகுணம் நிரங்குச ஸ்வதந்த்ரனான வீச்வரன் தானிட்ட கட்டளையிலே வந்தவாறே யங்கீகரிக்கக்கடவோமென்று இச்சேதநனை கர்மாநுகுணமாக நிர்வஹிக்குமளவில், இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் தகையப்பட்டு நிற்குமதொழிய, அக்கட்டளையில் வாராமையாலே துர்கதியே பற்றாசாக விவனை யவன்தானே மேல் விழுந்தங்கீ கரிக்கைக்குடலாம்படி பெருகுமளவில், ஸ்வாச்ரயமான வீச்வரனுடைய சேதந கர்மாநுகுணமாகவே நிர்வஹிக்கக் கடவோமென்றிருக்கிற ஸ்வாதந்த்ர்யத்தாலும், ஸ்வவிஷயமான சேதநனுடைய “ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே” என்கிறபடியே ஈச்வராஜ்ஞையை யதிலங்கித்து நடக்கைக் கடியான ஸ்வாதந்த்ர்யத்தாலும் நிரோதிக்கவொண்ணாதபடி “விதிவாய்க்கின்று காப்பாரார்” என்கிறபடியே உபய ஸ்வாதந்த்ர்யரூபமான விரண்டு கரையுமுடைந்தழியும்படி ஒருமட்டில் நில்லாமை மேன்மேலும் பெருகாநிற்கு மென்கை.
(க்ருபை பெருகப்புக்கால்) - கருணையாகிற குணமானது, வேறு எதனாலும் தடை செய்யப்பட இயலாத சுதந்திரம் உள்ளவனாகிய ஸர்வேச்வரன், “நான் இட்ட கட்டளைகளுக்கு இந்த ஜீவன் அடிபணிந்து நடந்தால் அவனை நாம் ஏற்றுக்கொள்வோம்” என்று ஜீவனுடைய கர்மங்களுக்கு ஏற்றபடி அமைகிறது என்று வைத்துக்கொள்வோம். இவ்விதம் ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது அந்தக் கருணையானது இருவரது சுதந்திரம் காரணமாகத் தடைபடும். மாறாக அது போன்று ஸர்வேச்வரன் சிந்திக்காமல், ஜீவனுடைய தாழ்ந்து நிலையைக் கண்டு தானாகவே ஸர்வேச்வரன் அவன் மீது விழுந்து ஏற்றுக்கொள்வதற்குச் சாதகமாக அந்தக் கருணை பெருகி நிற்கும்போது என்று பொருள். (இருவர்) – “ஜீவனுடைய கர்மங்களுக்கு ஏற்றபடியே நாம் அவனை நடத்தவேண்டும்” என்று எண்ணும் ஸர்வேச்வரனுடைய சுதந்திரத்தாலும், ஸர்வேச்வரனுடைய கருணைக்கு இலக்காகும் ஜீவாத்மாவுடைய, பாஞ்சராத்ரம் – ச்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா யஸ்தா முல்லங்க்ய வர்த்ததே – வேதங்கள் மற்றும் மநு முதலான ஸ்ம்ருதிகளும் எனது ஆணைகளாகும்; அவற்றை மீறுபவன் எனது பக்தன் அல்லன் - என்பதற்கு ஏற்ப உள்ளதான ஸர்வேச்வரனுடைய ஆணைகளை மீறி நடக்கும் சுதந்திரத்தாலும் தடுக்க இயலாதபடி என்று பொருள். (இருகரையும்) – திருவாய்மொழி (5-1-1) – விதிவாய்க்கின்று காப்பாரார் - என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரன் மற்றும் ஜீவன் ஆகிய இருவருடைய சுதந்திரம் என்ற வடிவில் உள்ள இரண்டு கரைகளும் உடைந்து அழிந்துபோகும்படியாக, ஒரு அளவில்லாமல் மேன்மேலும் பெருகியபடி இருக்கும் என்று கருத்து.