Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 402)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

கர்மபலம்போலே க்ருபாபலமு மநுபவித்தே யறவேணும்.

இப்படி இவன் விமுகனான தசையிலும் ஸ்ருஷ்ட்யவதாராதிகளாலே யிவனுடைய வுஜ்ஜீவநத்துக் கவன் க்ருஷி பண்ணிப்போருகிறது தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையாலேயிறே; தாத்ருச க்ருபா பலமிவனுக்கு அவச்யாநுபாவ்யமென்னுமிடத்தை ஸத்ருஷ்டாந்தமாக வருளிச் செய்யாநின்றுகொண்டு, கீழ், (நிர்ப்பரனா யிருக்கு மித்தனை) என்றவத்தை ஸ்திரீகரிக்கிறார் மேல் (கர்மபலம் போலே) என்று தொடங்கி.

இவ்விதம் இந்த ஜீவன் தன்னை வேண்டாத நிலையிலும், ஸ்ருஷ்டி மற்றும் அவதாரங்கள் முதலானவற்றைச் செய்து, அந்த ஜீவன் கரையேறும் பொருட்டு ஸர்வேச்வரன் அரும்பாடுபடுவது என்பது அவனுடைய காரணம் பற்றி வருதல் அல்லாத க்ருபையால் அல்லவோ? இப்படியாக உள்ள அந்தக் கருணையின் பலனை ஜீவன் அவசியம் அனுபவிக்கவேண்டும் என்பதை ஓர் உதாரணத்தால் அருளிச்செய்து, சூர்ணை 398ல் – நிர்ப்பரனாய் – என்று உரைத்ததை இந்தச் சூர்ணை மூலம் உறுதி செய்கிறார்.

– அதாவது, தான் செய்த புண்யபாபரூப கர்மபலம், “அவச்ய மநுபோக்தவ்யம்” என்கிறபடியே அநுபவித்தேயறவேண்டுமோபாதி, நித்யஸம்ஸார ஹேதுவான கர்மத்தைத் தள்ளி நித்யஸூரிகளோடு ஸமாந போக பாகியாக்குகைக்கு ஹேதுவான அவனுடைய க்ருபாபலமும் இவனுக்கு இச்சையில்லையேயாகிலும் அவச்ய மநுபவித்தே விடவேணு மென்கை.

– ஒருவன் செய்த புண்யபாவ ரூபங்களில் உள்ள கர்மபலன்களை, அவச்ய மநுபோக்தவ்யம் – கர்மபலன்களை நூறு கோடி கல்பகாலங்கள் கழிந்தாலும் அனுபவித்தே தீர்க்கவேண்டும் – என்பதற்கு ஏற்ப, அனுபவித்தே தீரவேண்டும். இது போன்று இந்த ஜீவன் ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ளதற்குக் காரணமான கர்மங்களை நீக்கி, நித்யஸூரிகளுக்கு ஒத்த நிலையை அடையவைப்பதற்கு ஸர்வேச்வரனுடைய கருணை என்பது காரணமாக உள்ளது. அத்தகைய கருணையை அனுபவிக்க ஜீவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், கண்டிப்பாக அனுபவித்தே தீரவேண்டும் என்று கருத்து.