Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 400)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரைவளைவாரைப் போலே வ்யாப்தியும்.

அதுக்கு த்ருஷ்டாந்தம் (ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போலே) என்று.

கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயத்தை ஓர் உவமை மூலமாக விளக்கி அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவனைத் தப்பாமல் பிடிக்க வேணுமென்னு மபிநிவேசத்தாலே அவ்வூரைச் சேர வளையுமாப்போலேயாய்த்து ஓராத்மாவை யகப்படுத்திக் கொள்ளுகைக்காக ஸகல சேதநாசேதநங்களிலும் வ்யாபித்து நிற்கும்படி; ஆகையால், வ்யாப்தியும் ஸ்வார்த்தமாகவென்றிறே ஜ்ஞாநாதிகரநுஸந்திப்ப தென்கிறார். (வ்யாப்தியும்) என்றது, ஸர்வஸத்தா ஹேதுவானவதுவு முட்பட வென்றபடி.

– ஒருவனைப் பிடிக்க நினைக்கும் ஒருவன், அவன் தப்பிச் சென்று விடாமல் பிடிக்கவேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, அவன் ஒளிந்திருக்கும் ஊர் முழுவதையும் சுற்றி வளைத்துக்கொள்வது போன்று, ஓர் ஆத்மாவைக் கைப்பற்றவேண்டும் என்று எண்ணும் ஸர்வேச்வரன் இங்கு உள்ள அனைத்து சேதன அசேதனங்களிலும் வியாபித்து நிற்கிறான் என்று கருத்து. ஆக, ஸர்வேச்வரன் எங்கும் பரவி நிற்பது என்பது தங்களைப் பிடிப்பதற்காக என்றல்லவோ அறிவு மிகுந்தவர்கள் எண்ணியிருப்பார்கள். (வ்யாப்தியும்) - இங்கு வ்யாப்தி, அதாவது அனைத்து இடங்களிலும் பரந்திருத்தல் என்பது அனைத்து உயிர்களின் இருப்பையும் நிலைநிறுத்தச் செய்வதான நிறைவு என்பதையும் சேர்த்தே ஆகும்.