Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 399)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
“எதிர் சூழல் புக்கு”.
(விமுகனான தசையிலுங்கூட உஜ்ஜீவிக்கைக்கு க்ருஷி பண்ணின வீச்வரனை யநுஸந்தித்தால்) என்று தாம் கீழருளிச்செய்த வர்த்தத்தி லாப்திக்குடலாக ஜ்ஞாநாதிகருடைய அநுஸந்தாந விசேஷத்தை யருளிச்செய்கிறார் (எதிர் சூழல்புக்கு) என்று.
– கடந்த சூர்ணையில் “ஜீவாத்மா தன்னை வேண்டாத நிலையில் உள்ளபோதிலும் அவனைக் கரையேற்ற முயலும் ஸர்வேச்வரனை எண்ணும்போது” என்று தாம் அருளிச்செய்த கருத்தானது அனைவராலும் ஏற்றத்தக்கதே என்று உணர்த்தும் விதமாக, அறிவில் மிகவும் உயர்ந்தவரான நம்மாழ்வாரின் உயர்ந்த அனுஸந்தானத்தை இங்கு அருளிச்செய்கிறார்.
“எதிர்சூழல்புக்கு” என்றது, எனக்குத் தப்பவொண்ணாதபடி பார்த்தவிட மெங்கும் தானே யாம்படியான வ்யாப்தியிலே உள்புக்கென்றபடி. “எதிர் சூழல்” என்கிறது, அவதாரபரமாக மற்றுள்ளாராலே வ்யாக்க்யாதமாய்த்தாகிலும், இப்போது இவரிவ் விடத்தில் வ்யாப்திபரமாக வருளிச்செய்கிறார். அநேக யோஜநைக ளுண்டாயிறே யிருப்பது.
– திருவாய்மொழி (2-7-6) – எதிர் சூழல் புக்கு - என்பதன் மூலம் “நான் எங்கும் தப்பிக்க இயலாதபடி பார்த்த இடம் எங்கும் தானே நிறைந்து நிற்கும்படியாக அனைத்து பொருள்களிலும் வியாபித்து, அவற்றின் உள்ளிலும் நின்று”, என்கிறார். ஆனால் இந்தத் திருவாய்மொழியின் வ்யாக்யானத்தில், “எதிர் சூழல்” என்பதன் மூலம் அவதாரங்கள் உணர்த்தப்பட்டன என்று பூர்வர்கள் கூறியுள்ளபோதிலும், இங்கு இவர், அதற்குக் கருத்தாக “எங்கும் பரவி நிற்பதை” கூறுகிறார். பலவிதங்களில் வ்யாக்யானம் செய்வது உண்டு அல்லவோ?