Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 398)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ஆகையால் இவன் விமுகனான தசையிலுங்கூட உஜ்ஜீவிக்கைக்கு க்ருஷி பண்ணின ஈச்வரனை யநுஸந்தித்தால் எப்போதும் நிர்ப்பரனாயே யிருக்கு மித்தனை.

– ஆக, கீழ் (பகவத் குணாநுஸந்தாந மபயஹேது) என்ற ப்ரதிஜ்ஞைக்கு உபபாதகமாக, (த்ரிபாத் விபூதியிலே) என்று தொடங்கி இவ்வளவும், ஈச்வரன் இவ்வாத்மோஜ் ஜீவநார்த்தமாக விமுகதசையே பிடித்து க்ருஷி பண்ணிப் போரும்படியை விஸ்தரேண அருளிசெய்தார்; அது தன்னை நிகமிக்கிறார் (ஆகையால்) என்று தொடங்கி.

ஆக சூர்ணை 366ல் – பகவத் குணாநுஸந்தாந மபயஹேது - என்றுள்ள கருத்துக்கு விளக்கமாக, சூர்ணை 381ல் – த்ரிபாத் விபூதியிலே - என்பது தொடங்கி, கடந்த சூர்ணை முடிய, ஸர்வேச்வரன், இந்த ஜீவாத்மா கரையேறும் பொருட்டு, ஜீவாத்மா தனனை வேண்டாத நிலையில் உள்ளபோதிலும், விடாமல் அவனைக் கைக்கொள்ள முயல்வதை விரிவாக அருளிச்செய்தார். இப்போது அந்தக் கருத்தை நிறைவு செய்கிறார்.

– அதாவது, ஈச்வர னிவ்வாத்மோஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணும் கட்டளை யிதுவாகையாலே, இப்படி யிச்சேதநன் பக்கல் விமுகனான அவஸ்தையிலுமுட்பட இவனுஜ்ஜீவிக்கைக்கு க்ருஷி பண்ணிப் போந்த குணாதிகனான அவனை அநுஸந்தித்தால், ஏவம்பூத னானவவ னிவ்வவஸ்தாபந்தராக்கி நம்மை கர்மாநுகுணமாக ஸம்ஸரிக்க விடானென்று தத்குண விச்வாஸத்தாலே ஸர்வகாலமும் நிர்ப்பரனாயே யிருக்குமித்தனை, பயப்ரஸங்கமில்லை யென்றபடி.

ஸர்வேச்வரன் இந்த ஜீவாத்மா கரையேறுவதற்காக செய்யும் முயற்சி இதுவாக உள்ளதால், இந்த ஜீவன் தன்னை எதற்கும் வேண்டாத நிலையில் உள்ளபோதிலும், இந்த ஜீவனைக் கரையேற்றும் விதமாகப் பல முயற்சிகள் செய்யும் ஸர்வேச்வரனை எண்ணும்போது – “இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் நம்மை, இப்படிப்பட்ட தாழ்ந்த நிலைகளில் தள்ளி, நமது கர்மங்களுக்கு ஏற்ப நம்மை ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்க விடமாட்டான்”, என்று அவனுடைய குணத்தில் மஹாவிச்வாஸம் கொள்ளவேண்டும். அதனால் எந்த ஒரு காலத்திலும் கவலை என்பது இல்லாமல் இருக்கவேண்டும். ஆகவே அச்சம் கொள்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கருத்து.