Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 397)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

இவ்வர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் பரஸ்பர விருத்தம் போலே தோற்றுமவற்றில் சொல்லுகிற பரிஹாரமும், மற்றுமுண்டான வக்தவ்யங்களும் விஸ்தர பயத்தாலே சொல்லுகிறிலோம்.

இனி, இவ்வர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் அந்யோந்ய விருத்தம்போலே தோற்றுமவற்றுக்குப் பரிஹாரமும், இவ்வர்த்த ஸ்தாபகமாக மற்றுஞ் சொல்லவேண்டும் ப்ரமாண தர்க்கங்களும் இவ்விதத்தில் தாமருளிச் செய்யாமைக்கு ஹேது இன்னதென்கிறார் (இவ்வர்த்த விஷயமாக) என்று தொடங்கி.

அடுத்து இதுவரை கூறப்பட்ட பொருள் விஷயமாக (அதாவது எந்தவிதமான காரணமும் இன்றி உண்டாகும் ஸர்வேச்ரனின் கருணை) ஆழ்வார்களின் பாசுரங்களில் சில, ஒன்றுக்கொன்று முரண்படுவதாகத் தோன்றுவதைக் காண்பித்து அவற்றுக்குப் பரிஹாரமும் உரைக்கிறார். மேலும் இந்தக் கருத்தை நிலைநிறுத்தவல்லதாக உள்ள ப்ரமாணங்களையும் தர்க்கவாதங்களையும் இங்கு தாம் உரைக்காமல் இருப்பதற்கான காரணத்தையும் அருளிச்செய்கிறார்.

– அதாவது, நிர்ஹேதுக விஷயீகாரமாகிற இவ்வர்த்த விஷயமாக, இவ்விஷயீகாரத்துக் கிலக்காய் மயர்வறமதிநல மருளப்பெற்ற ஆழ்வார்களுடைய பகவதங்கீகார ப்ரகாசகங்களான பாசுரங்களில், “வெறிதே யருள் செய்வர்”, “எந்நன்றி செய்தேனா வென்னெஞ்சில் திகழ்வதுவே” என்றும், “திருமாலிருஞ்சோலைமலை யென்றேனென்ன”, “மாதவனென்றதே கொண்டு” என்றும், “நல்லதோரறஞ் செய்துமிலேன்” என்றும், “நோற்றேன் பல்பிறவி” என்றும், “யானெத்தவத்தாற் காண்பன்கொ லின்று” என்றும், “யானே தவஞ்செய்தேன்” என்றும், இத்யாதிகளாலே பகவதங்கீகார ஹேதுக்களொன்றும் தங்கள் பக்கல் இல்லையென்பது உண்டானாற் போலே சொல்லுவதாகையாலே கருத்தறியாதவர்களுக்கு பரஸ்பரவிருத்தம் போலே ப்ரதிபாஸிக்குமென்கை. அவற்றில் சொல்லும் பரிஹாரங்களாவன, “மாதவன்”, “மலை” என்கிறவை வ்யாவ்ருத்த யுக்தி மாத்ரமாகையாலே அவற்றை ஆரோபித்து வந்து மேல் விழுகிற பகவத்க்ருபையே அங்கீகாரஹேது, அவை ஹேதுவன்றென்னுமிடம் ஸித்தம்; “நோற்றேன் பல்பிறவி” என்றது, எனக்குப் பல ஜந்மங்களுண்டாம்படியாக வந்து நான் ஸாதநாநுஷ்டாநம் பண்ணிற்றென்று ஸ்வநிகர்ஷம் சொன்னவித்தனை, அநேக ஜந்மம் உன்னைப் பெறுகைக்கு ஸாதநாநுஷ்டாநம் பண்ணினேனென்றபடி யன்று; “யானே தவஞ் செய்தேன்” என்றது, “இருந்தமிழ் நன்மாலை யிணையடிக்கே” சொல்லப் பெற்ற ப்ரீத்யதிசயத்தாலே என்னைப் போலே பாக்யம் பண்ணினாரில்லையென்று இப்பேறு பெற்ற தன்மை ச்லாகித்தமாத்ர மென்றிப்புடைகளிலே நிர்ஹேதுக வசந விரோதம் வராதபடி ஸஹேதுகம்போலேத் தோற்றுமவற்றுக்குச் சொல்லும் பரிஹாரங்கள். (மற்றுமுண்டான வக்தவ்யங்களாவன), மற்றுமிந் நிர்ஹேதுக ஸ்தாபநார்த்தமாகச் சொல்ல வேண்டுமவையான “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே”, “நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே, ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்நுவந்தி பராங்கதிம், நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந” இத்யாதி ப்ரமாணங்களும், ஏததநுக்ராஹக தர்க்கங்களும். (விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்) என்றது, இவை யெல்லாஞ் சொல்லப் பார்க்குமளவில் க்ரந்தப்பரப்பு வருமென் றஞ்சிச் சொல்லுகிறோமில்லை யென்றபடி.

எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் ஒருவனைக் கைக்கொள்ளும் விஷயத்தில், இவ்விதம் கைக்கொள்ளப்பட்டவர்களாகவும், மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்களாகவும் உள்ள ஆழ்வார்கள், ஸர்வேச்வரன் தங்களை ஏற்றுக் கொண்டதற்கான காரணம் ஏதும் தங்களிடம் இல்லை என்பது போன்று உரைப்பதால், இதன் ஆழ்பொருளை அறியாதவர்களுக்கு ஒன்றுடன் ஒன்று வாக்கியங்கள் முரண்படுவதாகத் தோன்றலாம். திருவாய்மொழி (8-7-8) - வெறிதே யருள் செய்வர் திருவாய்மொழி (10-6-8) - எந்நன்றி செய்தேனா வென்னெஞ்சில் திகழ்வதுவே திருவாய்மொழி (10-8-1) – திருமாலிருஞ்சோலைமலை யென்றேனென்ன திருவாய்மொழி (2-7-3) – மாதவனென்றதே கொண்டு பெரியதிருமொழி (1-9-4) - நல்லதோரறஞ் செய்துமிலேன் பெரியதிருமொழி (1-9-8) - நோற்றேன் பல்பிறவி இரண்டாம் திருவந்தாதி (86) - யானெத்தவத்தாற் காண்பன்கொ லின்று இரண்டம் திருவந்தாதி (74)- யானே தவஞ்செய்தேன் இந்தப் பாசுரங்களுக்கான சமாதானங்களை அடுத்து காண்போம். திருவாய்மொழி (2-7-3) – மாதவன், (10-8-1) – திருமாலிருஞ்சோலை - என்றும் கூறப்பட்டது என்னவென்றால் மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும்விதமாக உரைக்கப்பட்ட சொற்கள் என்பதால், அவற்றையே ஒரு காரணமாகக் கருதியபடி மேலே விழுந்து ஏற்றுக் கொள்ளும் ஸர்வேச்வரனுடைய “காரணம் இல்லாமல் வரும் கருணை” என்பதே அவன் ஏற்றுக்கொள்ளுகைக்குக் காரணம் ஆகும்; மற்ற ஏதும் காரணம் அல்ல. பெரியதிருமொழி (1-9-8) – நோற்றேன் பல்பிறவி - என்பதன் மூலம், “நான் எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ளாத காரணத்தால் எனக்கு பல பிறவிகள் உண்டாயின”, என்று அருளிச்செய்தார். இப்படியாகத் தனது தாழ்வினை உரைத்தார். இந்தப் பாசுரத்திற்கு, “எனது பல பிறவிகளில் நான் உன்னை அடைவதற்கான உபாயங்களைக் கைக்கொண்டபடியே இருந்தேன்” என்பது பொருள் அல்ல. இரண்டாம் திருவந்தாதி (74) - யானே தவஞ் செய்தேன், இரண்டாம் திருவந்தாதி (74) – இருந்தமிழ் நன்மாலை யிணையடிக்கே - என்பதால் கூறப்பட்டது என்னவென்றால், “எனக்குக் கிட்டிய இந்தப் பேறு காரணமாக என்னைப் போன்ற பாக்கியசாலிகள் வேறு யாரேனும் உண்டோ?”, என்று தான் பெற்ற பேறு காரணமாக தன்னைக் கொண்டாடிக் கொண்டார் என்பதே ஆகும். இது போன்றே உள்ள மற்ற பாசுரங்களிலும் “ஆழ்வார்களை எந்தவிதமான காரணமும் இல்லாமல் கைக்கொண்டான்” என்ற கருத்திற்கு விரோதம் ஏற்படாத விதத்தில், “ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கற்பித்துக் கைக்கொண்டான்” என்று சமாதானம் கொள்ளவேண்டும் என்கிறார். (மற்றுமுண்டான வக்தவ்யங்களாவன) – மேலும், ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி ஒருவனைக் கைக்கொள்கிறான் என்பதற்குக் கீழே உள்ளது போன்று பல ப்ரமாண வாக்கியங்கள் உண்டு. ஆனால் இது போன்ற பல ப்ரமாண வாக்கியங்கள் உண்டு: அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே ப்ராம்யமாணே ஸ்வ கர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே – இப்படியாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் தனது கர்மம் காரணமாகச் சுழன்றபடி துன்பம் அடைகின்ற ஜீவனைக் குறித்து மஹாவிஷ்ணுவிற்கு ஆழ்ந்த கருணை உண்டாகிறது. பாஞ்சராத்ரம் – நிர்ஹேதுக கடாக்ஷேண மதீயேந மஹாமதே, ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்நுவந்தி பராங்கதிம், நாஸௌ புருஷகாரேண நசாப்யந்யேந ஹேதுநா, கேவலம் ஸ்வேச்சயைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதாசந – எந்தவிதமான காரணமும் இன்றி ஏற்படும் எனது கடாக்ஷத்தாலும், அதன் காரணமாக ஆசார்யன் கைக்கொள்வதாலும் மிகவும் உயர்ந்த கதியை அடைகிறார்கள். நான் ஒருவனுடைய புருஷகாரத்தாலோ அல்லது வேறு எந்தவிதமான காரணத்தாலோ அருள் செய்வதில்லை; எனது விருப்பம் காரணமாக மட்டுமே நான் ஒருவனைக் கடாக்ஷிக்கிறேன். (விஸ்தரபயத்தாலே சொல்லுகிறிலோம்) – இது போன்று உள்ள பல ப்ரமாண வாக்கியங்களைக் கூறத் தொடங்கினால் இந்த நூல் மிகவும் பெரிதாகிவிடும் என்பதால், விரிவுக்கு அஞ்சிக் கூறவில்லை.