Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 396)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

சாஸ்த்ரமும் விதியாதே நாமுமறியாதே யிருக்கிற இத்தை ஸுக்ருதமென்று நாம் பேரிடுகிறபடி யென்னென்னில், நாமன்று, ஈச்வரனென்று கேட்டிருக்கையாயிருக்கும்.

சாஸ்த்ராவிஹிதமுமாய் சேதநாவிதிதமுமான இந்த யாத்ருச்சிகாதிகளுக்கு ஸுக்ருதமென்று பேரிட்டா ரின்னாரென்னுமிடத்தை சங்காபரிஹாரரூபேண அருளிச் செய்கிறார் (சாஸ்த்ரமும்) என்று தொடங்கி.

– சாஸ்த்ரங்களில் விதிக்கப்படாமல் உள்ளதும், ஜீவனுக்கு அறியாதவிதத்தில் ஏற்படுவதும் ஆகிய “தற்செயலாக விளைந்தது“ என்பதற்கு புண்ணியம் என்று யார் பெயரிட்டார்கள் என்று கேள்விக்கு இந்தச் சூர்ணையில் விடை அளிக்கிறார்.

– அதாவது, “இதம் குர்யாத்” என்று சாஸ்த்ர விஹிதமுமாய் கர்த்ருபூதரான சேதநராலே புத்திபூர்வேண அநுஷ்டிதமுமான தொன்றையிறே ஸுக்ருதமென்பது; அப்படியே, இத்தைச் செய்வானென்று சாஸ்த்ரமும் விதியாதே இன்ன ஸுக்ருதம் பண்ணினோமென்று தத்கர்த்தாக்களான நாமு மறியாதேயிருக்கிற விந்த யாத்ருச்சி காதியை ஸுக்ருதமென்று நாம் பேரிடுகிறபடி எங்ஙனே என்னில்? “இதுக்கு ஸுக்ருத மென்று பேரிடுகிறோம் நாமன்று, ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வாராமைக்காக ஸர்வஜ்ஞனான வீச்வரன் ஸுக்ருதமென்று பேரிட்டு வைத்தான்” என்று தத்வதர்சிகளான ஆசார்யர்கள் அருளிச்செய்யக் கேட்டிருக்கையாயிருக்கு மென்கை. ஆக, கீழ் “வெறிதே யருள்செய்வர்” என்று மயர்வற மதிநல மருளப் பெற்றவர்களில் தலைவரான நம்மாழ்வார் நிர்ஹேதுக விஷயீகாரமாகிற இவ்வர்த்ததை விசதமாக அருளிச்செய்தபடியை தர்சிப்பித்து, அதின் மேல்வந்த சங்காபரிஹாரங்களும் பண்ணி யருளினாராய்த்து.

இதம் குர்யாத் – இதனைச் செய் - என்று விதிக்கப்பட்டதும், செயல்களைச் செய்பவர்களான ஜீவன்களால் உணர்ந்து செய்யப்படுவதும் ஆகிய செயல்களை அல்லவோ புண்ணியச் செயல்கள் என்று கூறுவர்? இப்படியாக உள்ளபோது, “இதனைச் செய்வானாக” என்று சாஸ்த்ரங்கள் விதிக்காமல் உள்ளபோதிலும், “இத்தகைய புண்ணியம் செய்தோம்” என்று அறியாதவிதத்தில் அதனைச் செய்த நாம் உள்ள போதிலும், அந்தத் தற்செயலாக நடைபெற்றவைகளுக்கு “புண்ணியம்” என்று யார் பெயர் வைத்தார்கள்? இதற்கு விடை அளிக்கிறார். இந்தச் செயல்களுக்குப் புண்ணியம் என்று பெயரிட்டது நம் போன்றவர்கள் அல்லர். “அனைவரும் மோக்ஷம் போகும் தகுதி உள்ளவர்” என்று நிலை ஏற்படாமல் இருப்பதற்காக அனைத்தும் அறிந்தவனாகிய ஸர்வேச்வரன் “புண்ணியம்” என்று பெயர் வைத்தான். இப்படியாக உள்ளதுஉள்ளபடி அறிவிக்கவல்ல ஆசார்யர்கள் அருளிச்செய்ய நாம் கேட்டுள்ளோம் என்கிறார். – இப்படியாகத் திருவாய்மொழியில் (8-7-8) - வெறிதே யருள்செய்வர் – என்று மயர்வற அருளப்பெற்ற ஆழ்வார்களுடைய தலைவரான நம்மாழ்வார், எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் அருள்வது குறித்து, விரிவாக உரைத்ததைக் காண்பித்து, அதனைத் தொடர்ந்து எழுந்த சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் அருளிச்செய்தார்.